முன்னாள் போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே என்னை சிறையில் தள்ள முயன்றார்- தேவேந்திர பட்னாவிஸ் பரபரப்பு பேச்சு


தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:16:47+05:30)

உத்தவ் தாக்கரே அரசின் உத்தரவின்படி முன்னாள் போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே என்னை சிறையில் தள்ள முயற்சி செய்தார் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை,

உத்தவ் தாக்கரே அரசின் உத்தரவின்படி முன்னாள் போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே என்னை சிறையில் தள்ள முயற்சி செய்தார் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

சஞ்சய் பாண்டே

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசின் போது மும்பை போலீஸ் கமிஷனராக பதவி வகித்தவர் சஞ்சய் பாண்டே. அந்த அரசு கவிழ்ந்த சில நாட்களில் சஞ்சய் பாண்டே கைது செய்யப்பட்டார். தேசிய பங்கு சந்தை ஊழியர்கள் ஒட்புகேட்பு வழக்கு தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.

இந்தநிலையில் முன்னாள் போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே மீது துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தி சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-

கைது செய்ய முயற்சி

மகா விகாஸ் அகாடி அரசின் இலக்கின் அடிப்படையில் அப்போதைய மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே என்னை கைது செய்து சிறையில் தள்ள முயன்றார். என் மீது ஏதாவது குற்ற வழக்குகளை பதிவு செய்யும்படி அந்த அரசு சஞ்சய் பாண்டேக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்த உண்மையை தற்போது நீங்கள் எந்த போலீஸ் அதிகாரியிடமும் கேட்கலாம். இதை பற்றி அவர்கள் சொல்வார்கள். ஆனால் நான் எந்த தவறும் செய்யாததால் அவர்களுக்கு எதுவும் உதவவில்லை. அவர்கள் தோல்வி அடைந்தார்கள்.

உத்தவ் பேசுவதை நிறுத்தினார்

உத்தவ் தாக்கரே மீது எனக்கு தனிப்பட்ட அளவில் எந்த விரோதமும் கிடையாது. 2019 தேர்தல் முடிந்த பிறகு அவர் எனது போன் அழைப்புகளுக்கு பதில் தெரிவிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டார். எங்களுடன் கூட்டணி ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை என்றால், அவர் என்னிடம் சொல்லி இருக்கலாம்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் 'வாஹினி'யை (உத்தவ் தாக்கரே மனைவி ராஷ்மி) சந்தித்தேன். அப்போது உத்தவ் தாக்கரேக்கு எனது அன்பை தெரிவிக்கும்படி அவரிடம் கூறினேன். இது மராட்டியத்தின் கலாசாரம். இதை நான் புறக்கணிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story