கதற வைத்த ‘கஜா’


கதற வைத்த ‘கஜா’
x
தினத்தந்தி 25 Nov 2018 6:53 AM GMT (Updated: 25 Nov 2018 6:53 AM GMT)

இயற்கை மனிதனுக்கு உந்து சக்தி. அந்த இயற்கையை பார்த்துத்தான் மனிதன் ஒவ்வொன்றாக கண்டுபிடித்தான்.

விமானத்தை கண்டுபிடிக்க மனிதனுக்கு உந்துசக்தியாக அமைந்தது பறவை.

என்றாலும், தனது அறிவாற்றலால் மனிதன் இயற்கைக்கு நெருக்கமாக செல்ல முடிகிறதே தவிர, அதை வெல்ல முடியவில்லை.

எந்த பறவையும் பறக்க இயலாமல் விழுந்து விடுவது இல்லை. ஆனால் மனிதன் படைத்த விமானத்தை அப்படி சொல்லமுடியாது.

அங்குதான் இயற்கைக்கும், மனிதனின் அறிவாற்றலுக்கும் ஒரு சிறிய இடைவெளி நிலவுகிறது.

இயற்கையின் நியதிகளில் மாற்றங்கள் இருப்பது இல்லை. ஆனால் மனிதனின் அறிவாற்றல் சில சமயங்களில் கைகொடுக்காமல் போய்விடுவது உண்டு.

பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்திரனில் காலடி வைத்துவிட்ட மனிதன், அடுத்ததாக 22 கோடியே 50 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் தரை இறங்க நாள் பார்த்துக்கொண்டு இருக்கிறான்.

ஆனால் எரிமலை வெடித்து சிதறுவதையும், பூகம்பம் ஏற்படுவதையும், புயல்கள் தாக்குவதையும், பெருமழை வெள்ளத்தையும் மனிதனால் தடுக்க முடியவில்லை.

தனது விஞ்ஞான அறிவின் துணையுடன் இந்த இயற்கை சீற்றங்களை கணித்து அவற்றின் பாதிப்புகளை ஓரளவு குறைக்க முடிகிறதே தவிர, வேறொன்றும் செய்ய முடியவில்லை.

அங்குதான் மனிதன் இயற்கையிடம் தோற்றுவிடுகிறான்.

10 நாட்களுக்கு முன்பு வரை யாராவது நினைத்துப்பார்த்து இருப்பார்களா? ஒட்டுமொத்த தமிழகத்துக்கே சோறுபோடும் காவிரி டெல்டா பகுதி இப்படி உருக்குலைந்து போகும் என்று.

ஆனால் யாரும் எதிர்பாராத-விரும்பத்தகாத ஒரு மாபெரும் துயரம் நிகழ்ந்துவிட்டது.

காவிரித்தாயின் கருணையால் எங்கும் பசுமை போர்த்திய வயல்வெளிகள், வாழைத்தோட்டங்கள், தலைவிரித்தாடும் தென்னை மரங்கள், கரும்பு பயிர்கள், வளைந்து-நெளிந்து ஓடும் ஆறுகள், வாய்க்கால்கள் என்று இயற்கையின் ஒட்டுமொத்த அழகும் கொட்டிக்கிடக்கும் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் இன்று கஜா புயலின் கோரக் கரங்களில் சிக்கி, சிதைந்து சின்னாபின்னமாக கிடக்கிறது.

15-ந் தேதி நள்ளிரவில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கும் போது திருடன் போல் வந்த கஜா, விவசாயிகளின் பல்லாண்டு கால உழைப்பை சில மணி நேரத்தில் அடாவடியாக கொள்ளையடித்துச் சென்றுவிட்டது. இந்த திருடனின் அக்கிரமம் பற்றி எந்த கடவுளிடம் போய் முறையிடுவது?

கஜா வாரி சுருட்டி தள்ளிய வீட்டை, பணம் இருந்தால் ஒரு மாதத்திலோ அல்லது இரு மாதங்களிலோ அல்லது 6 மாதங்களிலோ மீண்டும் கட்டி எழுப்பிவிடலாம்.

ஆனால் வேறோடு பிடுங்கி வீசிவிட்டும், ஒடித்து எரிந்துவிட்டும் சென்ற லட்சக்கணக்கான தென்னை மரங்களையும், பலா, முந்திரி உள்ளிட்ட வருவாய் தரக்கூடிய பிற மரங்களையும் நட்டு, வளர்த்து உருவாக்க இன்னும் எத்தனை ஆண்டுகள், எவ்வளவு உழைப்பு தேவைப்படும்? நினைத்துப்பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.

கஜா புயலின் நகர்வு குறித்து வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தகவல்கள் அளித்தபடி இருந்ததால், தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தாழ்வான பகுதிகளில் இருந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இதனால் உயிர்ச்சேதங்களை ஓரளவு குறைக்க முடிந்ததே தவிர, மற்ற அழிவுகளை தடுக்க முடியவில்லை.

கனமழையுடன் வந்து அசுர வேகத்தில் தாக்கிய கஜா, தமிழகத்தின் நிலப்பகுதியை கடந்து கேரளா வழியாக அரபிக்கடலுக்கு சென்ற பிறகுதான் அதன் கோர தாக்குதலின் பாதிப்பு முழுமையாக தெரியவந்தது.

டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் சின்னாபின்னமாகி அலங்கோலமாக கிடந்தன.

பிள்ளையைப் போல் பார்த்துப்பார்த்து வளர்த்த தென்னை மரங்கள் சாய்ந்தும், ஒடிந்தும் மண்ணோடு மண்ணாகி கிடந்ததை விவசாயிகளால் தாங்கி கொள்ள முடியவில்லை. தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்ததைப்போல் கதறினார்கள்.

பொங்கல் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு, மக்காச்சோளம் பயிர்கள் மீட்டெடுக்க முடியாத அளவுக்கு நாசமாயின. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின.

இதுதவிர மா, புன்னை, வேம்பு, முருங்கை, ஆல், அரசு என்று லட்சக்கணக்கான பிற மரங்களும் சாய்ந்தன. புயலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மின்சார கம்பங்களும், செல்போன் கோபுரங்களும் சாய்ந்து விழுந்தன.

ஏராளமான படகுகளும் நாசமாயின.

டெல்டா மாவட்டங்களில் வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு போன்ற பகுதிகள் வரலாறு காணாத பேரிழப்பை சந்தித்து இருக்கின்றன. ஆடு, மாடு போன்ற ஏராளமான கால்நடைகளும், கோழிகளும் பலியாகி இருக்கின்றன.

புயல் தாக்கிய போது நள்ளிரவு என்பதால், கோடியக்கரை சரணாலயத்தில் உள்ள மான்கள், குதிரைகள் போன்ற விலங்குகள் பயத்தில் எங்கு ஓடுவது என்று தெரியாமல் அங்கும் இங்குமாக சிதறி ஓடி சேற்றுக்குள்ளும், கடலிலும் விழுந்தன. அப்படி விழுந்த ஏராளமான விலங்குகள் செத்து பின்னர் கரை ஒதுங்கியது வார்த்தைகளில் அடங்காத சோகம்.

மான்கள் பயந்த சுபாவம் கொண்டவை. அவை மிரண்டு ஓடும் போது பயத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கக்கூடும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

டெல்டா மாவட்டங்களை பதம்பார்த்த கஜா, தான் கடந்து சென்ற பாதையில் உள்ள புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் பெரும் சேதத்தை உண்டாக்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தை கடந்த போது கீரமங்கலம், வடகாடு, நெடுவாசல் போன்ற பகுதிகளில் ஏராளமான பலா மரங்களையும் பிடுங்கி வீசிவிட்டுச் சென்றது.

பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் என்பதைப் போல் சில மாதங்களுக்கு முன்பு வரை வறட்சியால் பாதிப்பு. இன்றோ புயல்-மழையால் பாதிப்பு.

வறட்சி நிவாரணத்துக்காக போராடிக்கொண்டிருந்த விவசாயிகள், இன்று புயல் நிவாரணத்துக்காக போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.



டெல்டா மாவட்டங்களில் சொல்லிக்கொள்ளும்படியாக தொழிற்சாலைகள் எதுவும் கிடையாது. இங்குள்ள மக்களின் பிரதான தொழிலே விவசாயம்தான். அவர்களுடைய வாழ்க்கை முறை இயற்கையை நம்பியது. மழை வஞ்சித்ததாலும், கர்நாடகம் கைவிரித்ததன் காரணமாக காவிரி வறண்டதாலும் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்டா மாவட்ட விளைநிலங்கள் வானம் பார்த்த பூமியாக கிடந்தன. ஓரளவு வசதியுள்ள விவசாயிகள் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலம் ஓரளவு விவசாயம் செய்து குடும்ப செலவுகளையும், பிள்ளைகளை படிக்க வைப்பதற்கான செலவுகளையும் சமாளித்து வந்தார்கள். இப்படி கைக்கு எட்டாமலும், வாய்க்கு எட்டாமலும்தான் அவர்களுடைய வாழ்க்கை சக்கரம் ஓடிக் கொண்டிருந்தது.

வருண பகவான் காட்டிய கருணையால் இந்த ஆண்டில் கர்நாடக அணைகள் முன்கூட்டியே நிரம்பின. வேறு வழியின்றி கர்நாடகம் உபரிநீரை திறந்து விட்டதால் மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

காய்ந்து வெடித்துப்போய் கிடந்த விளைநிலங்கள் மீண்டும் பசுமை போர்வையை போர்த்த தொடங்கின. விவசாயிகளின் கண்களில் நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிந்தது.

வருண பகவான் டெல்டா விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்துவிட்டான் என்று எல்லோரும் மகிழ்ந்திருந்த வேளையில், கஜா பு(ப)யல் வந்து அவர்களுடைய மகிழ்ச்சியை ஒரே நாளில் கொள்ளையடித்துச் சென்றுவிட்டான்.

இயற்கையின் மழைக்கரம் கொடுத்ததை, புயல் கரம் பறித்துச் சென்று விட்டது.

ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, வேதாரண்யம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு டெல்டா பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் குவைத், துபாய், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூர், மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வேலை செய்கிறார்கள்.

இவர்கள் அங்கு சம்பாதிக்கும் பணத்தை தங்கள் குடும்ப தொழிலான விவசாயத்திலேயே முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய ஒட்டுமொத்த முதலீடும் இப்போது விழலுக்கு இரைத்த நீராகிவிட்டது.

நெற்களஞ்சியத்தில் பெருமையுடன் வாழ்ந்த விவசாயிகள் இன்று சோற்றுக்காகவும், குடிநீருக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்குக்கு கூட மிஞ்சாது என்பார்கள். அப்படி, விவசாயத்தில் சொல்லிக் கொள்ளும்படியாக வருமானம் இல்லாவிட்டாலும், பரம்பரை பரம்பரையாக செய்து வரும் தொழிலை விட்டுவிட விவசாயிகளுக்கு மனம் வருவது இல்லை. அவர்களுடைய அந்த வைராக்கியம்தான், முற்றிலுமாக அழிந்து போய்விடாமல் விவசாய தொழிலை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது; மற்றவர்களுக்கும் சோறு கிடைக்கச் செய்கிறது.

இந்த கஜா விவசாயிகளின் வாழ்விடத்தை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்தத்தில் அவர்களுடைய வாழ்வாதாரத்தையே சீரழித்து, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

இது ஜீபூம்பா கதை அல்ல. கஜா புயல் பாதிப்புகளை ஒரே நாளில் சீர்செய்துவிட முடியும் என்று நினைப்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது.

ஒரு கை ஓசை எழுப்பாது. மனமாச்சரியங்களையும், கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு எல்லோரும் கரம் கோர்க்க வேண்டும்.

ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருக்காமல் அனைத்துக் கட்சியினரும் ஒன்றுபட்டு களத்தில் இறங்கவேண்டும்.

கேரளாவில் சமீபத்தில் வரலாறு காணாத மழை-வெள்ள சேதம் ஏற்பட்ட போது அங்குள்ளவர்கள் எப்படி ஒற்றுமையுடன் செயல்பட்டு அந்த பாதிப்பில் இருந்து மீண்டார்களோ, அதே ஒற்றுமை உணர்வு இங்கும் வரவேண்டும்.

டெல்டா விவசாயிகளின் கண்ணீரை துடைத்து, அவர்களுடைய வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சி வெள்ளம் பெருக, ஒட்டு மொத்த தமிழகமும் உதவ முன்வரவேண்டும். அதுதான் சோறுபோட்ட அவர்களுக்கு நாம் செலுத்தும் மிகச்சிறந்த நன்றிக் கடனாக இருக்க முடியும். 

நிவாரண உதவி வழங்குவதில் தவிப்பு

வார்தா புயல் கடந்த 2016-ம் ஆண்டு சென்னை நகரை தாக்கியபோது வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் ஏராளமான வீடுகள் மூழ்கின.

அப்போது மீட்புப்பணிகளில் ஈடுபடவும், நிவாரண உதவிகளை செய்யவும் தாமாகவே பல்லாயிரணக்கணக்கானோர் முன்வந்தனர். நிவாரண பொருட்களை சேகரித்து வழங்கினார்கள். பல்வேறு ஊர்களில் இருந்து மட்டும் அல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் உதவிப் பொருட்கள் வந்து குவிந்தன.

ஆனால் இப்போது கஜா புயல் தாக்குதலில் சீர்குலைந்த டெல்டா மாவட்டங்களுக்கு அந்த அளவுக்கு நிவாரண பொருட்களோ, நிதி உதவியோ இதுவரை வந்து சேரவில்லை. புயலின் பாதிப்பு இந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று தொடக்கத்தில் அரசு எதிர்பார்க்கவில்லை. இதனால்தான் பொதுமக்கள், தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்களிடம் இருந்து நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவியை பெறுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பத்தில் முனைப்பு காட்டவில்லை.

நிவாரண பொருட்கள், நிதி உதவியை பெறுவதில் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் பலர், யாரிடம் பொருட்களை, பணத்தை கொடுப்பது என்று தவிக்கிறார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் யாருக்கு உதவிப் பொருட்களையும் பணத்தையும் அனுப்பி வைப்பது என்று தெரியாமல் திண்டாடுவதாக கூறப்படுகிறது. இந்த குறையை அரசு உடனடியாக தீர்த்து வைக்கவேண்டும். 

தனுஷ்கோடியை அழித்த புயல்

தமிழகத்தை ஒகி, தானே, வார்தா, கஜா என்று பல புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், தனுஷ்கோடியை தாக்கிய புயல், பேரழிவை ஏற்படுத்தி வரலாற்று பதிவாக அமைந்துவிட்டது. வங்க கடலில் உருவாகி இலங்கையை கடந்து தமிழகத்தை நோக்கி வந்த அந்த புயல் 1964-ம் ஆண்டு டிசம்பர் 22-ந் தேதி நள்ளிரவு 11.55 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை தாக்கியது. மணிக்கு 260 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல் காற்று, மழையில் சிக்கி தனுஷ்கோடி உருக்குலைந்து நாசமானது.



பாம்பன்-தனுஷ்கோடி ரெயில் பாதையும், தனுஷ்கோடி ரெயில் நிலையமும் இருந்த இடமே தெரியாமல் போனது. சுழன்றடித்த பேய்க்காற்றும், கடலில் 7½ மீட்டர் உயரத்துக்கு எழுந்த ராட்சத அலைகளும் பாம்பன்-தனுஷ்கோடி பயணிகள் ரெயிலை சுருட்டி வாரி கடலுக்குள் வீசின.

புயலின் அகோர பசிக்கு ரெயில் பயணிகள் 115 பேர் உள்பட 1,800 பேர் பலி ஆனார்கள்.

முற்றிலுமாக அழிந்த தனுஷ்கோடியில் சில இடிபாடுகளின் மிச்சம் மட்டும் புயல் தாக்குதலின் பயங்கரத்தை காட்டும் சுவடுகளாக மிஞ்சின. இதனால் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக தனுஷ்கோடி அறிவிக்கப்பட்டது.

அந்த காலக்கட்டத்தில் இப்போது இருப்பது போன்ற தகவல் தொடர்பு வசதிகள் கிடையாது. தனுஷ்கோடி அழிந்த தகவலே 2 நாட்களுக்கு பிறகுதான் வெளியுலகுக்கு முழுமையாக தெரியவந்தது.

காலச் சக்கரம் அரை நூற்றாண்டுக்கும் மேல் சுழன்று விட்டது. தனுஷ்கோடி இப்போதும் புயலின் அழிவுச்சின்னமாகத்தான் விளங்குகிறது. பூமியின் வரைபடத்தில் உள்ள எந்த ஒரு நிலப்பகுதிக்கும் இப்படி நிலை ஒரு வரக்கூடாது. 

‘பாட்டன் பாட்டி வச்ச மரம்’

பிரபல கிராமிய இசைக்கலைஞர் புஷ்பவனம் குப்புசாமியின் சொந்த ஊர் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராமம் ஆகும்.

இயற்கை எழில் நிறைந்த இந்த கிராமம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான தென்னை, மா, முந்திரி, வாழை மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன.

இதுபற்றி புஷ்பவனம் குப்புசாமி கூறுகையில், “பெற்ற பிள்ளை கொடுக்காவிட்டாலும் வைத்த பிள்ளை கொடுக்கும் என்பது பழமொழி. எங்களுக்கு அன்னையாய் இருந்த தென்னை சாய்ந்துவிட்டது. பெற்ற பிள்ளை அழுதுகொண்டு நிர்க்கதியாய் நிற்கிறது. வைத்த பிள்ளை சாய்ந்து கிடக்கிறது” என்று மிகுந்த வருத்தத்துடன் கூறினார்.

இந்த புயல், மரத்தைக் கொன்று, மாட்டைக் கொன்று, வீட்டை சூறையாடி, கோழிக்கூட்டை சூறையாடி 20 ஆண்டுகளுக்கு தங்களை மீள முடியாத ஏழையாக்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கஜா புயல் பாதிப்பு குறித்து அவர் பாடிய...

பாட்டன் பாட்டி வச்ச மரம்!
பரம்பரையா வந்த மரம்!
அப்பன் ஆத்தா நட்ட மரம்!
ஆதரவா நின்ன மரம்!
நான் பார்த்து வச்ச மரம்!
நல்லபடி காய்ச்ச மரம்!
புள்ளக்குட்டி படிப்புக்கு
பூத்தமரம்! காய்ச்சமரம்!
வேரோட சாஞ்சி கிடக்குதே
அய்யய்யோ! எங்க
வெவசாயம் பாழாப் போச்சுதே!

- என்று தொடங்கும் பாடலும் மிகவும் உருக்கமாக இருந்தது. 

Next Story