2018-19-ஆம் நிதி ஆண்டில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஈட்டிய புதிய பிரிமிய வருவாய் ரூ.2.15 லட்சம் கோடி


2018-19-ஆம் நிதி ஆண்டில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஈட்டிய புதிய பிரிமிய வருவாய் ரூ.2.15 லட்சம் கோடி
x
தினத்தந்தி 20 April 2019 11:57 AM GMT (Updated: 20 April 2019 11:57 AM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஈட்டிய புதிய பிரிமிய வருவாய் ரூ.2.15 லட்சம் கோடியாக இருக்கிறது.

மொத்தம் 24 நிறுவனங்கள்

இந்திய ஆயுள் காப்பீட்டு துறையில் மொத்தம் 24 நிறுவனங்கள் உள்ளன. இத்துறையில் பொதுத்துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி. நிறுவனம் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிறுவனம் ஆன்லைன் வாயிலாகவும், வங்கிகள் வாயிலாகவும் காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்து வந்தாலும் தனது பிரிமிய வருவாயில் 94 சதவீதத்தை முகவர்கள் வாயிலாகவே ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்.ஐ.சி. மற்றும் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், சென்ற நிதி ஆண்டில் ரூ.2.15 லட்சம் கோடியை புதிய பிரிமிய வருவாயாக ஈட்டி உள்ளன. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 10.7 சதவீத வளர்ச்சியாகும்.

இதில் எல்.ஐ.சி. நிறுவனம் அதிகபட்சமாக ரூ.1.42 கோடி ஈட்டி இருக்கிறது. இந்த வகையில் இந்நிறுவனம் 5.7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. மற்ற 23 தனியார் நிறுவனங்கள் ரூ.72,481 கோடி புதிய பிரிமிய வருவாய் ஈட்டி உள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 22.2 சதவீதம் உயர்வாகும்.

சென்ற நிதி ஆண்டில், தனியார் துறையில் எஸ்.பீ.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் 25.80 சதவீத வளர்ச்சியுடன் ரூ.13,792 கோடி புதிய பிரிமிய வருவாய் ஈட்டி உள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடுகளின் மதிப்பு ரூ.35.6 லட்சம் கோடியாக இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் அது ரூ.22.90 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, முதலீட்டு மதிப்பு 55 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

இந்திய காப்பீட்டுத் துறையில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ லோம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ், எஸ்.பீ.ஐ. லைப், ஜி.ஐ.சி. ரீ மற்றும் எச்.டீ.எப்.சி. ஸ்டாண்டர்டு லைப் ஆகிய 5 நிறுவனங்கள் தமது பங்குகளை மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிட்டுள்ளன.

பொதுக்காப்பீட்டு துறை

இந்தியாவில், ஆயுள் காப்பீடு சாராத துறையில் மொத்தம் 33 நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் 25 நிறுவனங்கள் பொதுக் காப்பீட்டுத் துறையைச் சேர்ந்தவை. 6 நிறுவனங்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களையும், 2 நிறுவனங்கள் சிறப்புக் காப்பீட்டு வசதியும் வழங்கி வருகின்றன.

Next Story