யோகாவின் பலத்தை உலகம் உணர்ந்தது-முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேச்சு


யோகாவின் பலத்தை உலகம் உணர்ந்தது-முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேச்சு
x

கொரோனா சந்தர்ப்பத்தின் போது தான் யோகாவின் பலத்தை உலகம் உணர்ந்தது என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

உலகம் பார்த்து வியந்தது

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களாவில் தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா இயற்கை மருத்துவம் மற்றும் அறிவியல் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆரோக்கிய மையத்தை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று திறந்து வைத்து பேசியதாவது:-

இந்திய மக்கள் தொகையை கணக்கிடுகையில், அமெரிக்காவின் மக்கள் தொகை நான்கில் ஒரு பங்கு தான். கொரோனா சந்தர்ப்பத்தில் நம் நாட்டில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையை விட, அமெரிக்காவில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகமாகும். கொரோனா தொற்று மனித இனத்திற்கே பெரும் சவாலாக விளங்கியது. இந்த கொரோனா தொற்றில் இருந்து இந்தியா மீண்டு வந்ததை, இந்த உலகமே பார்த்து வியந்தது.

யோகா பலத்தை உணர்ந்தது

அதற்கு முக்கிய காரணம் யோகா மற்றும் நமது நாட்டின் பாரம்பரியமிக்க மருத்துவம் தான். கொரோனா சந்தர்ப்பத்தின் போது தான் உலகமே யோகாவின் பலத்தை உணர்ந்தது. யோகா மற்றும் ஆயுஷ் மருத்துவத்தை உலகமே ஏற்றுக் கொண்டு இருந்தது.

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றால், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, ஆயுர்வேதம், சித்த மருத்துவ முறையை நோக்கி மக்கள் செல்ல வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி ஜூன் மாதம் 21-ந் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார்.

175 நாடுகளில் யோகா

அதன்பிறகு, இந்தியாவில் மட்டும் இல்லை, 175 நாடுகளில் உள்ளவர்கள், நமது பாரம்பரியமான யோகாவுடன் இணைந்திருக்கிறார்கள். இது யோகாவின் வலிமையை இந்த உலகிற்கு எடுத்து காட்டுகிறது. சர்வதேச யோகா தினத்தை கொண்டாட பிரதமர் மோடி மைசூருவுக்கு வந்திருந்தது சிறப்பு வாய்ந்ததாகும். யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆரோக்கியமான உடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், பயன் உள்ளதாகவும் இருக்கும்.

கர்நாடகம் எப்போதும் பிரச்சினையை தீர்க்கும் மாநிலமாகவே இருந்துள்ளது. வனவாசத்தின் போது ராமருக்கு அனுமன் உதவினார். இது ராமராஜ்ஜியம் உருவாக அடித்தளமாக இருந்தது. பெங்களூரு தகவல் தொழில் நுட்பத்தின் தலைநகராக இருந்து வருகிறது. தற்போது உலகின் பாரம்பரிய மருத்துவத்தின் மையமாகவும் வளர்ந்து வருகிறது. இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற, பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கை அடைய மக்கள் தங்கள் பணியில் அதிக நிபுணத்துவத்தை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story