அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பறிப்பு- 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது


அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பறிப்பு- 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 Dec 2022 6:45 PM GMT (Updated: 1 Dec 2022 6:46 PM GMT)

அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த கும்பலை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த இவர்கள் மோசடிக்காக 2 லட்சம் இ-மெயில் ஐ.டி.கள், 1 லட்சம் மொபைல் போன் நம்பர்களை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

மும்பை,

அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த கும்பலை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த இவர்கள் மோசடிக்காக 2 லட்சம் இ-மெயில் ஐ.டி.கள், 1 லட்சம் மொபைல் போன் நம்பர்களை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசில் புகார்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் தன்னிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக முமபையை சேர்ந்த ஒருவர் பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோசடி கும்பல் புனேயில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீசார் புனே சென்று அங்கு பதுங்கி இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேரை பிடித்து கைது செய்தனர்.

ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்கள்

இவர்கள் ஆப்பிரிக்கா நாடுகளான ஜாம்பியா, உகாண்டா, நமீபியா மற்றும் கானாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனால் அவர்களின் பாஸ்போர்ட்டை போலீசார் வாங்கி சோதனை போட்டதில் அவர்கள் மாணவர் விசாவில் இந்தியா வந்ததும், இதில் 3 பேரின் விசா காலாவதியாகி விட்ட நிலையிலும் சட்டவிரோதமாக தங்கி இருந்ததும் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் 22 முதல் 32 வயதுடையவர்கள்.

1 லட்சம் மொபைல் போன்கள்

சோதனையில் 2 லட்சம் மின்னஞ்சல் ஐ.டி.கள், 1 லட்சத்து 4 ஆயிரம் செல்போன் நம்பர்கள் அவர்களிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை மோசடிக்காக பயன்படுத்தி உள்ளனர். மேலும் 13 செல்போன்கள், 4 மடிக்கணினிகள் மற்றும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த பாஸ்போர்ட்டுகள், 3 ரவுட்டர்கள், 17 காசோலைகள், 115 சிம்கார்டுகள், 40 போலி ரப்பர் ஸ்டாம்புகள் மற்றும் பல வங்கியை சேர்ந்த கணக்கு புத்தகங்கள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனை பயன்படுத்தி வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் கைவரிசை காட்டி உள்ளதாக போலீசார் கருதுகின்றனர். இதனை தொடர்ந்து போலீசார் 4 பேரை கைது செய்து இந்த கும்பலுடன் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story