பெட்ரோல், டீசல் தேவையில்லை வருகிறது மின்சார கார்


பெட்ரோல், டீசல் தேவையில்லை வருகிறது மின்சார கார்
x
தினத்தந்தி 17 Oct 2018 5:27 AM GMT (Updated: 17 Oct 2018 5:27 AM GMT)

முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இப்போதே மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வேலையைத் தொடங்கி விட்டன.

ஆண்டுகள் பல பின்னோக்கிச்சென்றால், நிலக்கரியில் இயங்கிய நீராவி என்ஜின் பொருத்திய ரெயில்களில் பயணம் செய்தோம். அப்போதெல்லாம் வெள்ளைச்சட்டை போட்டுச்சென்றால் அவ்வளவுதான். ‘குப்குப்’ என ரெயில் கிளப்பும் புகையில் இருந்து கரித்துகள்கள் சட்டையில் படிந்து இருக்கும். அதில் இருந்து டீசல் என்ஜின்கள் நம்மை மீட்டெடுத்தன. அதிலும் கூட சுற்றுச்சூழல் மாசு இருப்பது தெரியவர, அதற்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்டது தான், மின்சார ரெயில்.

ஆரம்பக் காலத்தில், சென்னை நகரில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு, தலைநகர மக்களின் பயணத்தை இலகுவாக்கிய மின்சார ரெயில்கள் தற்போது மாநிலம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ரெயில்களின் வேகம் அதிகரித்து இருப்பதோடு, சுற்றுச்சூழல் மாசு கொஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இருந்தாலும், புவி வெப்பநிலை அபாய அளவை நெருங்கிக்கொண்டு இருப்பதால், சாலைப்போக்குவரத்திலும் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சாரம் மூலம் வாகனங்களை இயக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க முடியும். மேலும், எரிபொருள் இறக்குமதியை குறைத்து அன்னிய செலாவணியையும் மிச்சப்படுத்த முடியும் என்று அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு 2030-ம் ஆண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இப்போதே மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வேலையைத் தொடங்கி விட்டன. (மின்சார கார் என்றால் பேட்டரியில் மின் சாரத்தை சார்ஜ் செய்து விட்டால் போதும். ஒரு குறிப்பிட்ட தூரம் வரை செல்ல முடியும்).

ஹூண்டாய், ரெனால்ட், டொயோட்டா, சுஸுகி, மஹிந்திரா, டாடா போன்ற நிறுவனங்கள் 2020-ம் ஆண்டுக்குள் மின்சார கார்களை அறிமுகப்படுத்தும் வகையில் தயாரிப்பு பணியில் இறங்கியுள்ளன.

டொயோட்டாவும், சுஸுகியும் இணைந்து இந்தியாவுக்கான மின்சார கார்களை தயார் செய்கின்றன. இதற்கான தொழில் நுட்பத்தை டொயோட்டா வழங்க, சுஸுகி நிறுவனம் கார்களை வடிவமைக்கிறது.

ரெனால்ட் நிறுவனம் சீனச்சந்தையில் விற்பதற்காக குறைந்த விலையிலான மின்சார கார்களை தயாரித்து வருகிறது. ‘ரெனால்ட் க்விட்’ எனப்படும் இந்த காருக்கு சீனச்சந்தையில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் இது ஏற்றுமதி செய்யப்படும்.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கும் மின்சார காரின் பெயர் ‘கேயூவி100’. இதன் பரிசோதனைகள் முடிந்து இந்த ஆண்டே கார் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து, ‘எக்ஸ்யூவி500’ என்ற மாடல் மின்சார காரையும் மஹிந்திரா தயாரிக்கிறது.

டாடா நிறுவனம், டாடா டிகோர், டாடா டியாகோ ஆகிய இரு மாடல் மின்சார கார்களை உற்பத்தி செய்கிறது. இவை அடுத்த ஆண்டுக்குள் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் மின்சார கார் (ஹுண்டாய் கோனா) பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு இதை விற்பனைக்கு கொண்டு வர திட்ட மிட்டுள்ளனர்.

இவை எல்லாம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் தேவை வெகுவாக குறைந்து விடும். மேலும் அவற்றின் விலை உயர்வு குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

Next Story