தினம் ஒரு தகவல் : அமெரிக்காவில் நடந்த ஆய்வு


தினம் ஒரு தகவல் : அமெரிக்காவில் நடந்த ஆய்வு
x
தினத்தந்தி 11 Jan 2019 8:47 AM GMT (Updated: 11 Jan 2019 8:47 AM GMT)

மருந்து, மாத்திரை விற்பனைக்காக தொலைக்காட்சிகளில் வெளியாகும் சில விளம்பரங்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

டாக்டர்களுடைய மருத்துவ பரிந்துரையுடனோ அல்லது பரிந்துரை இல்லாமலோ உட்கொள்ளப்படும் மருந்துகள் தொடர்பானவை இந்த விளம்பரங்கள். வாடிக்கையாளர்களுக்கு அதாவது நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்துகள் குறித்து தகவல் தெரிவிக்கவா அல்லது தேவையே இல்லாவிட்டாலும் வாங்கிப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கவா இந்த விளம்பரங்கள் என்ற விவாதம் ஆய்வர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையில் கடந்த 15ஆண்டுகளாக நடந்து வருகிறது. இன்னும் முடிவுதான் எட்டப்படவில்லை.

அமெரிக்காவில் 2008 முதல் 2010-ம் ஆண்டு வரையில் ஒளிபரப்பப்பட்ட 168 மருத்துவ விளம்பரங்களை அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். இந்த விளம்பரங்களை உண்மையானவை, தவறானவை, தவறாக வழிகாட்டக்கூடியவை, ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாதவை என்ற ரகங்களாகப் பிரித்தனர். தகவல் ரீதியாகத் தவறானவை, ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாதவை என்ற ரகத்தில் ஒரு சதவீத விளம்பரங்கள்தான் இருந்தன. தவறான விளம்பரங்கள் என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தண்டிக்க அமெரிக்க சட்டம் இடம் தருகிறது. அதே நேரத்தில் 60 சதவீத விளம்பரங்கள் தவறாக வழிகாட்டும் விதத்தில் இருந்தன.

முக்கியமான தகவல்களை தெரிவிக்காமலும், ஒரு விஷயத்தை மிகைப்படுத்தியும், தங்களுடைய கருத்தை ஏற்றியும், தேவையில்லாத விதத்தில் வாழ்க்கை முறைக்கும், நோய்க்கும் தொடர்புபடுத்தியும் அந்த விளம்பரங்கள் இருந்தன. டாக்டர்கள் பரிந்துரையின்றி வாங்கக்கூடிய மருந்துகள் விஷயத்தில்தான் தவறான வழிகாட்டல்கள் அதிக அளவில் இருந்தன. டாக்டர்கள் பரிந்துரைப்படி வாங்க வேண்டிய மருந்துகள் விஷயத்தில் 60 சதவீத அளவும், டாக்டர்கள் பரிந்துரையின்றி நாமாகவே கடைகளில் கேட்டு வாங்கக்கூடிய மருந்துகளில் 80சதவீத அளவுக்கும் இந்த தவறான வழிகாட்டல்கள் இருந்தன.

எனவே தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்க ஆரம்பித்துள்ளன. நம்மூரிலும் இப்படி ஓர் ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

Next Story