பாஸ்போர்ட்: சில சுவாரசியத் தகவல்கள்


பாஸ்போர்ட்: சில சுவாரசியத் தகவல்கள்
x
தினத்தந்தி 12 Jan 2019 12:34 PM GMT (Updated: 12 Jan 2019 12:34 PM GMT)

நாம் உலகத்தின் பல பகுதிகளுக்கும் பறப்பதற்குத் தேவையான அவசிய ஆவணம், கடவுச்சீட்டு எனப்படும் பாஸ்போர்ட்.

பாஸ்போர்ட்டுக்கு நீண்ட வரலாறு உண்டு. பைபிள் காலத்திலேயே ‘பாஸ்போர்ட்’ போன்ற ஆவணம் பயன்பாட்டில் இருந்தது உங்களுக்குத் தெரியுமா?

பாரசீக அரசரான ஒன்றாம் அர்டாக்செர்செக்ஸ், நெஹேமியா என்பவர் யூதேயா வழியாக பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கு கடிதம் ஒன்றை வழங்கினார். அதுதான் முதல் பாஸ்போர்ட் எனக் கருதப்படுகிறது.

இதுபோல பாஸ்போர்ட் பற்றிய மேலும் சில சுவாரசியத் தகவல்கள்...

ஸ்காண்டிநேவிய பாஸ்போர்ட் மீது புற ஊதாக் கதிர் வெளிச்சத்தைப் பாய்ச்சினால், வானவில் போல வானில் வெவ்வேறு வண்ணங்களைக் காட்டும் ‘நாதர்ன் லைட்ஸ்’ போன்ற ஒளி ஜாலத்தைப் பார்க்க முடியும்.

பாஸ்போர்ட்டில், அதற்கு உரியவரின் படம் அவசியம். முதல் உலகப்போர் துவங்கிய பிறகுதான் பாஸ்போர்ட்டில் புகைப்படம் இருக்க வேண்டியது கட்டாயமானது. ஜெர்மனிக்காக உளவு வேலை பார்த்த ஒருவர் ஒரு போலி அமெரிக்க பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இங்கிலாந்துக்குள் நுழைந்தார். இதையடுத்து பாஸ்போர்ட்டில் புகைப்படம் நிச்சயம் தேவை என்ற நிலை கொண்டுவரப்பட்டது.

அமெரிக்காவில் ஒருவர் தமது எடையைக் குறைத்தாலோ அல்லது அதிகரித்தாலோ பாஸ்போர்ட்டில் புகைப்படத்தைப் புதுப்பிக்க வேண்டியது அவசியம்.

அதேபோல, முக அறுவைசிகிச்சை செய்துகொண்டாலோ அல்லது முகத்தில் பெரிய அளவில் பச்சை குத்திக்கொண்டாலோ, ஏற்கனவே பச்சை குத்தியிருந்ததை நீக்கினாலோ அல்லது முகத்தின் எந்தவொரு பகுதியிலாவது துளை யிட்டு அணிகலன்களை அணிந்தாலோ கூட பாஸ்போர்ட்டில் புகைப்படத்தைப் புதுப்பிக்க வேண்டும்.

பாஸ்போர்ட் அறி முகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஒருவர் தமக்குப் பிடித்த எந்த ஒரு புகைப் படத்தையும் பாஸ் போர்ட்டுக்குக் கொடுக்கலாம். குடும்பத்தோடு இருக்கும் குழு புகைப்படம் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பாஸ்போர்ட் காலாவதி ஆகும் தேதி நெருங்கும் சமயத்தில் வெளிநாட்டுக்கு பயணம் செய்யத் திட்டமிடக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றில், ஒருவர் தங்கள் நாட்டுக்குள் நுழைந்ததும் அவரது பாஸ்போர்ட்டில் காலாவதி தேதிக்கு குறைந்தபட்சம் 90 நாட்களாவது மீதமிருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பார்கள்.

ஆனால், பாஸ்போர்ட் காலாவதி ஆவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது நல்லது. காரணம், சீனா, இந்தோனேசியா, ரஷ்யா, சவுதி அரேபியா மற்றும் சில நாடுகளில் ஆறு மாதங்களாவது செல்லுபடியாகக் கூடியதாக பாஸ்போர்ட் இருக்க வேண்டும்.

பாப்புவா நியூ கினியாவில் உள்ள ஒன்பது பிரத்யேக கடற்கரை கிராமங் களைச் சேர்ந்தவர்கள், குயின்ஸ்லாந்து மாகாணம் வாயிலாக ஆஸ்திரேலி யாவுக்குள் பாஸ்போர்ட் இன்றிப் பிரவேசிக்கலாம். பாப்புவா நியூ கினியா சுதந்திரம் பெற்றபோது உண்டான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்படுகிறது.

கத்தோலிக்கத் திருச்சபை அமைந்துள்ள வாட்டிகனில் குடிவரவு கட்டுப்பாடு இல்லை. ஆனால் போப், வாட்டிகனின் நம்பர் 1 பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறார்.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் ஓர் அறிக்கையின்படி 32.13 கோடி அமெரிக்கர்களில் 12.15 கோடி பேரிடம்தான் பாஸ்போர்ட் உள்ளது.

பசிபிக் தீவுகளில் ஒன்றான டொங்காவில் 1990-களில் பாஸ்போர்ட் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்பட்டது. டொங்கா குடிமகனாகத் தகுதி பெற விரும்பும் வெளிநாட்டவர் எவரும் 20 ஆயிரம் டாலர்கள் செலுத்தி அந்நாட்டு பாஸ் போர்ட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசே அறிவித்தது. அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 2000-க்குப் பின் இந்த நடைமுறை இல்லை.

நம் கையில் பின்லாந்து அல்லது ஸ்லோ வேனியா பாஸ்போர்ட் இருந்தால் கொஞ்ச நேரம் ஜாலியாக பொழுது போக்கலாம். இந்த பாஸ்போர்ட்களில் உள்ள பக்கங்களை வேகமாகத் திருப்பினால், ஒவ்வொரு பக்கத்தின் கீழும் படங்கள் இருப்பதால் அவை உங்களுக்கு ஒரு நகரும் படத்தைப் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரும்.

நிகரகுவா பாஸ்போர்ட்டில் ஹோலோகிராம், வாட்டர்மார்க் உள்ளிட்ட வெவ்வேறான 89 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. உலகிலேயே முறைகேடு செய்வதற்கு கடினமான பாஸ்போர்ட் ஆக நிகரகுவா பாஸ்போர்ட் கருதப்படுகிறது.

இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபத் பாஸ்போர்ட் எடுக்க வேண்டியது குறித்து கவலைப்படத் தேவையில்லை. நாட்டின் குடிமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்க அனுமதி அளிக்கும் அவருக்கு பாஸ்போர்ட் தேவையே இல்லை. எனினும், ரகசிய ஆவணங்கள் தேவை.

அரசியின் தூதுவர்கள் உலகம் முழுவதும் இந்த ரகசிய ஆவணத்தைக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்வார்கள். இந்த ஆவணங்களே பாஸ்போர்ட் போல செயல்படும்.

Next Story