மின்சார வாகன உற்பத்தி துறையில் ரூ.31 ஆயிரம் கோடி முதலீடுகள் வரும்; கர்நாடக அரசு தகவல்


மின்சார வாகன உற்பத்தி துறையில் ரூ.31 ஆயிரம் கோடி முதலீடுகள் வரும்; கர்நாடக அரசு தகவல்
x

மின்சார வாகன உற்பத்தி துறையில் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் ரூ.31 ஆயிரம் கோடி முதலீடுகள் வரும் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது.

பெங்களூரு:

மின்சார வாகன கொள்கை

கர்நாடக அரசின் மின்சார வாகன விழிப்புணவு இணையதள பக்க தொடக்க நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் கலந்த கொண்டு அந்த இணையதள பக்கத்தை தொடங்கி வைத்து விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட்டார். இந்த இணையதள பக்கம், நிதி ஆயோக், மாநில அரசு மற்றும் இங்கிலாந்து அரசு ஆகியற்றின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின்சார வாகனங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இணையதள பக்கம் மற்றும் விழிப்புணர்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் மின்சார வாகனங்கள் குறித்த அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளன. மாநில அரசின் மின்சார வாகன கொள்கை, மின்சார வாகனங்கள் குறித்து நடைபெறும் நிகழ்வுகள், மின்சார வாகன பயன்பாடு குறித்த தகவல்கள் கிடைக்கும்.

55 ஆயிரம் பேருக்கு வேலை

இந்த மின்சார வாகனங்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள், சார்ஜிங் நிலையங்கள் குறித்த தகவல்களும் அந்த பக்கத்தில் கிடைக்கிறது. கர்நாடகத்தில் மின்சார வாகனங்கள் உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. வருகிற 2030-ம் ஆண்டுக்குள் ரூ.31 ஆயிரம் கோடி முதலீடுகள் வரும். இதன் மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story