ஜனாதிபதி தேர்தலில் தேவேகவுடா போட்டியா?; முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பதில்


ஜனாதிபதி தேர்தலில் தேவேகவுடா போட்டியா?;  முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பதில்
x

ஜனாதிபதி தேர்தலில் தேவேகவுடா போட்டியா? என்ற கேள்விக்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பதில் கூறியுள்ளார்.

பெங்களூரு:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூலை) நிறைவு பெறுகிறது. இதையடுத்து, ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா சார்பில் நிறுத்தப்படும் ஜனாதிபதி வேட்பாளரை தோற்கடிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பல மாநில கட்சிகள் ஒரு அணியில் திரண்டு உள்ளன. மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் பிரதமர்

தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பங்கேற்றனர். எதிர்க்கட்சி சார்பில் சரத்பவாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் மறுத்து விட்டார். இதையடுத்து, ஜனாதிபதி வேட்பாளராக தேவேகவுடா நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினாா்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

ஜனாதிபதி தேர்தலில் தேவேகவுடா போட்டியிடவில்லை. ஜனாதிபதி தேர்தலில் தேவேகவுடா போட்டியிடுவது பற்றி எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. தேவேகவுடா பெயர் முன்மொழியப்படவில்லை. மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு, எங்களது குடும்பத்தின் மீது தனி மாியாதை உள்ளது. அதனால் அவர் ஏற்பாடு செய்திருந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றோம். அந்த கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்று எந்த பெயரும் இறுதி செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story