பெண் தொண்டர் தாக்கப்பட்ட விவகாரம்: பட்னாவிஸ் தகுதி இல்லாத உள்துறை மந்திரி- உத்தவ் ஆவேசம்


பெண் தொண்டர் தாக்கப்பட்ட விவகாரம்: பட்னாவிஸ் தகுதி இல்லாத உள்துறை மந்திரி- உத்தவ் ஆவேசம்
x
தினத்தந்தி 4 April 2023 6:45 PM GMT (Updated: 4 April 2023 6:45 PM GMT)

பெண் தொண்டர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தகுதி இல்லாத உள்துறை மந்திரி என உத்தவ் தாக்கரே ஆவேசமாக கூறினார்.

மும்பை,

பெண் தொண்டர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தகுதி இல்லாத உள்துறை மந்திரி என உத்தவ் தாக்கரே ஆவேசமாக கூறினார்.

நேரில் ஆறுதல்

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மனைவிக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறாக பதிவு ஒன்று வெளியானது. இது தொடர்பாக உத்தவ் தாக்கரே அணியின் தானேயை சேர்ந்த பெண் நிர்வாகி ரோஷிணி ஷிண்டே மீது ஏக்நாத் ஷிண்டே அணியினர் தாக்குதல் நடத்தினர்.

தானே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவரை முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது மனைவி, மகனுடன் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சந்திப்புக்கு பிறகு அவர் மாநில துணை முதல்-மந்திரியும், உள்துறை மந்திரியுமான தேவேந்திர பட்னாவிசை கடுமையாக விமர்சித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

தகுதி இல்லாத உள்துறை மந்திரி

மகப்பேறு சிகிச்சை பெற்று இருக்கிறேன் என கெஞ்சிய பிறகும் பெண் தொண்டரை வயிற்றில் எட்டி உதைத்து உள்ளனர். மராட்டியம் தகுதியற்ற ஒருவரை உள்துறை மந்திரியாக பெற்று உள்ளது. அடிமை, ஆதரவற்றவர் தான் உள்துறை மந்திரியாக இங்கு உள்ளார். மிந்தே (ஏக்நாத் ஷிண்டேயை பற்றி தாக்கரே கட்சியினர் பயன்படுத்தும் வார்த்தை) கும்பலால் தனது சொந்த கட்சிக்காரர் தாக்கப்பட்ட போது கூட அவர் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.

ஷிண்டேயை முதல்-மந்திரி என கூறவேண்டுமா அல்லது ரவுடி மந்திரி என அழைக்க வேண்டுமா?. இதை மக்கள் முடிவு செய்வார்கள். மந்திரி சபை விரிவாக்கத்தின் போது ரவுடி கும்பல் துறை மந்திரி என ஒருவரை அவர்கள் நியமிக்க வேண்டும்.

ராஜினாமா செய்ய வேண்டும்

உள்துறை மந்திரி பட்னாவிஸ் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். உள்துறை மந்திரியாக இருக்க அவருக்கு தார்மீக உரிமையில்லை. அவருக்கு நான் கூறியது அவமானமாக இருந்தால் அவர் உடனடியாக தானே போலீஸ் கமிஷனரை நீக்க வேண்டும் அல்லது பணியிட மாற்றம் செய்ய வேண்டும். பெண் தொண்டர் மீது தாக்குதல் நடந்து நாட்கள் கடந்த பிறகும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. புதன்கிழமை (இன்று) தானே போலீஸ் கமிஷனர் அலுவலகம் நோக்கி ஆதித்ய தாக்கரே தலைமையில் எங்கள் கட்சியினர் பேரணியாக செல்ல உள்ளனர்.

எங்கள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தானேயில் பா.ஜனதா-ஷிண்டே கூட்டத்தை வேரோடு அழிக்கும் திறன் பெற்றவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

உத்தவ் தாக்கரேக்கு பட்னாவிஸ் பதிலடி

உத்தவ் தாக்கரேவின் பேச்சுக்கு பதில் அளித்து தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

உத்தவ் தாக்கரேவுக்கு அவரது பாணியில் என்னால் பதில் அளிக்க முடியும். ஆனால் அதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த மாட்டேன். உத்தவ் தாக்கரே விரக்தியில் உள்ளார். அவர் 2½ ஆண்டுகளாக முதல்-மந்திரியாக இருந்தார். ஆனால் அவர் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. அவர் எல்லா வேலைகளையும் வீட்டில் இருந்து செய்தார். மக்கள் மத்தியில் செல்லவில்லை. இது மக்களுக்கும் தெரியும். உத்தவ் தாக்கரே பலவீனமான முதல்-மந்திரி. ஜெயிலுக்கு போன 2 மந்திரிகளை ராஜினாமா செய்யும்படி கூட அவரால் சொல்ல முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story