கர்நாடகத்தில் வனப்பகுதியை விரிவுப்படுத்த நடவடிக்கை- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு


கர்நாடகத்தில் வனப்பகுதியை விரிவுப்படுத்த நடவடிக்கை- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
x

கர்நாடகத்தில் வனப்பகுதியை விரிவுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

மரப்பூங்கா திறப்பு

பெங்களூரு தாசனப்புரா அருகே மாச்சோஹள்ளியில் வனத்துறையினர் சார்பில் மரப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு மரப்பூங்காவை திறந்து வைத்தார்.

பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

பெங்களூருவை சுற்றி வனப்பகுதி

பெங்களூரு நகரம் எதிர்பார்ப்பையும் மீறி வேகமாக வளர்ந்து வருகிறது. நகரில் உள்ள ஒவ்வொரு லே-அவுட்களிலும் பூங்காக்கள் உள்ளன. செல்லும் இடங்களில் எல்லாம் மரங்கள் வளர்ந்து நிற்கிறது. இதன் காரணமாக தான் பெங்களூருவை பூங்கா நகரம் என்று அனைவரும் அழைக்கிறார்கள். தற்போது பெங்களூருவில் மக்கள் தொகை அதிகரித்து விட்டது. தொழில் நிறுவனங்களும் அதிகமாகி விட்டது. இதனால் தான் பெங்களூருவை சுற்றி வனப்பகுதியை உருவாக்கும் திட்டத்தை வனத்துறை சார்பில் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வனத்துறையினரும் இந்த திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வனப்பகுதியை விரிவாக்கும் திட்டத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படும். ஏனெனில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும். மரங்களால் தான் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. மரங்கள் அதிகமாக வளர்ப்பதன் மூலம் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, மழை பொழியும்.

100 ஏக்கரில் வனப்பகுதி

கடந்த ஆண்டு வெப்ப நிலை 1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக தான் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது. இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பசுமைக்காக ரூ.100 கோடி ஒதுக்கி இருந்தேன். கர்நாடகத்தில் வனப்பகுதியை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நாம் ஒவ்வொருவரும் 5 மரங்களை வளர்க்க வேண்டும்.

நமது நாட்டில் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்து, அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தூய்மை இந்தியா திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. அதுபோல், பசுமை பாரத திட்டத்தையும் தொடங்க வேண்டும். பசுமை பாரத திட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, மக்களிடையே வரவேற்பு பெற வேண்டும்.

கர்நாடகத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் 100 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி அமைய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன்மூலம் தற்போது 21 சதவீதமாக இருக்கும் வனப்பகுதியை 30 சதவீதமாக மாற்ற முடியும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story