தாலியை சுமக்காத பெண்கள்


தாலியை சுமக்காத பெண்கள்
x
தினத்தந்தி 28 Oct 2018 8:54 AM GMT (Updated: 28 Oct 2018 8:54 AM GMT)

திருமணங்கள் பொதுவாக சடங்கு, சம்பிரதாயங்கள் நிறைந்தவைகளாக இருக்கின்றன. தாலிகட்டுதல், அதில் முக்கியமானதாக இருந்து கொண்டிருக்கிறது.

தாலி, மதிப்புமிக்கதாகவும், மாண்புமிக்கதாகவும் கருதப்பட்டுக் கொண்டிருக்கிறது.  இத்தகைய தாலிகட்டும் திருமணங்களில் ஆடம்பர செலவுகளும் செய்யப்படுகின்றன. ஆனாலும் இத்தகைய சடங்கு சம்பிரதாய திருமணங்கள் கடல் கடந்தும் வரவேற்பை பெறுகின்றன. வெளிநாட்டு காதல் ஜோடிகள்கூட இங்கு வந்திறங்கி, இங்குள்ள சடங்குகள்படி தாலிகட்டி திருமணம் செய்துவிட்டு பறந்து போகிறார்கள். இப்படி தாலிகட்டும் சடங்கு சம்பிரதாயங்களுக்கு வரவேற்பு இருந்துகொண்டிருந்தாலும், அது மண வாழ்க்கைக்கு எப்படி சிறப்பு சேர்க்கிறது? என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல வாய்ப்பில்லைதான். அதே நேரத்தில் “சடங்கு சம்பிரதாயம் இல்லாமல், தாலியும் கட்டாமல், மகிழ்ச்சியாக வாழ்கிறோம்” என்று சொல்லும் தம்பதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். தாலிகட்டிக்கொண்டு மணவாழ்க்கைக்குள் அடியெடுத்துவைப்பது ஒருசாராரின் நம்பிக்கை. தாலிகட்டாவிட்டாலும் மணவாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது இன்னொரு சாரார் நம்பிக்கை.

தாலிகட்டாமல் மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கை மேற்கொள்ளும் குடும்பங்களைத் தேடி இப்போது நமது பயணம்!

அந்த புதுமைத் தம்பதிகளில் சிலர், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கோட்டபூண்டி ஊராட்சிக்குட்பட்ட செக்கடிக்குப்பம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்து புரட்சிபடைக்க என்ன காரணம் என்று செக்கடிக்குப்பத்தை சேர்ந்த அர்ச்சுணன் (வயது 85) விளக்குகிறார்!

“1967-ம் ஆண்டு அவலூர்பேட்டை, மேல்மலையனூர் கிராமங்களில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்துக்கு தந்தை பெரியார் வந்திருந்தார். அவரது பேச்சை கேட்பதற்காக நாங்கள் சென்றிருந்தோம். அப்போது அவர், ‘பெண்களுக்கு தாலி கட்டுவது அவர்களை அடிமைப்படுத்து வதற்கு சமம். ஆகவே திருமணத்தின்போது பெண்ணுக்கு தாலி அணிவிக்கக்கூடாது. வரதட்சணை வாங்கக்கூடாது. ஜாதி பார்க்கக்கூடாது. மானமும், அறிவும்தான் மனிதனுக்கு அழகு’ என்று சுயமரியாதை திருமணம் பற்றி பேசினார்.

அந்த பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. அதன்பிறகு பெரியாரின் கொள்கையை கடைப் பிடிக்க ஆரம்பித்தேன். எனக்கும், எங்கள் ஊரை சேர்ந்த பணிஅரசுக்கும் 1968-ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பணிஅரசுக்கு நான் தாலிகட்டினேன். மற்றபடி சுயமரியாதை திருமணமாகவே நடந்தது. இருப் பினும் எங்கள் ஊரில் மது, போதை பழக்கம் எதுவும் கிடையாது. திருமணங்களில் வரதட்சணையும் வாங்குவதில்லை.

முன்பு திருமண நிச்சயம் ஆகும்போது பெண் வீட்டுக்காரர்கள், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களிடம் இருந்து தாய்ப்பாலுக்கு பணம் கேட்டு பெற்று வந்தனர். இந்த முறையை எங்கள் ஊரில் அடியோடு ஒழித்தேன். தற்போது இந்த முறை கிடையாது. எனக்கு தனியரசு, தமிழ்தென்றல் என்கிற 2 மகள்களும், பெரியார் என்கிற மகனும் உள்ளனர். 1993-ம் ஆண்டு மூத்த மகள் தனியரசு-மதியழகனுக்கு திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் தனியரசு தாலி கட்டிக்கொள்ளவில்லை. அவர், அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். எனது மகனான பெரியார் எம்.ஏ., எம்.பில். படித்து விட்டு ஊரிலேயே பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். எம்.ஏ., பி.எட் முடித்துள்ள மருமகள் ஜெயா அந்த பள்ளி யில் முதல்வராக பணியாற்றி வருகிறார். இவர்கள் அனைவருமே தாலி கட்டாமல்தான் திருமணம் செய்தார்கள்” என்றார்.

அர்ச்சுணனின் மகன் பெரியார் சொல்வதை கேட்போம்:

“ஆமாங்க எனக்கு 2004-ல் திருமணம் நடந்தது. எங்க ஊரை சேர்ந்த ஜெயாவை திருமணம் செய்தேன். திருமணத்தின் போது தாலி கட்டவில்லை. மாலையை மட்டும் மாற்றிக் கொண்டோம். திருமணத்தில் எந்த சடங்கு, சம்பிரதாயமும் நடக்கவில்லை. மிக எளிமையாக தான் திருமணம் நடந்தது. வரதட்சணை எதுவும் வாங்கவில்லை. திருமணத்தின்போது மணமக்களை வாழ்த்து வதற்காக அரிசியை அவர்களின் தலையில் தூவுவார்கள். உலையில் போட வேண்டிய அரிசியை தலையில்போட்டு என்ன பயன்? என்று திருமணத்துக்கு முன்பே எதிர்த்து, பெரியாரின் கொள்கையை கடைப்பிடித்து வந்தேன். எனக்கு திருமணம் ஆன அதே நேரத்தில் தான் வீரமணி-தேன்மொழி, அன்புமணி-சங்கீதா, வெங்கடேசன்-சுகுணா ஆகியோரும் தாலி கட்டாமல் திருமணம் செய்தார்கள்.

தாலி கட்டாமல் திருமணம் செய்ததால் தனிப்பட்ட முறையில் சில பிரச்சினை களையும் நான் சந்தித்துள்ளேன். திரு மணம் முடிந்த பிறகு சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினேன். அப்போது வீடு வாடகைக்கு எடுத்து மனைவியுடன் தங்கி இருந்தேன். ஆனால் எங்களை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள், நாங்கள் கணவன்-மனைவி என்பதை நம்பவில்லை. தாலி கட்டாமல் மனைவி என்று சொல்கிறாரே நம்மை ஏமாற்றுகிறாரா? என்று பேசிக்கொண்டனர். அவர்களிடம் ‘நாங்கள் சுயமரியாதை திருமணம் செய்துள்ளோம். எங்கள் ஊரில் இப்படிதான் திருமணம் செய்து கொள்வோம்’ என்று கூறினோம். சிலர் நம்பவில்லை. நம்பாதவர்களை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் பொங்கல் பண்டிகையை மட்டும்தான் கொண்டாடுகிறோம்” என்றார்.

அவரது மனைவி ஜெயா நமது கேள்விகளுக்கு பதில் தருகிறார்:

தாலி கட்டாத திருமணத்திற்கு நீங்கள் சம்மதிக்க என்ன காரணம்?

``நானும் செக்கடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்தான். எங்கள் கிராம மக்கள்போன்று நானும் பெரியாரின் கொள்கையை கடைப்பிடித்து வந்தேன். திருமணத்தின் போது பெண்கள் தாலி அணியக்கூடாது என்று நானே பல கூட்டங்களில் பேசி இருக்கிறேன். அதனால் நான் தாலிகட்டாத திருமணத்திற்கு மனப்பூர்வமாக சம்மதித்தேன். தாலி என்பது பெண்களின் அடிமைச் சின்னம். அது எனக்கு தேவையில்லை என்று இப்போதும் சொல்வேன்”

தாலி அடிமையின் சின்னம் என்று நீங்கள் சொல்வதற்கான காரணம்?

“திருமணத்திற்கு பிறகு பெண்கள் மட்டும் ஏன் தாலியை சுமக்க வேண்டும்? இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதானே. ஆணும், பெண்ணும் சமம். அப்படி இருக்கும் போது பெண்களுக்கு மட்டும் எதற்கு தாலி? நாங்கள் தாலி கட்டிக்கொள்ளாமல் சந்தோஷமாக தான் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு சங்கத்தமிழன் (12) என்கிற மகனும், தனித்தமிழ் (8) என்கிற மகளும் இருக்கிறார்கள்”

தாலி அணியாமல் இருப்பதால் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு உங்களை உறவினர்கள் அழைக்க தயக்கம் காட்டுகிறார்களா?

“நான் தாலி அணியாததால் எந்த பிரச்சினையும் இல்லை. எங்களை தெரிந்த அனைவருக்கும் நாங்கள் தாலி கட்டாமல் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது தெரியும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் கருப்பு உடை அணிந்து தான் செல்வோம். அதில் எவ்வித சிக்கலும் இதுவரை வந்ததில்லை. சில பெண்கள் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு அதிக அளவில் தங்க நகைகளை அணிந்து வருவார்கள். இதனால் என்ன ஆகி விட போகிறது. இறக்கும்போது எதையும் கொண்டு செல்வதில்லை. ஆகவே இருக்கும்போது எளிமையாக வாழ்வதே நல்லது” என்றார்.

தாலிகட்டாத மற்றொரு தம்பதியான வீரமணி-தேன்மொழியும், “தாலிகட்டாமல் நாங்கள் தனித்துவ வாழ்க்கை வாழ்ந்துவருகிறோம். எங்கள் வாழ்க்கையில் எந்த மகிழ்ச் சிக்கும் குறைவில்லை. ஆணையும், பெண்ணையும் நாங்கள் சமமாக மதிக்கிறோம்” என்றார்கள்.

திருமணம் என்பது அந்த பந்தத்தில் இணையும் இருவரின் விருப்பத்தை பொறுத்தது. அவர வருக்கு பிடித்ததுபோல் அதனை அமைத்துக்கொண்டு, தங்கள் வாழ்க்கையை நடத்திச்செல் கிறார்கள். நமது நாடு இத்தகைய பன்முக கலாசாரத்தை உள்ளடக்கியதுதான்! 

Next Story