சிறப்புக் கட்டுரைகள்

வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா? + "||" + aliens Is not it?

வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா?

வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா?
நாம் வாழ்கின்ற இந்த பூமி உருவானது எப்போது, தெரியுமா உங்களுக்கு? 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பூமி உருவானதாக விஞ்ஞானிகள் கணித்துச் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த பூமியில் உயிரினங்கள் எப்போது உருவாயின, தெரியுமா? 340 கோடி ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் முதன்முதலாக இந்தப் பூமியில் உயிரினங்கள் உருவானதாக விஞ்ஞானிகள், சரித்திரம் பேசுகிறார்கள். அப்போது முதலில் உருவான உயிரினம் எது என்றால் ஆஸ்திரேலியா கண்டத்தில் உருவான ‘ஸ்டி ரோமடோலிட்ஸ்’ என்ற பாக்டீரியாதான் என்று கை நீட்டுகிறார்கள், விஞ்ஞானிகள். இப்படி எத்தனையோ சுவாரசியங்கள், நம்மைச் சுற்றிலும் புதைந்து கிடக்கின்றன, பிரபஞ்ச ரகசியங்களாக.

இந்த பூமியைப் போன்று ஜீவராசிகள் வாழ்வதற்கான தகுதி படைத்த பிற கிரகங்கள் உண்டா? அந்த கிரகங்களில் நம்மைப்போன்று மனிதர்கள் உண்டா? இது இன்னும் அவிழாத மர்ம முடிச்சாகவே தொடர்கிறது. உலகமெங்கும் இது தொடர்பான ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் இன்னும் மாய்ந்து மாய்ந்து ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

அண்மையில் மறைந்த உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கூட இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டது உண்டு. பொதுவாகப் பார்த்தீர்களானால் ஏலியன்ஸ் அல்லது வேற்று கிரகவாசிகள் என்ற வார்த்தையை ஒன்றுக்கு இரண்டு தடவை உச்சரித்துப்பாருங்கள். நம்மை அறியாமல் நமக்குள் ஒரு பரவசம் தொற்றிக் கொள்வதை நாம் உணர முடியும். அத்தனை வசீகரமானவை அந்த வார்த்தைகள்கூட. அதனால்தானோ என்னவோ இது பற்றிய தகவல்கள், எப்போதுமே கவனத்தை கவருவதாகவே அமைந்திருக்கின்றன வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும்கூட வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதற்கு பல தகவல்கள் சான்று பகர்கின்றன.

வேற்று கிரகவாசிகள் தொடர்பாக பல சினிமா படங்கள் வெளியாகி பிரமிக்க வைத்தது உண்டு. ஹாலிவுட்டில் 1951-ம் ஆண்டு ‘தி டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில்’ என்றொரு படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் 2008-ம் ஆண்டு அதே பெயரில் ஹாலிவுட்டில் ஸ்காட் டெரிசன் இயக்கத்தில் மீண்டும் தயாரிக்கப்பட்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ‘க்ளாட்‘ என்ற பெயரிடப்பட்ட வேற்று கிரகவாசி பாத்திரம், உலகமெங்கும் பேசப்பட்டது.

அவ்வளவு ஏன், நமது பாலிவுட்டில் 2003-ம் ஆண்டு, ‘இ.டி. தி எக்ஸ்டிரா டெர்ரஸ்டிரியல்’ என்ற ஹாலிவுட் படத்தை தழுவி, ‘கோய் மில் கயா’ என்ற பெயரில் ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் வெளிவந்த படத்தில் இடம் பெற்றிருந்த வேற்று கிரகவாசி ஜாடூ நமது இதயங்களை கொள்ளை கொள்வதாக அமைந்தது. அந்தப் படம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை குவித்தது.

இப்படி இருக்க, வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டின் மூலமாக பூமிக்கு வந்து சென்றார்கள் என்ற தகவல் அவ்வப்போது வெளிவந்தது உண்டு. விஞ்ஞானத்தில் முன்னணியில் உள்ள அமெரிக்காவையும் கூட இந்த வேற்று கிரகவாசிகள் மோகம் விட்டுவைக்க வில்லை. அதனால்தான் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ இன்னும் இதுபற்றிய ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் அண்டூரில் விவசாய நிலம் ஒன்றில் மிகப் பெரிய காலடி தடங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அந்தக் காலடி தடங்கள் எந்த மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உரித்தானவை அல்ல என்றும், அந்த காலடி தடங்கள் காணப்பட்ட அன்று அதிகாலை நேரத்தில் ஏதோ வினோதமான ஒரு உயிரினத்தின் குரல் கேட்டதாகவும், அப்போது நாய்கள் இடைவிடாது குரைத்ததாகவும் தகவல்கள் வந்தன. அது வேற்று கிரகவாசிகளின் காலடி தடமாக இருக்க வாய்ப்பு உணடு என்றும் சொல்லப்பட்டது. அந்த காலடி தடங்கள் பூமியில் வாழக் கூடிய எந்தவொரு உயிரினத்தின் காலடித்தடங்கள் போல இல்லை என்று வனத்துறையினர் கூறியதாகவும் வெளியான தகவல் மேலும் சுவாரசியம் கூட்டியது மறக்க முடியாத பதிவு.நிலவில் 6-வது மனிதராக சுவடுகளைப் பதித்து வந்த எட்கர் மிட்செல், ஏலியன்கள் பல முறை நம்மை தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கின்றன என்று சொல்லி இருக்கிறார். பிரேசில் நாட்டில் விவசாயியாக இருந்து பின்னர் வக்கீலாக மாறிய ஆன்டனியோ விலாஸ் போஸ் என்பவர் தன்னை வேற்று கிரகவாசி 1957-ம் ஆண்டு கடத்திச் செல்ல முயற்சித்ததாக கூறியது உலகளாவிய அதிர் வலைகளை ஏற்படுத்தியது.

உலகத்தைக் கட்டிப்போட்டிருக்கிற செஸ் விளையாட்டை கண்டு பிடித்தவர்கள் ஏலியன்ஸ்தான் என்று உலக செஸ் அமைப்பின் தலைவர் கிர்சன் கிலியம் ஜினோவ் கொளுத்திப் போட்ட பட்டாசை மறந்து விட முடியாது.அமெரிக்க நாட்டில் ஏலியன்ஸ் தாக்கினால் அவற்றை எதிர் கொள்வது எப்படி என்று தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தேறி இருக்கின்றன.வேற்று கிரகவாசிகளால் தாங்கள் கடத்தப்படலாம் என்று கருதி 40 ஆயிரம் பேர் அமெரிக்காவில் காப்பீடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ‘கிராப் சர்க்கிள்’ என்ற மனிதர்களால் வரைய முடியாத கோலம் போன்ற அமைப்பினை ஏலியன்கள் தான் உருவாக்கி இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை இன்றளவும் நிலவுகிறது. ‘நாசா’ வின் முன்னாள் விஞ்ஞானி லீ லான்ட் மெல் வின், தனது விண்வெளிப்பயணத்தின்போது தான் ஏலியன்ஸை பார்த்ததாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வும் இந்த மண்ணில் அரங்கேறி இருக்கிறது. கடைசியாக, உயிரினங்கள் வாழ்வதற்கு தண்ணீர் அவசியம். எனவே எந்த கிரகங்களில் எல்லாம் தண்ணீர் இருக்கிறதோ அங்கெல்லாம் ஏலியன்ஸ் இருக்கக்கூடும் என்ற கருத்தும் அறிவியல் உலகில் நிலவுகிறது. “செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

வியாழன் கிரகத்தின் நிலாவான யூரோப்பாவில் தண்ணீர் இருக்கிறதாம். அதுவும் தண்ணீர்ப் பெருங்கடலே இருக்கிறதாம்.சனி கிரகத்தின் நிலாக்களான டைட்டான், என் செலாடஸ் ஆகியவற்றிலும் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்கிறார் வேற்று கிரகவாசிகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிற அமெரிக்காவின் சேட்டி இன்ஸ்டிடியூட்டின் விஞ்ஞானி சேத் சொஸ்டாக்.

அதே நேரத்தில் பூமிக்கு அப்பால் எந்தவொரு கிரகத்திலும் மனிதர்களைப்போன்று வேறு யாரும் வாழ்வதற்கு ஆதாரங்கள் இல்லை என்றாலும், மறுப்பதற்கும் எந்த ஆதாரங்களும் இல்லை.வேற்று கிரகவாசிகள் ஒரு புறம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நம்மில் பலரும் நம்மை சேர்ந்தவர்களுடன் வேற்று கிரகவாசிகள் போல நடந்துகொள்ளாமல் சக மனிதர்களாக நடந்துகொள்வது மனிதம் வளர்க்கும். அப்போதுதான் வேற்று கிரகவாசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், ஏன், அவர்களே இந்தப் பூமிக்கு வந்தாலும் கூட நாம் அவர்களை நேசிக்க முடியும்.

- இலஞ்சியன்