சிறப்புக் கட்டுரைகள்

பெண் விலங்குகள் வெளிக்காட்டும் தலைமைப் பண்பு! + "||" + Females exhibit leadership qualities!

பெண் விலங்குகள் வெளிக்காட்டும் தலைமைப் பண்பு!

பெண் விலங்குகள் வெளிக்காட்டும் தலைமைப் பண்பு!
விலங்கினங்கள் சிலவற்றில், பெண் விலங்குகள் அபார தலைமைப் பண்பை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, கழுதைப்புலி, யானை, சிங்கம் ஆகியவற்றில் பெண் விலங்குகள்தான் குழுவின் தலைவராக உள்ளன.
உலகில் இதுவரை அறியப்பட்டுள்ள ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாலூட்டிகளில் மிகச் சில உயிரினங்கள் மட்டுமே பெண் விலங்குகளால் தலைமை தாங்கி வழிநடத்தப்படுகின்றன என்கிறது ஒரு புதிய ஆய்வு.

இவ்விலங்குகளிடம் இருந்து மனிதர்களும் கற்றுக் கொள்ளலாம் என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


இங்கிலாந்தில் உள்ள மில்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜெனிபர் ஸ்மித் மற்றும் அவரது சகாக்கள் மூவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில், ஓர்கா வகைத் திமிங்கலங்கள், கழுதைப்புலிகள், புள்ளிக் கழுதைப்புலிகள், சிங்கங்கள், யானைகள், பொனோபோ வகை மனிதக் குரங்குகள், லெமூர்கள் ஆகியவற்றில் பெண் விலங்குகளே தலைமைப் பொறுப்பில் இருப்பது தெரியவந்துள்ளது.

தலைமைத்துவத்துக்கான குணாதிசயங்களை வெளிக்காட்டும் விலங்குகளில், சமூக வாழ்க்கை வாழும் 76 விலங்குகளின் வாழ்க்கைமுறையை இந்தக் குழுவினர் கண்காணித்தனர். அந்த விலங்குகளின் இடப்பெயர்வு, இரை தேடும் முறை, மோதல்கள் உண்டாகும்போது தீர்வு காணுதல் ஆகியவற்றை ஆராய்ந்தனர்.

அந்த விலங்குகளுக்குத் தலைமை தாங்கும் பெண் விலங்குகளின் நடத்தைகள் குறித்து ஆய்வு செய்தனர், இந்த ஸ்மித் தலைமையிலான குழுவினர்.

‘‘இந்த விலங்குகள் சமூகத்திடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளது’’ என்கிறார் ஸ்மித்.

அப்படி இந்தப் பெண் விலங்குகளிடம் தலைமைப் பண்பு குறித்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?

முதலில் பொனோபோ குரங்குகள் பற்றிப் பார்ப்போம்...

மனிதர்களின் டி.என்.ஏ.வின் 99 சதவீதம், நமக்கு நெருக்கமான சிம்பன்சி மற்றும் பொனோபோ வகை மனிதக் குரங்குகளைப் போலவே இருக்கும். சிம்பன்சி குரங்கில் ஆண்கள் தலைமையில் இருந்தாலும் பொனோபோ குரங்குக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது பெண் குரங்குகள்தான்.

இடப்பெயர்வுக்கான திட்டங்களைத் தீட்டுவதும், உணவுகளை முதலில் உண்டு பரிசோதிப்பதும் பெண் பொனோபோ குரங்குகள்தான் என்கிறார், காங்கோ ஜனநாயகக் குடியரசில் இந்தக் குரங்குகள் குறித்து ஆராய்ச்சி செய்த கியோட்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர் டகேஷி புரூச்சி.

‘‘பொனோபோ குரங்குகளுக்குள் சண்டை வரும்போது தலையிட்டுச் சமரசம் செய்யும் பணியை பெண் குரங்குகளே செய்கின்றன. ஆண் குரங்குகளுடன் தனியாக மோதும்போது தோல்வியைச் சந்தித்தாலும், ஒன்றுக்கும் மேலான பெண் குரங்குகள் ஒன்றாக இணைந்து ஆணை எதிர்கொண்டு, வெற்றியைப் பெறுகின்றன’’ என்கிறார் டகேஷி.

யானைகள், ஓர்கா திமிங்கலங்கள்: யானைகள் மற்றும் ஓர்கா திமிங்கலங்களின் கூட்டத்தில், வயது முதிர்ந்த பெண் விலங்கு தலைமைப் பொறுப்பில் இருக்கும். ஓர்கா திமிங்கலங்களின் ‘பாட்டிகள்’, இரை இருக்கும் இடத்தை நோக்கி தமது குழுவை அழைத்துச் செல்லும்.

‘‘வளங்கள் குறைவாக இருக்கும் சமயத்தில் சிறப்பான நினைவாற்றல் உள்ள யானைகளின் திறன் உதவும். வறட்சியான காலங்களில் தனது குழுவை நீர்நிலையை நோக்கி அழைத்துச் செல்லும் பணியை தலைமைப் பெண் யானை மேற்கொள்ளும்’’ என்கிறார், கென்யாவில் உள்ள யானைகள் ஆய்வாளர் விக்கி பிஷ்லோக்.

மனிதர்கள் தந்தைவழிச் சமூகத்தைப் பின்பற்றி வாழ்வதைப்போல யானைகள் தாய்வழிச் சமூகத்தைப் பின்பற்றி வாழ்கின்றன. ஆண் யானைகள் வயதுக்கு வந்ததும் தனியாக வாழச் சென்றுவிடுவதால், பெண் யானைகளுக்கு ஆண் யானைகளுடன் பதவிச் சண்டை நடக்காது என்கிறார், யானைகள் குறித்துச் சுமார் 50 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துவரும் சிந்தியா மோஸ்.

கழுதைப்புலிகள்: வேட்டையின்போது கழுதைப்புலி இனத்தில் ஆண்கள்தான் முன்னின்று தாக்கும். ஆனால் வேட்டையைக் கட்டுப்படுத்துவது பெண் கழுதைப்புலிகள்தன். தங்கள் குழு எங்கு வேட்டையாட வேண்டும் என்று வழிநடத்திச் செல்வது பெண் கழுதைப் புலிகளே. ஆண் கழுதைப்புலிகளை விட பெண் கழுதைப்புலிகள் உடல் வலிமை மிக்கவையாக இருக்கும்.

தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண் விலங்குகளிடம் முக்கியமாகக் கற்றுக்கொள்ள வேண்டியது, தமது சமூகக் குழுக்களில் இருப்பவர்களுடன் கூட்டணி அமைத்துக்கொள்வது. அதற்கான திறன், அனுபவமும் வயதும் கூடும்போது மேலும் அதிகரிக்கிறது.

பெண் விலங்குகள் கூட்டாக இணைந்து செயல்படும்போதுதான் பெண் தலைமை உருவாகிறது என்பது விலங்குகளைக் கண்காணிக்கையில் வெளிப்படுகிறது.

இதற்கு, பாலியல் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் ‘மீ டூ’ இயக்கம் மூலம், தாங்கள் பாதிக்கப்பட்டதை வெளிப்படுத்தி உலக அளவில் அதிர்வலைகளை உண்டாக்கியதை ஸ்மித் உதாரணமாகக் கூறுகிறார்.

ஆண் விலங்குகள் மேலாதிக்கம் செலுத்தும் விலங்குகளில் பெண் விலங்குகளின் தலைமைப் பண்புகள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்கிறார் ஸ்மித்.

ஆனால், சிறப்பான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் பெண் விலங்கினங்கள், மனிதர்கள் உள்பட ஒட்டுமொத்த உயிரினங்களுக்கே ஒரு முன்மாதிரியாக உள்ளன என்பதே ஆய்வாளர்களின் ஒட்டுமொத்தக் கருத்து.