சிறப்புக் கட்டுரைகள்

பரவசமூட்டும் பிச்சாவரம் படகு சவாரி + "||" + Pichavaram boat ride

பரவசமூட்டும் பிச்சாவரம் படகு சவாரி

பரவசமூட்டும் பிச்சாவரம் படகு சவாரி
இந்த கோடை விடுமுறையில் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்கள் நிச்சயம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சென்று திரும்பலாம்.
சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பிச்சாவரம், சதுப்பு நிலக்காடுகளும், உப்பங்கழிகளும் நிறைந்த பகுதியாகும். 1,500 ஏக்கர் பரப்பில் அலையாத்தி காடுகளும், சுரபுண்ணை செடி, கொடிகளும் (மாங்குரோவ்) நிறைந்த இப்பகுதியில் படகு சவாரி மேற்கொள்வது மிகவும் சிறப்பான, மனதுக்கு மகிழ்ச்சி தரும் அனுபவமாக நிச்சயம் இருக்கும். 6 கி.மீ. வரை பரவியுள்ள பிச்சாவரம் நீர் சூழ் பகுதியானது கடல் தண்ணீர் (பேக் வாட்டர்) நிறைந்த பகுதியாகும். இதில் 51 சிறு தீவுகள் உள்ளன.

எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படம் தொடங்கி, சரத்குமார் நடித்த சூரியன் மற்றும் கமல்ஹாசனின் தசாவதாரம் படம் வரையிலும், பிற மொழிப் படங்களிலும் இடம்பிடித்துள்ளது பிச்சாவரம் பகுதி. திரைப்படங்களில் மட்டுமே பார்த்து ரசித்த இந்தப் பகுதியை நேரில் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவமே அலாதியானது. இப்பகுதியில் நீர் நாய், நரி, உடும்பு போன்ற வன விலங்குகளும் வெளிநாட்டுப் பறவைகளையும் கண்டு ரசிக்கலாம்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இங்கு படகு சவாரிக்கு ஏற்பாடு செய்துள்ளது. துடுப்புப் படகு மற்றும் இயந்திர படகு போன்ற இரண்டு வகையான படகு சவாரிகளில் உங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்யலாம். ஒரு மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை படகில் சவாரி செய்து இயற்கைக் காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.

துடுப்புப் படகுக்கு ரூ.330 முதல் ரூ.635 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். அதேபோல இயந்திர படகுக்கு ரூ.1,265 முதல் ரூ.1,725 (10 நபர்களுக்கு) வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குகைகளில் பயணிப்பது போன்று அடர்ந்த வனப் பகுதிகளில் படகுப் பயணம் இந்தியாவில் வேறெங்கும் கிடையாது.

அத்தகைய அனுபவம் பெற நிச்சயம் நீங்கள் அலையாத்தி காடுகள் நிறைந்த பிச்சாவரத்துக்கு வரலாம், வந்து ரசிக்கலாம். வனத்துறையினர் இங்கு கருத்தியல் காட்சிக் கூடம் அமைத்துள்ளனர். அதில் இங்குள்ள மரம், செடி, கொடி வகைகள் பற்றிய விவரங்கள் மற்றும் இங்கு வரும் வெளிநாட்டு பறவையினங்கள் குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு கருத்துக் களஞ்சியமாக நிச்சயம் இருக்கும்.

இங்குள்ள உயர் கோபுரத்தில் சென்று இப்பகுதியின் இயற்கை அழகை ரசிக்கலாம். இங்கு தொலை நோக்கி கருவியும் உள்ளது. அதில் பார்க்க ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடல் தீவுகளுக்கு அதிகாலை சென்று சூரியோதயத்தையும் கண்டு ரசிக்கலாம்.