ஏக்நாத் ஷிண்டே முகாமில் இருந்து திரும்பி வந்தது எப்படி?- சிவசேனா எம்.எல்.ஏ. திடுக் தகவல்


ஏக்நாத் ஷிண்டே முகாமில் இருந்து திரும்பி வந்தது எப்படி?- சிவசேனா எம்.எல்.ஏ. திடுக் தகவல்
x

ஏக்நாத் ஷிண்டே முகாமில் இருந்து திரும்பி வந்தது எப்படி என்பது குறித்து கைலாஷ் பாட்டீல் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

ஏக்நாத் ஷிண்டே முகாமில் இருந்து திரும்பி வந்தது எப்படி என்பது குறித்து கைலாஷ் பாட்டீல் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

திரும்பிய எம்.எல்.ஏ.

மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து சிவசேனா கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது.

சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமை, கூட்டணி கட்சிகள் மீதான அதிருப்தி காரணமாக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாமில் முகாமிட்டு உள்ளார்.

இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே முகாமில் இருந்து திரும்பி வந்த உஸ்மனாபாத் எம்.எல்.ஏ. கைலாஷ் பாட்டீல் கூறியதாவது:-

காரில் அழைத்து சென்றனர்

கடந்த 20-ந் தேதி எம்.எல்.சி. தேர்தல் முடிந்த பிறகு, தானேயில் உள்ள ஏக்நாத் ஷிண்டே வீட்டுக்கு அழைக்கப்பட்டேன். சிலருடன் என்னை காரில் தானே மேயர் பங்களாவுக்கு அழைத்து சென்றனர். அங்கு இருந்து வேறு காரில் புறப்பட்டோம். எங்களுடன் ஏக்நாத் ஷிண்டே ஊழியர் ஒருவரும் இருந்தார். கார் மராட்டியம் - குஜராத் சோதனை சாவடி அருகே சென்ற போது தான், நான் வேறு எங்கோ அழைத்து செல்லப்படுவதை உணர்ந்தேன். சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.

அப்போது காரில் இருந்த ஏக்நாத் ஷிண்டே ஊழியர் கடுமையான சோதனை நடப்பதால் என்னை இறங்கி நடந்து வருமாறு கூறினார். இதை பயன்படுத்தி நான் காரில் இருந்து இறங்கி ரோட்டின் மறுபுறத்துக்கு சென்றேன்.

1 கி.மீ. நடந்தேன்

அங்கு இருந்து சுமார் 1 கி.மீ. நடந்து வந்தேன். பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் லிப்ட் கேட்டு அருகில் உள்ள ஓட்டலுக்கு வந்தடைந்தேன். அதன்பிறகு அந்த வழியாக வந்த லாரி டிரைவரிடம் நிலைமையை கூறினேன். அவர் என்னை மும்பை தகிசர் சுங்க சாவடி அருகே இறக்கிவிட்டார்.

முன்னதாக நான் திரும்பி வந்த விவரம் குறித்து முதல்-மந்திரி வீடு, எம்.பி. ஒருவருக்கு போன் செய்து கூறினேன். தகிசரில் இருந்து கார் மூலம் மும்பை வந்தடைந்தேன். என்னை போல மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே முகாமில் இருந்து திரும்பி வர விரும்பலாம். ஆனால் சில அழுத்தம், பிரச்சினை காரணமாக அவர்களால் திரும்பி வர முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Next Story