'சமையல் கியாஸ் விலை உயர்வு கவலை அளிக்கிறது'-இல்லத்தரசிகள் வேதனை


சமையல் கியாஸ் விலை உயர்வு கவலை அளிக்கிறது-இல்லத்தரசிகள் வேதனை
x

‘சமையல் கியாஸ் விலை உயர்வு கவலை அளிக்கிறது’ என்று இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

கவலை அளிக்கிறது

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நேற்று மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் கர்நாடகத்தில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,050.50 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு பெண்கள் மத்தியல் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு பெண்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

ராஜாஜிநகரை சேர்ந்த வாசுகி என்ற இல்லத்தரசி கூறுகையில், 'சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் உயர்த்தி இருந்தனர். தற்போது ரூ.50 உயர்த்தி உள்ளனர். இது எங்களை

போன்ற சாமானிய குடும்ப பெண்களுக்கு பெரிய பேரிடியாக அமைந்து உள்ளது. மாத பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தி வரும் எனக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு கவலை அளிக்கிறது' என்றார்.மஞ்சுளா என்ற பெண் கூறுகையில், 'மாதந்தோறும் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி கொண்டே சென்றால் நடுத்தர குடும்ப பெண்கள் எப்படி குடும்பம் நடத்துவது?. ஓட்டல்களில் சாப்பிட்டால் ஜி.எஸ்.டி. என்ற பெயரில் பணத்தை பறிக்கிறார்கள். இதனால் வீட்டில் சமைத்துசாப்பிடலாம் என்று நினைத்தால், கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்துகின்றனர். இந்த நிலை நீடித்தால் குடும்பம் எப்படி நடத்துவது என்று தெரியவில்லை. கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என்று கூறினார்.

ஏற்றுக்கொள்ள முடியாது

அம்மு என்ற பெண் கூறுகையில், 'சமையல் கியாஸ் விலை உயர்வு எங்களை போன்ற நடுத்தர குடும்ப பெண்களை கஷ்டத்தில் ஆழ்த்தி உள்ளது. மாதந்தோறும் ரூ.50, ரூ.100 உயர்த்துவது சரியில்ல. சிலிண்டரை எடுத்து வரும் ஊழியர்களும் ரூ.50 வரை கேட்கின்றனர். சிலிண்டர் உயர்வால் விறகு அடுப்பை பயன்படுத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்' என்றார்.

சுஷ்மா என்ற பெண் கூறும்போது, 'அத்தியாவசிய பொருட்கள் விலையை அரசு உயர்த்தி கொண்டே செல்கிறது. இது எங்களை போன்ற பெண்களுக்கு பெரும் பேரிடியாக அமைந்து உள்ளது. நாங்கள் மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்த வேண்டும் என்று அரசு நினைக்கிறதா?. தொடர்ந்து விலை ஏற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார்.


Next Story