தமிழ்மொழி செழிக்க தேவையான திட்டங்கள்...!


தமிழ்மொழி செழிக்க தேவையான திட்டங்கள்...!
x
தினத்தந்தி 26 March 2019 5:06 AM GMT (Updated: 26 March 2019 5:06 AM GMT)

செம்மொழி என்பது ஒரு மொழியின் இலக்கிய பழமை அடிப்படையிலும், கலைப்படைப்புகள் அடிப்படையிலும், பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும்.


செம்மொழியாக ஒரு மொழியை தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும், பழமையானதாகவும் அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும். உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகள் அந்த மொழியின் பழமையை உணர்த்தும் சான்றாகவும் இருக்க வேண்டும். கலைப் படைப்புகள் என்பது கட்டிடக்கலை, சிற்பக்கலை போன்ற பழமை வாய்ந்த கலைச் சான்றுகளாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் தான் நம் தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி என்ற தகுதியை பெற்றது. தமிழ் நமது தாய்மொழி. தொன்மையும், இலக்கிய இலக்கண வளமும் வாய்ந்தது. ‘உலகத் தனிச் செம்மொழி’ எனப் பாராட்டப்படும் சிறப்பு மிக்கது. இப்பொழுது தமிழ் பல துறைகளிலும் வளர்ச்சிபெற்று, உலகப் பெருமொழிகளோடு எண்ணப்படும் உயர்நிலை பெற்று வருகிறது. மற்ற மொழிகளுக்கு இல்லாத சில தனித் தன்மைகள் தமிழுக்கு உண்டு.

தாய்மொழியாம் தமிழ்மொழியை உலகமெங்கும் பரவச்செய்ய வேண்டுமென்ற ஆவல் இன்று நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. தீந்தமிழின் தேன் சுவையை உலகத்தோருக்கு அறிவிக்கவும், உலக மொழிகளுக்குச் சமமாகத் தமிழ் மொழியை உயர்த்தவும் பலப்பல புது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ் எம்மொழியின் உதவியும் வேண்டாமல் தனித்தியங்க வல்லது. ‘தமிழ் முதல் மொழி, மூத்த மொழிகளுக்கெல்லாம் முதன்மொழி’ என்ற உண்மையை மொழி நூலார் ஆராய்ந்து நிறுவியுள்ளனர். ‘திராவிட மொழிகள் மிகப் பழமையானவை. அவை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய நாட்டில் வழக்கிலிருந்து வந்துள்ளன. சமஸ்கிருதம் இங்கு நுழைவதற்கு முன்னரே திராவிட மொழிகள் வழக்கில் இருந்தன’ என மொழியியல் அறிஞர் டாக்டர் ச.அகத்தியலிங்கம் கூறுகிறார். “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி” எனப் பழந்தமிழ்க்குடி பாராட்டப்படுகிறது.

தமிழின் தன்மைகள் மூன்று. இயல் தன்மை, இசைத் தன்மை, இயக்கத் தன்மை (நாடகம்) ஆகிய மூன்று தன்மைகளைக் கொண்டு முத்தமிழ் என அழைக்கப்படுவது நம் தமிழ்மொழி. எம்மொழிக்கும் இல்லாத பொருள் இலக்கணம் ஒன்றைப் புதிதாக வகுத்து, அதனைப் புறம், அகம் எனப் பகுத்து, அந்த உணர்வின் அடியொற்றி நூல் இயற்றியவர்கள் தமிழர்கள். எழுத்துகளை உயிர் மெய் எனக் காரணப் பெயரால் அமைத்து வழங்கியது தமிழின் தனிச் சிறப்பு. பன்னிரண்டு உயிர் எழுத்துகள் தனித்து நின்றும், பதினெட்டு மெய்களோடு இரண்டறக் கலந்து நின்றும், மெய்யெழுத்துகளைப் பொருத்தமான இடங்களில் தழுவிக் கொண்டும் சொற்களை உருவாக்கிக் கொண்டிருப்பது தமிழ் மொழி. எம்மொழியைக் காட்டிலும் தமிழில் அறநூல்கள் மிகுதி. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், மூதுரை முதலிய எண்ணற்ற அறநூல்களைக் கொண்டது தமிழ். தமிழ் இயற்கையோடு இயைந்த இனிய மொழி. முயன்று வெளிப்படுத்த வேண்டிய தேவையின்றி, வாயைத் திறந்தவுடன் சிறு முயற்சியால் பிறப்பன தமிழ் எழுத்துக்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிவழியே தொடர்ந்து இலக்கியச் செறிவுடையதாய், இலக்கணக் கட்டுக்கோப்புச் சிதையாததாய் வழங்கி வருவது தனித் தமிழ்மொழி. இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழி மேலும் செழிக்க வளர்ந்து வரும் உலகில் அறிவுத் துறைகள் அனைத்தையும் தன்னுள் கொண்டிருக்கும் கல்வி மொழியாகத் தமிழை வளர்க்க வேண்டும். தமிழ் வளம் பெறுவதற்கான அணுகுமுறை, செயல்முறை பற்றி ஆராய்ந்து பொருத்தமான செயல்முறைகளை காண வேண்டும்.

தமிழகத்தின் கலை, பண்பாடு, இலக்கணம், மொழியியல், வரலாறு, சமயம், மெய்ப் பொருளியல், நிலநூல், கடற்செலவு, மருத்துவம், பொறியியல், வானவியல், அறிவியல், கைவண்ணத்தொழில் போன்ற பல்வகைத் துறைகளையும் ஆய்ந்து வரன்முறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்திற்கு வெளியே உள்ள இந்திய மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் தமிழ் பயிலவேண்டும் என்ற ஆர்வம் உடையோருக்கு ஆவன செய்து பயிற்சி அளிக்க வேண்டும். ஓலைச் சுவடிகளையும், பழைய அச்சுச் சுவடிகளையும் ஆய்ந்து நன்முறையில் வெளியிட வேண்டும். பிறமொழி நூல்களைத் தேவைக்கேற்ப தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். தமிழில் உள்ள சிறந்த நூல்களைப் பிற மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும். தமிழகத்திலும், தமிழ் வழங்கும் பிற நாடுகளிலும் வழக்கிலிருக்கும் சொற்கள், சொற்றொடர்கள், மரபுச் செய்திகள், தொழில்துறைக் கருத்துகள், செயல்முறைகள் ஆகியவற்றைத் தொகுத்து நல்ல விளக்கங்களுடன் வெளியிட வேண்டும்.

தமிழுக்குத் தொடர்பான பல்வேறு துறைகளையும் ஆயும் ஓர் உயர்நிலை ஆய்வு மையம் ஏற்படுத்த வேண்டும். தொன்மையை ஆராயும்போது இக்கால அறிவியல் கண்ணோட்டத்துடனும், எதிர்கால வளர்ச்சி நோக்குடனும் செயல்பட வேண்டும். தமிழ்மொழி, தமிழர் வரலாறு ஆகியன பற்றிய செய்திகளை, அனைத்துக் கல்வெட்டுகளையும், பிற சான்றுகளையும் தேடித் தொகுத்து, ஆய்வுக் கருத்துகளுடன் வெளியிட வேண்டும். அன்னைத் தமிழை உயிரெனப் போற்றி, அதன் வளர்ச்சிக்குப் பணியாற்றுவது நம் கடமை. எனவே, தமிழை இக்கால வளர்ச்சிக்கு ஏற்ப வளப்படுத்தவும், பிற நாடுகளிலும் தமிழ் மொழி தழைத்தோங்கவும் நம் தமிழக அரசு சிறந்த செயல்திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினால் செம்மொழியாம் தமிழ்மொழி மேலும் செழித்து வளரும்.

மகா.பாலசுப்பிரமணியன், கல்வியாளர், காரைக்குடி.

Next Story