சோதனைக்கு சென்ற போது பரபரப்பு: வீட்டை பூட்டிக்கொண்டு அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்த முன்னாள் வங்கி தலைவர், குடும்பத்தினருடன் கைது


சோதனைக்கு சென்ற போது பரபரப்பு: வீட்டை பூட்டிக்கொண்டு அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்த முன்னாள் வங்கி தலைவர், குடும்பத்தினருடன் கைது
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:47 PM GMT)

வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு அமலாக்கத்துறையினரை சோதனை செய்யவிடாமல் தடுத்த முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.

புனே,

வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு அமலாக்கத்துறையினரை சோதனை செய்யவிடாமல் தடுத்த முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.

வீட்டை உள்பக்கமாக பூட்டினர்

மராட்டிய மாநிலம் புனே சேவா விகாஸ் கூட்டுறவு சங்க முன்னாள் சேர்மன் அமர் முல்சந்தானி. இவர் வங்கி தலைவராக இருந்த போது போலி நிறுவனங்களுக்கு கடன் வழங்கி ரூ.429 கோடி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. சம்பவத்தன்று புனேயில் கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை 10 இடங்களில் சோதனை நடத்தியது.

இதில் சோதனை நடத்த அமலாக்கத்துறையினர் புனேயில் உள்ள அமர் முல்சந்தானியின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கு சென்றனர். அப்போது அவரது குடும்பத்தினர் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டனர். அமலாக்கத்துறையினர் எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் அமர் முல்சந்தானியின் குடும்பத்தினர் கதவை திறக்கவில்லை.

போலீசார் வரவழைப்பு

இதனால் வேறு வழியில்லாமல் அமலாக்கத்துறையினர் உதவிக்கு உள்ளூர் போலீசாரை அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல முடிவு செய்தனர். கதவை உடைக்க தொடங்கிய பிறகு தான் உள்ளே இருந்தவர்கள் கதவை திறந்தனர்.

அமலாக்கத்துறையினர் உள்ளே சென்றவுடன் அமர் முல்சந்தானி வீட்டில் இல்லை என அவரது குடும்பத்தினர் கூறினர். வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். வீட்டில் ஒரு அறை பூட்டப்பட்டு இருந்தது. அதிகாரிகள் அறையை திறக்குமாறு கூறினர். அப்போது அமர் முல்சந்தானி குடும்பத்தினர் மீண்டும் அவர்களது நாடகத்தை தொடங்கினர். அந்த அறையை திறக்க அதற்கான சாவி இல்லை என கூறினர்.

வெளியே வந்தார்

போலீசார் கிடுக்கிப்பிடியை தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் சுமார் 2 மணிநேரம் சாவியை தேடுவது போல நடித்தனர். இதனால் பொறுமையிழந்த அதிகாரிகள் பூட்டியிருந்த அறை கதவை உடைக்க முடிவு செய்தனர். அந்த நேரத்தில் பூட்டிய அறையில் இருந்து கதவை திறந்து அமர் முல்சந்தானி வெளியே வந்து அமலாக்கத்துறைக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

சுமார் 4 மணி நேரமாக வீட்டில் சோதனை செய்ய விடாமல் தடுத்ததால் அதிருப்தி அடைந்த அமலாக்கத்துறையினர் அமர் முல்சந்தானி மற்றும் குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறையை வேலைசெய்ய விடாமல் தடுத்ததாக போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின்போில் போலீசார் அமர் முல்சந்தானி மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேரை கைது செய்தனர்.

பறிமுதல்

இந்த குடும்பத்தினர் ஆதாரங்களை அழிக்க திட்டமிட்டு அமலாக்கத்துறையினரை சோதனை செய்யவிடாமல் தடுத்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.

இதற்கிடையே அமலாக்கத்துறை அதிகாரிகள் கூட்டுறவு வங்கி தலைவர் வீடு உள்பட 10 இடங்களில் சோதனை நடத்தி ரூ.2.7 கோடி தங்க நகைகள், ரூ.41 லட்சம் ரொக்கம், 4 உயர்ரக கார்களை பறிமுதல் செய்தனர்.



Next Story