திருப்புமுனையை ஏற்படுத்திய பாடல்


திருப்புமுனையை ஏற்படுத்திய பாடல்
x
தினத்தந்தி 26 April 2019 7:40 AM GMT (Updated: 26 April 2019 7:40 AM GMT)

என்றென்றும் கண்ணதாசன்

“ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ...”
பட்டிதொட்டி எங்கும் ஒலித்த பாடல் இது. இன்றும் கண்ணதாசனின் புகழ் பாடிக்கொண்டிருக்கின்ற பாடல்களிலே அதுவும் ஒன்று.

இந்தப் பாடல் கண்ணதாசனின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய பாடல் என்றால் நம்ப முடிகிறதா?

ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் தானே எழுத வேண்டும் என்ற ஆசையில், ‘கண்ணதாசன் பிலிம்ஸ்’ என்ற பெயரில் ஜனகா பிலிம்சுக்காக ‘மாலையிட்ட மங்கை’ படத்தை அப்பா தயாரித்தார். பாடல்கள் சூப்பர் ஹிட். ஆனாலும் பாடல் எழுத குறைவான வாய்ப்புகளே அவருக்கு வந்து கொண்டிருந்தன.

‘தெனாலிராமன்’ படத்தின்போது அப்பாவுக்கும், சிவாஜிக்கும் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக, சிவாஜியின் படங்களுக்கு அப்பா பாடல் எழுதவில்லை.

‘கண்ணதாசன் எழுத வேண்டாம்’ என்று சிவாஜி சொல்லவில்லை. ஆனால் பிரச்சினையைப் பற்றி தெரிந்ததால், தயாரிப்பாளர்கள் ‘நமக்கு ஏன் வம்பு’ என்று அழைக்காமல் இருந்துவிட்டார்கள்.

அதே சமயம், அப்பா பாடல்களை விட வசனம் தான் அதிகமாக எழுதிக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மிகமிக பிஸியாக பாடல்கள் எழுதிக்கொண்டு இருந்தார்.

அவரிடம் ‘பாகப்பிரிவினை’ படத்திற்கான பாடல்களை எழுதும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அவரும் இரண்டு பாடல்களை எழுதித் தந்தார்.

மூன்றாவது பாடல் வேண்டும் என்று கேட்டபோது, “நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களுக்கு பாடல் எழுத வேண்டும். நிச்சயம் அதற்கு இரண்டு வாரங்கள் ஆகிவிடும். நீங்கள் அவசரம் என்று கேட்கிறீர்கள். ஆகவே இந்தப் பாடலை கண்ணதாசனை வைத்து எழுதிக்கொள்ளுங்கள். நான் வேண்டுமானால் அவரிடம் பேசுகிறேன்” என்றார்.

சிவாஜியின் ஒப்புதல் இல்லாமல் கண்ணதாசனை வைத்து பாடல் எழுத முடியாது. மற்ற பாடலாசிரியர்களால் குறுகிய காலத்தில் பாடல் எழுத முடியாது. எனவே சிவாஜியிடமே கேட்டு விடுவோம் என்று அவரிடம் சென்று முழு விவரத்தையும் சொல்லிக் கேட்டார்கள்.

“எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவன் ஒத்துக்கிட்டான்னா எழுதட்டும்” என்று சிவாஜி சொல்லி விட்டார். “அவர் சரின்னு சொல்லிட்டாரு... கண்ணதாசன் சொல்லணுமே...” தயக்கத்துடன் வந்து அப்பாவை சந்திக்கிறார்கள்.

அப்பா சிறிது நேரம் யோசித்துவிட்டு, “எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, எழுதுறேன்” என்று சொல்லி விட்டார். ‘பாகப்பிரிவினை’ படத்திற்கு அப்பா எழுதிய முதல் பாடல், “ஏன் பிறந்தாய் மகனே..”.

அடுத்த பாடலை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை எழுத சொல்லி இருந்தார்கள். ஆனால் விதியின் கொடுமை... தவறாக செய்யப்பட்ட ஒரு அறுவை சிகிச்சையின் காரணமாக, பட்டுக்கோட்டையார் தனது 29-வது வயதில் காலமானார்.

தன் சொந்த சகோதரனே இறந்து போனது போன்ற சோகம் அப்பாவுக்கு.

“சின்ன வயதுமகன்
சிரித்தமுகம் பெற்றமகன்
அன்னைக் குணம்படைத்த
அழகுமகன் சென்றானே
கன்னல்மொழி எங்கே
கருணைவிழி தானெங்கே?
மன்னர் மணிமுடியில்
வாழ்ந்திருந்த செந்தமிழை(த்)
தென்னவர் பொருளாக்கித்
தீங்கவிதை தந்தமகன்
கண்மூடித் தூங்குகிறான்
கனவுநிலை காணுகிறான்
தன்னுயிரைத் தருவதனால்
தங்கமகன் பிழைப்பானோ?
என்னுயிரைத் தருகின்றேன்
எங்கே என் மாகவிஞன்?”
என்று தன் சோகத்தை கவிதையாக்கினார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மட்டும் அன்று, “கண்ணதாசன் எழுதட்டும்” என்று சொல்லாமல் இருந்திருந்தால், தமிழ் சினிமாவிற்கும், சிவாஜிக்கும், கண்ணதாசனுக்கும் மிகப்பெரிய இழப்பாக இருந்திருக்கும்.

பிறகு திரையுலக நண்பர்கள் அப்பாவையும் சிவாஜியையும் தனியே சந்திக்க வைத்தார்கள். இருவரும் மனம்விட்டுப் பேசி சமாதானம் ஆனார்கள். அதன் பிறகு நடந்ததெல்லாம் சரித்திரம்.

1978-ம் ஆண்டு. நான் சென்னை புதுக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை படித்துக் கொண்டிருக்கிறேன்.

அப்பாவிடம் ஒரு நாள் “ஒரு படம் எடுக்கலாமாப்பா?” என்று கேட்டேன். “எடுக்கலாமே... யாரை ஹீரோவா போடலாம்?” “சிவாஜியை கேக்கலாமாப்பா?” உடனே அப்பா “சிவாஜிக்கு போன் போடு” என்று தன் உதவியாளர் வசந்தனிடம் சொல்கிறார்.

போனில் பேசிய சிவாஜி, உடனே வீட்டுக்கு வரும்படி அப்பாவிடம் சொல்ல, நாங்கள் அப்போதே புறப்பட்டுச் சென்றோம். சிவாஜி வீடு... அப்பா காரில் இருந்து இறங்கியவுடன், தயாராக இருந்த ஒருவர் அப்பாவை அழைத்துக்கொண்டு உள்ளே செல்கிறார். உள் ஹாலில் சிவாஜி கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார்.

(அவரைப் பார்த்த உடன் நாங்கள் ‘சிவந்தமண்’ படம் பார்க்க போன கதை நினைவுக்கு வந்தது. அது பற்றி பிறகு சொல்கிறேன்)

அப்பாவைப் பார்த்த உடன் சிவாஜி “வாய்யா கவிஞா” என்றார். அப்பாவும் “என்னையா நடிகா” என்றபடி உட்கார்ந்தார்.
 அப்பா அப்போது மூன்றாவது திருமணம் செய்து, சிவாஜியின் வீட்டுக்கு எதிரே சற்று தள்ளி ஒரு வீட்டில் அவர்களை குடிவைத்து இருந்தார்.

“என்னென்னமோ கேள்விப்படுறேன்... இங்கயே எதிர ஒரு வீட்ல... இந்த வயசுல எதுக்கையா சபலம்?” “அதான் எனக்கு சமபலம்”. பிறகு பேச்சு பழைய நினைவுகளை சுற்றி வந்து படத் தயாரிப்பில் நின்றது.

“என் மகன் படம் தயாரிக்கணும்னு சொல்றான். கதையை நான் பண்ணிக்கிறேன். நீங்க நடிக்கிறீங்களா?” “உனக்கு பண்ணாம வேற யாருக்கு பண்ணப்போறேன். நாளைக்கு ‘தச்சோளி அம்பு’ படத்துக்கு கேரளா போறேன். வந்ததும் தேதி பத்தி பேசலாம்” என்று சிவாஜி சொன்னார்.

காரில் திரும்பி வரும் போது அப்பா என்னிடம் “டேய்... இந்த கண்ணதாசன் புரொடக்‌ஷன்ஸ் எம்ப்ளமா ‘தெரு விளக்கு’ இருக்கு. மொதல்ல அதை மாத்தணும். அதான் ஒரு காலத்தில என்ன தெருவுக்கு கொண்டுவந்து போராட வச்சிடுச்சு. சர விளக்கு வச்சுக்குவோம். அது மங்களகரமாக இருக்கும்”.

அப்பா உற்சாகமாக பேசுகிறார். மீண்டும் படம் தொடங்குவதில் அவருக்கு அத்தனை சந்தோஷம். மகிழ்ச்சியான சிந்தனைகளில் சிறிது நேரம் மூழ்கி இருந்தார்.

பிறகு என்னைப் பார்த்து “அப்பவெல்லாம் நீங்க சின்னப் பிள்ளைகள். இன்னைக்கு மாதிரி இருந்திருந்தா, எனக்கு இவ்வளவு நஷ்டம் வந்திருக்காது. யார் யாரையெல்லாம் நம்பினேனோ அவங்க எல்லாரும் என்னை ஏமாத்துனாங்க” அப்பாவைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. ‘சினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள்’ என்ற புத்தகத்தில் அப்பா இப்படி எழுதி இருந்தார்.

“கடைசியில் ஆறு லட்ச ரூபாய் கடனோடு கம்பெனியை இழுத்து மூடினேன். கம்பெனியில் இருந்த பொருட்கள் மட்டும் ஒரு லட்சம் பெறும். என் தாயார் பாடிய பாடலைப் போல ‘நாய் பாதி பேய் பாதி’ என்று அவை அனைத்தும் போய் விட்டன.”

சிவாஜிக்கு, ‘தச்சோளி அம்பு’ படத்தின் போது விபத்து ஏற்பட்டு ஆறு மாதம் ஓய்வில் இருந்தார். அத்துடன் எங்களது படமும் ஓய்வுபெற்றுவிட்டது.

- அண்ணாதுரை கண்ணதாசன்


Next Story