திறந்து கிடக்கும் பாதாள சாக்கடைகள் மரண பொறிகள்- ஐகோர்ட்டு காட்டம்


திறந்து கிடக்கும் பாதாள சாக்கடைகள் மரண பொறிகள்- ஐகோர்ட்டு காட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:45 PM GMT)

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடைகள் மரண பொறிகள் என்று கூறிய ஐகோர்ட்டு இவற்றை உடனடியாக மூட மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

மும்பை,

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடைகள் மரண பொறிகள் என்று கூறிய ஐகோர்ட்டு இவற்றை உடனடியாக மூட மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

300 பாதாள சாக்கடைகள்

நகரங்களில் உள்ள குண்டும், குழியுமான சாலைகள் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்து வருவது குறித்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி அபய் அகுஜா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மனு தாரர்களில் ஒருவரான ருஜு தாக்கர் என்பவர், மும்பை கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் சுமார் 300 பாதாள சாக்கடைகளின் மூடிகள் திறந்து கிடப்பதை தெரிவித்தார்.

பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு பாதாள சாக்கடை கூட மூடப்படவில்லை என்று தெரிவித்த அவர், பால்கர் மாவட்டம் வசாய் பகுதியில் திறந்துகிடந்த பாதாள சாக்கடை குழியில் விழுந்து பெண் இறந்த சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார்.

குறைவான ஆழம்

இதையடுத்து நீதிபதிகள், மும்பை மாநகராட்சி வக்கீல் அனில் சாகரேவிடம் இது உண்மையா என சரிபார்க்கும்படி அறிவுறுத்தினர்.

மேலும் வருகிற 28-ந் தேதிக்குள் அனைத்து திறந்தவெளி பாதாள சாக்கடைகளையும் மூட வேண்டும் என்று கூறியதுடன், வருகிற 1-ந் தேதிக்குள் இதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

அப்போது வசாய் விரார் மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் ஸ்வாதி சாக்வேகர், நகரில் ஒரு சில பாதாள சாக்கடைகள் மட்டுமே திறந்திருப்பதாகவும், அவை 3 அடிக்கும் குறைவாக ஆழம் கொண்டவை என தெரிவித்தார்.

இதற்கு தலைமை நீதிபதி திபங்கர் தத்தா, "அப்படியானால் திறந்து கிடக்கும் 3 அடி பாதாள சாக்கடைகள் மரண பொறிகள் இல்லையா? இதனால் ஒருவர் இறக்காவிட்டலும் மக்கள் தங்கள் கால்களை முறித்துகொள்ள வாய்ப்பு இல்லையா?" என கேள்வி எழுப்பினார்.

பின்னர் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.


Next Story