பன்முக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் வளர்ச்சி


பன்முக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் வளர்ச்சி
x
தினத்தந்தி 25 April 2019 4:51 AM GMT (Updated: 25 April 2019 4:51 AM GMT)

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த ஆண்டில் பன்முக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் வளர்ச்சி

புதுடெல்லி

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த ஆண்டில் (2018-19), உள்நாட்டில் பன்முக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் வளர்ச்சி கண்டு இருக்கிறது.

பயணிகள் வாகனங்கள்

சென்ற நிதி ஆண்டில் (2018-19), பயணிகள் வாகனங்கள் விற்பனை 2.7 சதவீதம் அதிகரித்து 33,77,436-ஆக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் அது 32,88,581-ஆக இருந்தது. இரு சக்கர வாகனங்கள் விற்பனை 4.86 சதவீதம் வளர்ச்சி கண்டு (2,02,00,117-ல் இருந்து) 2,11,81,390-ஆக உயர்ந்துள்ளது.

மார்ச் மாதத்தில் மட்டும் 2,91,806 பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 3,00,722-ஆக இருந்தது. ஆக, விற்பனை 2.96 சதவீதம் குறைந்து இருக்கிறது.

இந்நிலையில், கடந்த நிதி ஆண்டில் 1.79 லட்சம் பன்முக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளது. இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 14 சதவீத வளர்ச்சியாகும். இந்த வாகனங்களுக்கான தேவை அதிகரிப்பதே இதற்கு காரணமாகும்.

மகிந்திராவின் சைலோ, பொலீரோ, ஸ்கார்ப்பியோ, டாட்டா சுமோ, டாட்டா சபாரி போன்ற வாகனங்கள் பன்முக பயன்பாட்டு வாகனங்கள் எனப்படுகின்றன. பல நபர்கள் பயணிக்கக் கூடிய இந்த வாகனங்கள் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படக் கூடியவையாக உள்ளன. குறிப்பாக கரடு முரடான பாதைகளை எளிதாகக் கடந்து செல்லும் வகையில் உள்ளன. இது போன்ற வாகனங்கள் அரசியல்வாதிகளின் அபிமான கார்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த நிதி ஆண்டில் கார், பைக் உள்ளிட்ட அனைத்து வகையான மோட்டார் வாகனங்களின் விற்பனை, ஒட்டுமொத்த அளவில் 5.15 சதவீதம் அதிகரித்து (2,49,81,312-ல் இருந்து) 2,62,67,783-ஆக உயர்ந்து இருக்கிறது.

5.08 சதவீத வளர்ச்சி

2018 காலண்டர் ஆண்டில், ஒட்டுமொத்த அளவில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 5.08 சதவீத வளர்ச்சி கண்டு 33,94,756-ஆக இருக்கிறது. 2017-ஆம் ஆண்டில் 32,30,614-ஆக இருந்தது.


Next Story