காவிரியை தடுக்குமா மேகதாது?


காவிரியை தடுக்குமா மேகதாது?
x
தினத்தந்தி 9 Dec 2018 5:38 AM GMT (Updated: 9 Dec 2018 5:38 AM GMT)

“சோதனை மேல் சோதனை போதுமடா சாமி... வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி...” -காவிரி டெல்டா விவசாயிகளின் நிலைமை இன்று இப்படித்தான் இருக்கிறது.

உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரு பக்கம் இடி. ஆனால் டெல்டா விவசாயிகளுக்கோ எல்லா பக்கமும் இடி.

“பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்” என்பது போல், அவர்களுக்கு அடுத்தடுத்து சோதனைகள் வந்து கொண்டே இருக்கின்றன.

சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாமல் வஞ்சித்ததால் கடந்த சில ஆண்டுகளாக வறட்சியின் பிடியில் சிக்கி தவித்த விவசாயிகளுக்கு, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் வருண பகவான் கருணை காட்டினார். மேட்டூர் அணை நிரம்பி, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காவிரி தாயின் கருணையினால், வறண்டு கிடந்த டெல்டா பூமி பசுமை போர்த்திய போது, கஜா புயலின் வடிவில் வந்தது அடுத்த சோதனை. இந்த கஜா, வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டுவிட்டதால், இனி எப்போது மீண்டும் எழுந்து நிற்பது என்று தெரியாமல் விவசாயிகள் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், மேகதாது அணை என்ற பெயரில் அடுத்த பேரிடி அவர்களை தாக்கி இருக்கிறது.

இந்த பிரச்சினை தமிழகத்துக்கு புதிய ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஏற்கனவே காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விடாமல் பல்வேறு சாக்குப்போக்குகளை சொல்லி சண்டித்தனம் செய்யும் கர்நாடகம், இப்போது மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறது.

நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளின்படி தமிழகத்துக்கு வழங்கவேண்டிய தண்ணீரை கர்நாடகம் இதுவரை ஒரு வருடம் கூட முறைப்படி முழுமையாக திறந்து விட்டது இல்லை. பெரும்பாலும் நன்றாக மழை பெய்து அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பி வழிந்தால் மட்டுமே, வேறு வழியில்லாமல் உபரி நீரை தமிழகத்துக்கு திறந்து விடுகிறது. மேகதாது அணை கட்டப்பட்டு விட்டால், இனி அந்த உபரிநீரும் தமிழகத்துக்கு கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும் ஆபத்து உள்ளது.

கர்நாடகத்தில் ஏற்கனவே காவிரி பாசன பகுதிகளில் மைசூர் அருகே 49 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் (மண்டியா மாவட்டம்), 19.52 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கபினி (மைசூர் மாவட்டம்) ஆகிய இரு பெரிய அணைகள் உள்ளன.

குடகு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலைக்காவிரி என்ற இடத்தில் உற்பத்தியாகும் காவிரியில் இருந்து வரும் நீரும், ஹேமாவதி, ஹாரங்கி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வந்து சேரும். அந்த அணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் நீர் தமிழகத்துக்கு வந்து சேரும். இதேபோல் கபினி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியுடன் கலக்கிறது.

அதாவது தற்போது கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்தும், கபினி அணையில் இருந்தும் வெளியேறும் தண்ணீர் சமவெளி, மலைப்பகுதிகளை கடந்து தமிழக எல்லையான பிலிகுண்டுலு என்ற இடத்துக்கு வருகிறது. இடையில் கர்நாடகத்தில் நீர்ப்பாசனத்துக்கும், குடிநீருக்கும் காவிரி நீர் பயன்படுகிறது. பிலிகுண்டுலுவில்தான், காவிரியில் தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது என்று அளவிடப்படுகிறது.

ஆனால் இப்போது பிலிகுண்டுலுவுக்கு முன்பே அதாவது கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதிதாக ஒரு அணையை கட்டி, தமிழகத்துக்கு தண்ணீர் வருவதை தடுக்க கர்நாடக அரசு ஆயத்தமாகிவிட்டது.

காவிரி பெரும் அருவியாக கொட்டும் ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது இந்த மேகதாது.

கிருஷ்ணராஜ சாகர், கபினி மற்றும் பிலிகுண்டுலுவுக்கு இடைப்பட்ட பகுதியில் தமிழகத்துக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தண்ணீர் அந்த இடத்தில் தடுத்து நிறுத்தப்படும். இதனால் பிலிகுண்டுவுக்கு தண்ணீர் வருவது கேள்விக்குறிதான்.

அந்த இடத்தில் காவிரியின் இரு பக்கமும் அரண்கள் போல் பெரிய மலைகள் உள்ளன. இதனால் அணை கட்டுவதற்கு சரியான இடம் என்று அந்த இடத்தை கர்நாடக அரசு தேர்ந்து எடுத்து இருக்கிறது. இந்த அணைக்கு 4,996 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 4,716 ஹெக்டேர் நிலம் வனப்பகுதியில் வருகிறது. மீதமுள்ள 280 ஹெக்டேர் நிலம் வனப்பகுதியை சாராதது.

இந்த அணை கட்டப்பட்டால் 2,500 ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும் என்று பெங்களூருவைச் சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், தனியார் நிலங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும் கர்நாடக நீர்ப்பாசன துறை மந்திரி எம்.பி.பட்டீல் கூறி உள்ளார்.

இந்த அணை கட்டப்பட்டால் கிருஷ்ணராஜ சாகர் அணையை விட மிகப்பெரியதாக இருக்கும்.

1980-களில் காங்கிரஸ் ஆட்சியின் போது குண்டுராவ் முதல்-மந்திரியாக இருந்தபோதுதான் மேகதாது அணை கட்டுவதற்கான திட்டம் தீட்டப்பட்டது. பின்னர் பல ஆண்டுகளாக கிணற்றில் போட்ட கல்லாக இருந்த அந்த திட்டத்தை 2012-ல் கர்நாடக அரசு மீண்டும் கையில் எடுத்தது.

இதை அறிந்த அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முடியாது என்றும், மீறி கட்ட முயன்றால் எந்த சூழ்நிலையிலும் தமிழகம் அனுமதிக்காது என்றும் கடுமையாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

ஆனால் அதை கர்நாடக அரசு பொருட்படுத்தவில்லை. மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட வரைவு அறிக்கையை தயாரிப்பதற்காக 2015-ம் ஆண்டு கர்நாடக அரசின் பட்ஜெட்டில் ரூ.25 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தகோரி தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசின் மனுவுக்கு அப்போது சுப்ரீம் கோர்ட்டில் பதில் அளித்த கர்நாடகம், நீர்மின் திட்டத்தை செயல்படுத்துவதற்காகவே மேகதாதுவில் அணை கட்ட இருப்பதாகவும், இதனால் தமிழகத்துக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும் கூறியது.

இந்த நிலையில், மேகதாதுவில் ரூ.5,912 கோடி செலவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்து, அணை கட்டுவதற்கான அனுமதியை கோரியது. அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வழங்குமாறு கர்நாடக நீர்ப்பாசன துறைக்கு சமீபத்தில் உத்தரவிட்டது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேகதாது அணை திட்டத்தை எதிர்த்தும், தமிழகத்துக்கு நீதி வழங்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டின் கதவுகளை தமிழக அரசு தட்டி இருக்கிறது.

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, தமிழகத்தின் அனுமதி இல்லாமல் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட முடியாது. ஆனால் அந்த தீர்ப்புகளை மீறும் வகையில் கர்நாடகம் காய்களை நகர்த்தி வருகிறது.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறிவிட்டதாக மத்திய, கர்நாடக அரசுகள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கும் தொடர்ந்து இருக்கிறது. சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளது.

இதற்கிடையே, மேகதாது அணை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், இந்த திட்டத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்றும் அந்த ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் கூறி இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னை உள்பட 11 மாவட்டங்கள் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் காவிரியைத்தான் நம்பி இருக்கின்றன. சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரியில் இருந்து வரும் காவிரி நீரின் பங்களிப்பும் உள்ளது.

காவிரி நீரின் மூலம் தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அந்த நதி வறண்டால் தமிழகத்தில் நெல் உற்பத்தி வெகுவாக குறையும். குடிநீருக்கே அல்லாட வேண்டிய பரிதாப நிலைக்கு தமிழகம் தள்ளப்படும்.

எனவே மேகதாது அணையை தடுத்து நிறுத்தி, தமிழகம் பாலைவனம் ஆகாமல் தடுப்பது தமிழக மக்கள் அனைவரின் கடமை ஆகும். இந்த விஷயத்தில் கட்சிகள் அரசியல் செய்யாமல், லாப-நஷ்டங்களை கணக்கு போட்டு பார்க்காமல், கருத்து வேறுபாடுகளை மறந்து ஓரணியில் திரண்டு குரல் எழுப்ப வேண்டும். இந்த விஷயத்தில் கர்நாடக அரசியல் கட்சிகளிடம் உள்ள ஒற்றுமை இங்கும் வரவேண்டும். அரசியல் நோக்கத்தோடு சித்து விளையாட்டில் ஈடுபட்டால் வருங்கால சமுதாயம் அவர்களை மன்னிக்காது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு.

காவிரி நீரில் தமிழகத்தின் பங்கு எவ்வளவு?

காவிரி மற்றும் கபினி, பவானி போன்ற அதன் உபநதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மொத்தம் 740 டி.எம்.சி. நீர் கிடைப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரை தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் பங்கிட்டு கொள்வது தொடர்பான தீர்ப்பை கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கியது.

அதை எதிர்த்து சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மொத்தம் கிடைக்கும் 740 டி.எம்.சி.யில் தமிழகத்தின் பங்கு 404.25 டி.எம்.சி. என்றும், கர்நாடகத்தின் பங்கு 284.75 டி.எம்.சி. என்றும், கேரளாவின் பங்கு 30 டி.எம்.சி. என்றும், புதுச்சேரியின் பங்கு 7 டி.எம்.சி. என்றும் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. 14 டி.எம்.சி. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கடலில் கலக்கும் நீர் என கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

காவிரியில் தமிழகத்துக்கான பங்கு 404.25 டி.எம்.சி. என்றபோதிலும், கர்நாடகம் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரின் அளவு 177.25 டி.எம்.சி.தான். மீதம் உள்ள 227 டி.எம்.சி. பவானி, அமராவதி போன்ற காவிரியின் உபநதிகளில் இருந்து கிடைப்பதாக கணக்கில் கொள்ளப்படும்.

நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பில், கர்நாடகம் தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 192 டி.எம்.சி. நீர் திறந்து விடவேண்டும் என்று கூறி இருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அதை 177.25 டி.எம்.சி.யாக குறைத்துவிட்டது. அதாவது 14.75 டி.எம்.சி. தண்ணீரை குறைத்தது தமிழக விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

அதேசமயம், கர்நாடகத்துக்கு நடுவர் மன்றம் ஒதுக்கி இருந்த 270 டி.எம்.சி.யை, 284.75 டி.எம்.சி.யாக சுப்ரீம் கோர்ட்டு அதிகரித்துவிட்டது. அதாவது தமிழகத்தின் பங்கில் குறைக்கப்பட்ட 14.75 டி.எம்.சி. பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கர்நாடகத்துக்கு ஒதுக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது.

மேகதாது அணை-ஒரு கண்ணோட்டம்

அணையின் நீளம் 660 மீட்டர்

அணையின் உயரம் 99 மீட்டர்

மதகுகள் எண்ணிக்கை 17

ஒவ்வொரு மதகின் அளவு 15 மீ. அகலம், 12 மீ. உயரம்

அணையின் கொள்ளளவு 66.85 டி.எம்.சி.

அதிகபட்ச நீர் வெளியேற்றம் வினாடிக்கு 8 லட்சம் கன அடி

மின்சாரம் தயாரிப்பு 400 மெகாவாட்

திட்ட மதிப்பீடு ரூ.5,912 கோடி

பெங்களூருவுக்கு குடிநீர்

பெங்களூருவில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் ராமநகரம் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் அமைந்துள்ளது மேகதாது. இங்கு அணை கட்டி, குடிநீர் பற்றாக்குறையில் தவிக்கும் பெங்களூருவுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல கர்நாடகம் திட்டமிட்டு இருக்கிறது.

உலகில் மிகவேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் பெங்களூருவும் ஒன்று. அதிகரித்து வரும் மென்பொருள் நிறுவனங்களின் காரணமாக அங்கு மக்கள் தொகை வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது 1 கோடியே 10 லட்சமாக இருக்கும் பெங்களூருவின் மக்கள் தொகை 2031-ல் 2 கோடியை எட்டிவிடும் என கணிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 1,800-ம் ஆண்டு வாக்கில் 35 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கக்கூடிய அளவுக்கு அங்கு ஏரிகள் இருந்தன. நகரமயமாக்கலின் விளைவாக அங்குள்ள ஏரிகள் பல சுருங்கிவிட்டன.

ஏற்கனவே அங்கு நிலத்தடி நீர் பாதாளத்துக்கு சென்றுவிட்டதால், வருங்காலத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்று கர்நாடக அரசு அஞ்சுகிறது. அதனால்தான் மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவதில் மிகுந்த அவசரம் காட்டுகிறது. மேகதாது திட்டத்தின் மூலம் பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 16.10 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆடு தாண்டும் காவிரி

கன்னட மொழியில் ‘மேகே தாட்டு’ என்பது தமிழில் மேகதாது என்று சொல்லப்படுகிறது. ‘மேகே’ என்றால் ஆடு; ‘தாட்டு’ என்றால் தாண்டுதல். எனவே மேகதாது என்றால் கன்னட மொழியில் ஆடு தாண்டுதல் என்று பொருள். இந்த பெயர் வந்ததற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.

முன்னொரு காலத்தில் அந்த பகுதியில் சிலர் ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு புலி உணவுக்காக, ஆடு ஒன்றை துரத்த ஆரம்பித்தது. இதனால் உயிர் தப்புவதற்காக அந்த ஆடு தலைதெறிக்க ஓடியது. அந்த சமயத்தில் வழியில் பாறைகளுக்கு இடையே குறுகிய அகலத்தில் பள்ளத்தில் ஓடிய காவிரி ஆறு குறுக்கிட்டது.

புலியிடம் இருந்து எப்படியும் தப்பி விட வேண்டும் என்ற வேகத்தில், அந்த ஆடு காவிரியை தாண்டி மறுபக்கம் குதித்தது. ஆனால் துரத்தி வந்த புலி, “இன்று அதிர்ஷ்டம் இல்லை” என்று கருதி, காவிரியை தாண்டும் முயற்சியை கைவிட்டுவிட்டு ஏமாற்றத்துடன் வந்த வழியே திரும்பிவிட்டது. காவிரியை ஆடு தாண்டியதால் அந்த இடம் ஆடு தாண்டும் காவிரி என்று அழைக்கப்படுகிறது.

அந்த இடத்தில் காவிரியை தாண்டிய ஆடு சிவபெருமான் என்றும், ஆட்டின் காலடி குழம்பு பட்ட இடம் அங்கு அடையாளமாக தெரிவதாகவும் கூறப்படுகிறது. அந்த காலடி தடம் வழக்கமான ஆட்டின் காலடி தடத்தை விட பெரிதாக பள்ளமாக காணப்படுவதால், அது தெய்வீகதன்மை பொருந்திய ஆடு என்றும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

ஆடு தாண்டும் அளவுக்கு குறுகலாக ஓடிய காவிரி, பல ஆண்டுகளாக பாறைகளில் ஏற்பட்ட அரிப்பின் காரணமாக, தற்போது அந்த இடத்தில் 10 மீட்டர் அகலத்தில் ஓடுகிறது. 

Next Story