பா.ஜனதா கூட்டணியில் மாயாவதி இணைந்தால் வரவேற்பேன் - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பேட்டி


பா.ஜனதா கூட்டணியில் மாயாவதி இணைந்தால் வரவேற்பேன் - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பேட்டி
x
தினத்தந்தி 31 Aug 2023 1:00 AM IST (Updated: 31 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மாயாவதி இணைந்தால் வரவேற்பேன் என்று மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

மும்பை,

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மாயாவதி இணைந்தால் வரவேற்பேன் என்று மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

தெளிவு இல்லை

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜனதாவை எதிர்த்து பலமான கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்காக எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. ஆனால் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, தான் எந்த கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று இதுவரை தெளிவுபடுத்தவில்லை. இந்தநிலையில் மும்பை கிராண்ட் ஹயாத் ஓட்டலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், "மாயாவதி தான் எந்த பக்கம் என்பதை தெளிவுப்படுத்தவில்லை. கடந்த காலத்தில் அவர் பா.ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இந்த முறையும் அதையே செய்வார் என்று நான் கூறவில்லை. ஆனால் தெளிவு இல்லாமல் இதில் எந்த முடிவையும் கூற முடியாது" என்றார். இந்தநிலையில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:-

பாதிப்பு இல்லை...

மாயாவதி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால் நான் வரவேற்பேன். அவர் தலித் சமூகத்திற்காக பாடுபடுகிறார். ஆனால் அவரது கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர அழைப்பதா, வேண்டாமா என்பதை பா.ஜனதா தான் முடிவு செய்யும். உத்தரபிரதேசத்தில் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடும் திறன் பா.ஜனதாவிடம் உள்ளது. எனவே அவர் சமாஜ்வாடி கட்சியுடன் கைகோர்த்தாலும் தேர்தலில் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மும்பையில் 2 நாள் கூட்டம் நடத்தும் இந்தியா கூட்டணிக்கு வாழ்த்துக்கள். ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சியை நான் நம்புகிறேன். அது வலுவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story