நாட்டில் பயங்கரவாத சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி-போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேச்சு


நாட்டில் பயங்கரவாத சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி-போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேச்சு
x

மத்தியில் பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பயங்கரவாத சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

கோலார் தங்கவயல்:

மந்திரி அரக ஞானேந்திரா

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் போலீஸ் மாவட்ட எல்லையில் உரிகம் பகுதியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் ரூ.3 கோடி செலவில் மாவட்ட ஆயுதப்படை நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ஆயுதப்படை நிர்வாக அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். இதையடுத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து நடந்த நிகழ்ச்சியில் மந்திரி அரக ஞானேந்திரா பேசியதாவது:-

நாட்டை பிளவுபடுத்தினர்

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு போலீஸ் துறையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருந்தன. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் அந்த காலி

பணியிடங்களை நிரப்பியதுடன் மாநிலம் முழுவதும் புதிதாக 400-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது போலீஸ் துறையில் 12 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிரிவினை வாதத்தை உருவாக்கும் வகையில் நாட்டை பிளவுப்படுத்த கூடாது என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால் காங்கிரசார் நாட்டை பிளவுபடுத்தினர். இதனால் பிரித்து கொடுக்கப்பட்ட நாட்டில் இருந்து இந்தியாவுக்கு பயங்கரவாதிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்கள். பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாட்டில் எங்கு பார்த்தாலும் பயங்கரவாத சம்பவங்கள் நடந்தன.

பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கும்...

ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு பயங்கரவாத சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். தற்போது நாடு முழுவதும் பயங்கரவாத சம்பவங்கள் இன்றி அமைதி ஏற்பட்டுள்ளது.

இங்கு தங்க சுரங்கம் இயங்கியதால் இந்த நகரம் உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் தங்கவயலில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வேறு பகுதிக்கு மாற்றப்பட இருந்தது. ஆனால் ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ.வின் முயற்சியால், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மாற்றும் முடிவு கைவிடப்பட்டது.

தொழில் பூங்கா

தென்இந்தியாவில் குற்றச்சம்பவங்களை கண்டறிந்து குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வசதியாக பெங்களூருவியில் தடய அறிவியல் ஆய்வு பல்கலைக்கழகம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கி உள்ளது. கோலார் தங்கவயலில் தங்க சுரங்கம் மூடிய பின்னர், இங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் தினமும் ரெயிலில் பெங்களூருவுக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள்.

இதனால் அவர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு தங்கவயலில் தொழில் பூங்கா அமைக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தங்கவயலில் கன்னடம், தமிழ், தெலுங்கு பேசும் மக்கள் சரிசமமாக உள்ளனர். அவர்களுக்கு பா.ஜனதா அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story