சேனா பவனை உரிமை கோர மாட்டோம்- ஏக்நாத் ஷிண்டே தகவல்
சேனா பவன் உள்பட உத்தவ் தரப்புக்கு சொந்தமான கட்சி அலுவலங்களை உரிமை கோர மாட்டோம் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
மும்பை,
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. அவர்களுக்கு சிவசேனாவின் பெயர், சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்கரே அணி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையிடு செய்து உள்ளது.
கட்சி ஏக்நாத் ஷிண்டே வசம் சென்றதை அடுத்து அவர்கள் சிவசேனா தலைமையகமான தாதர் சேனா பவன் மற்றும் கட்சி அலுவலகங்களை (சாக்கா) உரிமை கோர வாய்ப்பு இருந்தது. அதே நேரத்தில் தாதர் சேனா பவன், அறக்கட்டளை பெயரில் இருப்பதால் அதை ஷிண்டே தரப்பு உரிமைகோர முடியாது என உத்தவ் தாக்கரே அணி தெரிவித்தது.
இந்தநிலையில் சேனா பவன் உள்பட உத்தவ் தரப்பு சொத்துகளை உரிமை கோர போவதில்லை என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், " நாங்கள் பால்தாக்கரே கொள்கைகளின் வாரிசு. வேறு எதற்கும் எங்களுக்கு ஆசை இல்லை. சொத்துக்களில் ஆசை உள்ளவர்கள் 2019-ம் ஆண்டு தவறான முடிவு எடுத்தார்கள். தோ்தல் ஆணையம் விதிகளின்படி சிவசேனா பெயர், சின்னம் மற்றும் சட்டசபை அலுவலக விவகாரத்தில் முடிவு எடுத்து உள்ளது. சொத்துக்களை பொறுத்தவரை எங்களுக்கு எந்த ஆசையும் இல்லை. " என்றார்.