வசூலில் புதிய சாதனை படைத்த 'பதான்'


வசூலில் புதிய சாதனை படைத்த பதான்
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 30 Jan 2023 6:45 PM GMT)

ஷாருக்கான் நடித்த பதான் இந்திப்படம் சர்ச்சைகளை தாண்டி வசூலில் புதிய சாதனை படைத்தது. 5 நாளில் ரூ.542 கோடியை குவித்துள்ளது.

மும்பை,

ஷாருக்கான் நடித்த பதான் இந்திப்படம் சர்ச்சைகளை தாண்டி வசூலில் புதிய சாதனை படைத்தது. 5 நாளில் ரூ.542 கோடியை குவித்துள்ளது.

பதான் திரைப்படம்

இந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அதிரடி அக்ஷன் திரில்லராக உருவான "பதான்" திரைப்படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சித்தார்த் ஆனந்த் படத்தை இயக்கி உள்ளார்.

படத்தின் ஒரு பாடலில் தீபிகா படுகோன் காவி உடையில் படுகவர்ச்சியாக நடனமாடியதால் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கியது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளப்பியது. போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன.

இருப்பினும் 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஷாருக்கானின் புதிய படம் திரைக்கு வந்ததால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஒருபுறம் சர்ச்சை, மற்றொரு புறம் ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புக்கு மத்தியில் பதான் படம் கடந்த 25-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.

ரூ.542 கோடி சாதனை

சினிமா வெளியான நாள் முதல் நாளிலேயே ரூ.106 கோடியை அள்ளி பதான் படம் வசூலில் சக்கை போடு போட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையிலான 5 நாட்களில் பதான் படம் ரூ.542 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்தி திரையுலகில் மிக குறுகிய நாட்களில் இந்த அளவு வசூல் குவித்து இருப்பது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும் சமீப காலமாக இந்தி திரையுலகம் சறுக்கலில் இருந்தது. வசூலில் சாதனை படைத்து வரும் பதான் படம், இந்தி திரையுலகத்திற்கு புதிய தெம்பை அளித்துள்ளது.

இதுபற்றி யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி அக்சய் விதானி கூறுகையில், "எங்களது நிறுவன தயாரிப்பான பதான் படம் உலகம் முழுவதும் உள்ள மக்களை மகிழ்வித்து, மக்களை திரையரங்கிற்கு இழுத்து, அவர்களுக்கு வாழ்நாள் அனுபவத்தை கொடுப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். புதிய சாதனைகளை பதிவு செய்த ஒரு படத்தை வழங்கியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.


Next Story