காசநோயை கருவறுப்போம்...!


காசநோயை கருவறுப்போம்...!
x
தினத்தந்தி 24 March 2019 6:52 AM GMT (Updated: 24 March 2019 7:58 AM GMT)

இன்று (மார்ச்24-ந்தேதி) சர்வதேச காசநோய் தினம்

இந்தியாவில் ஒரு நாளைக்கு 1,000 பேர் காசநோயால் மரணமடைகிறார்கள். 3 லட்சம் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர முடியாமல் பாதியிலே நிறுத்திவிடுகிறார்கள். ஒரு லட்சம் பெண்கள் அபலைகளாகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பண்டைய எகிப்தில் ஒரு விநோத பழக்கம் இருந்து வந்தது. இறந்தவர்களை புதைக்கவோ, எரிக்கவோ மாட்டார்கள். சில வகை மூலிகை கசாயங்களை இறந்தவர் உடலில் செலுத்தி அந்த உடல்களை பிரமிடுகளில் வைத்து பாதுகாத்து வந்தனர். இப்படி பதப்படுத்தப்பட்ட உடல்களுக்கு மம்மி என்று பெயரிட்டனர்.

இந்த மம்மிகள் இன்றளவும் பாதுகாப்பாக இருக்கிறது என்பது ஆச்சரியமான உண்மை. இந்த மம்மிகளில் ஆராய்ச்சி மேற்கொண்ட விஞ்ஞானிகளுக்கு சில அதிர்ச்சி தகவல்கள் அவற்றுள் ஒளிந்து கொண்டிருந்தது. கி.மு.3,500 ஆண்டுகளுக்கு முன் உள்ள ஒரு மம்மியை ஆராய்ந்தபோது அதில் காசநோய் பாதிப்பு உள்ளது தெரியவந்தது. விஞ்ஞானபூர்வமாக சுமார் 5,500 ஆண்டுகள் இந்த காசநோய் மனிதகுலத்தில் தாண்டவமாடி வருகிறது.

யசூர் வேதத்தில் இந்த நோயை ராஜயக்ஷ்மா என்று பெயரிட்டு நிலவு இந்த நோயால் பீடிக்கப்படுவதால் தேய்ந்து கொண்டே போகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். ஷேக்ஸ்பியர், சார்லஸ் டிக்கன்ஸ் போன்ற பிரபல எழுத்தாளர்களின் நாவல்களிலும் காசநோய் பாதித்த கதாபாத்திரங்கள் இடம் பெறுகின்றன. இவற்றில் இருந்து நாம் தெரிந்துகொள்வது காசநோய் உலகம் முழுவதும் தன் ஆதிக்கத்தை செலுத்தி பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதகுலத்தை ஆட்டுவித்திருக்கிறது. சரியான மருந்துகள் ஏதும் இன்றி லட்சோப லட்சம் மக்கள் மாண்டிருக்கிறார்கள். அதனால்தான் என்னமோ இந்த நோயோடு பல்வேறு மூடபழக்கங்களும் மூட நம்பிக்கைகளும் தொற்றிக்கொண்டன.

ராஜதுரோகம், தெய்வகுற்றம், முனிவர் சாபம் என்றெல்லாம் இந்த நோய்க்கு காரணங்கள் சொல்லப்பட்டது. அரசன் ஆசீர்வதித்தால் இந்நோய் குணமாகும் என்ற நம்பிக்கையில் இரண்டாம் சார்லஸ் மன்னனிடம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் ஆசிபெற்றனர். இந்த நோய் குறித்த அத்தனை பிற்போக்கு கருத்துகளையும் உடைத்தெறியும் வண்ணம் ராபர்ட் காக் என்ற ஜெர்மானிய மருத்துவர் இரவு பகலாக ஆராய்ந்து காசநோயை உருவாக்குவது ஒரு வகை நுண்கிருமியே என்று 1882-ம் ஆண்டு மார்ச் 24-ந்தேதி உலகிற்கு உரைத்தார். எனவேதான் மார்ச் 24-ந்தேதி உலக காசநோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. காசநோயை உண்டாக்குவது மைக்கோ பாக்டீரியம் டூபர் குளோனின் என்ற கிருமி என்று கண்டுபிடித்த பிறகும் அதனை அழிக்க சுமார் எழுபது ஆண்டுகள் வரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை .இந்த நிலையில் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஹெர்மேன் பிரம்மர் என்ற தாவரவியல் மாணவனுக்கு காசநோய் இருப்பதாக அறியப்பட்டது. அவனுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர்கள் அவனை நல்ல சத்தான உணவு உண்ணவும், தூய காற்றோட்டம் உள்ள இடத்தில் வசிக்கவும் அறிவுறுத்தினர். அதன்படி அந்த ஜெர்மானிய மாணவன் இந்தியாவிலுள்ள இமயமலைக்கு வந்து சேர்ந்தார். சிலகாலம் அங்கு தங்கியிருந்த அவருக்கு நோய் குணமானது. உடனே அவர் மருத்துவம் படிக்க தொடங்கினார். நல்ல காற்றோட்டமுள்ள ஒரு கட்டிடத்தை பெர்லினில் அவர் கட்டினார். அதுவே உலகத்தின் முதல் காசநோயாளிகளின் சானிட்டோரியம். பின்பு உலகின் பல இடங்களிலும் சானிட்டோரியம் கட்டப்பட்டது. 1950களுக்கு பிறகு காசநோய்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு காசநோய் சிகிச்சையில் மாபெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. கூட்டு மருந்து சிகிச்சைக்கு பின் காசநோய் இறப்புகள் பெரும் அளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

இந்த காசநோய் கிருமிக்கு ஒரு வினோத பழக்கம் உண்டு. மனித உடலுக்குள் சென்றவுடன் நோய் உண்டாக்குவதில்லை. மனித உடலுக்குள் அவை ஒரு ஆழ்ந்த தூக்க நிலைக்கு சென்று விடும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும் வரை இந்த நிலையிருக்கும். எதிர்ப்பு சக்தி குறைந்தவுடன் தூக்கம் கலைந்து தன் ஆட்டத்தை மெதுவாக ஆரம்பிக்கும். தொடர் இருமல், ரத்தத்துடன் கூடிய சளி, காய்ச்சல், பசியின்மை, உடல் எடை குறைதல் மற்றும் நெஞ்சு வலி ஆகிய அறிகுறி களை ஏற்பட்ட உடன் உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் மரணத்தை கொடுத்து விடும் இந்த காசநோய்.

காசநோய் கண்டறிவதில் நாம் இமாலய வளர்ச்சி அடைந்துள்ளோம். சாதாரண நுண்ணோக்கியில் ஆரம்பித்து இன்று சிபிநாட் என்ற அதிநவீன கருவி வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிபிநாட் பரிசோதனை அரசாங்க மருத்துவமனைகளில் முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவது இன்றளவும் நடப்பது வேதனைக்குரிய விஷயம். நோய் பாதித்த பெற்றோர்களை குழந்தைகள் தனிமைப்படுத்துவது, மனைவியை கணவன் கை விடுவது, பள்ளி மாணவ-மாணவிகளை பள்ளியில் பயிலாமல் இடைநிறுத்தம் செய்வது என்பதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத அருவருக்கத்தக்க நிகழ்வுகள். காசநோய் பற்றிய பயம் தேவையற்றது. காசநோயை நூறு சதவீதம் குணப்படுத்தலாம். காசநோய் சிகிச்சைக்கு அரசாங்க மருத்துவமனைகளே சிறந்தது. காசநோயை கருவறுப்போம்! வளமான இந்தியாவை உருவாக்குவோம்.

டாக்டர் வி.பி.துரை,

துணை இயக்குனர், மருத்துவபணிகள் காசநோய், கன்னியாகுமரி


Next Story