பலாத்கார வழக்கில் வாலிபருக்கு ஜாமீன்


பலாத்கார வழக்கில் வாலிபருக்கு ஜாமீன்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:46 PM GMT)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு ஜாமீன் வழங்கி மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு ஏற்படும் பின்விளைவுகளை புரிந்து இருந்ததாக ஐகோர்ட்டு கருத்து கூறியுள்ளது.

மும்பை,

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு ஜாமீன் வழங்கி மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு ஏற்படும் பின்விளைவுகளை புரிந்து இருந்ததாக ஐகோர்ட்டு கருத்து கூறியுள்ளது.

போக்சோ வழக்கு

மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த 15 சிறுமி ஒருவர் தனது 22 வயது காதலனுடன் வாட்ஸ்-அப்பில் தொடர்பில் இருந்ததை குடும்பத்தினர் கண்டனர். இதன்மூலம் அவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்தது. இதையடுத்து குடும்பத்தினர் விசாரித்தபோது அந்த வாலிபர் மூலம் சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே வாலிபரின் ஜாமீன் மனு மீதான வழக்கு நேற்று ஐகோர்ட்டில் நீதிபதி பாரதி டாங்ரே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி வாலிபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர் தனது உத்தரவில் கூறியதாவது:-

பின்விளைவுகளை தெரிந்து இருந்தார்

சமூக வலைதளம் மூலம் காதலனுடனான தொடர்பை பெற்றோர் கண்டறியும் வரை பாதிக்கப்பட்ட சிறுமி ஒப்புக்கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமி, மைனராக இருந்தாலும் அவர் தான் செய்யும் செயல்களின் பின்விளைவுகளை புரிந்துகொள்ளும் திறன் கொண்டவராக இருந்தார். அவர் தானாக முன்வந்து அவரின் அத்தை வீட்டிற்கு சென்றது விசாரணையில் தெரிகிறது.

அதுமட்டும் இன்றி மனுதாரரை அவர் காதலிப்பதாக ஒப்புகொண்டுள்ளார். ஆனால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?, குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக அவளை வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டாரா? என்பதை முழுமையான விசாரணையின் மூலமாக தான் தீர்மானிக்க முடியும்.

குற்றம் சாட்டப்பட்ட மனுதாரரும் ஒரு வாலிபர், அவரும் மோகத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது.

குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் விசாரணைக்கு அதிக நேரம் பிடிக்கும். எனவே வாலிபர் சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனவே அவரை ஜாமீனில் கோர்ட்டு விடுவிக்கிறது.

இவ்வாறு நீதிபதி கூறினார்.


Next Story