‘டொனால்ட் டக்’ உருவான கதை


‘டொனால்ட் டக்’ உருவான கதை
x
தினத்தந்தி 5 Nov 2018 3:30 AM GMT (Updated: 5 Nov 2018 12:01 AM GMT)

உலகிலேயே அதிகமான கார்ட்டூன் படங்களை தயாரித்த நிறுவனம் எது என்றால், உடனே வால்ட் டிஸ்னி என்று சொல்லி விடுவீர்கள். ஆனால், டிஸ்னியின் கார்ட்டூன் படங்களில் அதிகமாக தோன்றியது, அவருக்கு பிரபலத்தை தேடி தந்தது மிக்கி மவுஸ் கிடையாது.

சூப்பர் ஹீரோக்களை தவிர்த்து உலகிலேயே அதிகமான காமிக்ஸ் புத்தகங்களில் இடம் பிடித்த டொனால்ட் டக் தான் அது. டிஸ்னியின் கார்ட்டூன் திரைப்படங்களிலும் இதுதான் அதிகமாக தோன்றியிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சாதனை நாயகன் உருவானதுக்கு காரணம் யார் தெரியுமா? இன்னொரு சாதனை நாயகன் தான். அவர்தான் உலக புகழ்பெற்ற ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் பேட்ஸ்மேன் பிராட்மேன்.

வால்ட் டிஸ்னியின் உன்னதமான படைப்பு மிக்கி மவுஸ். உலகெங்கும் உள்ள குழந்தைகளின் ஆதர்ச நாயகனாக மாறியதில் இருந்து, அந்த கதைகளை கவனத்துடன் கையாள ஆரம்பித்தார் அவர். அந்த கதை வரிசையில் எதிர்மறைக் கருத்துகளோ, எதிர்மறை எண்ணங்களோ தோன்றாமல் பார்த்துக்கொண்டார். அதனால் தன்னுடைய வழக்கமான பாணியில் இருந்து ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தை உருவாக்க நினைத்தார். இந்த எண்ணத்துடன் அன்றைய நாளிதழை புரட்டிக்கொண்டிருந்தார் வால்ட் டிஸ்னி. 1932-ம் ஆண்டில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் டொனால்ட் பிராட்மேன் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அப்போது, நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். நாளிதழில் டொனால்ட் டக் அவுட் என்று தலைப்பு செய்தியாக வந்திருந்தது. உடனே தன்னுடைய கதாபாத்திரத்துக்கு டொனால்ட் டக் என்ற பெயரை சூட்டினார் வால்ட் டிஸ்னி.

முதலில் மிக்கி மவுஸ் நண்பனாக உலகுக்கு அறிமுகமானது டொனால்ட் டக். இது ஒரு முழு காமெடியன். அதிர்ஷ்டத்துக்கும் டொனால்டுக்கும் ஏழாம் பொருத்தம் என்று சொல்லலாம். கற்பனையில்கூட யோசிக்கவே முடியாத விபத்துகள், துர்சம்பவங்கள் டொனால்டுக்கு தினசரி நடக்கும். அதுபோன்ற விபத்துகளும், சம்பவங்களும் தான் இந்த தொடரின் சிரிப்பு வெடிகள்.

டொனால்ட் டக்கின் முன்கோபத்தால் ஏற்படும் விளைவுகளை பற்றியே தொடர் அமைந்திருந்தது. உலகமே டொனால்ட் டக்கை விரும்புவதற்கு ஒரே காரணம், அதன் நேர்மறையான எண்ணங்களே. எதையும் செய்ய முடியும், முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை என்பதற்கு அற்புதமான உதாரணம்தான் டொனால்ட் டக். நம்மால் எதிர்கொள்ள முடியாத சக்திகளை, இயற்கை சீற்றங்களை, சினம் கொண்ட சிங்கம் போல டொனால்ட் டக் எதிர்கொள்ளும். 

Next Story