கருவிலேயே குழந்தைக்கு ஆபரேஷன்


கருவிலேயே குழந்தைக்கு ஆபரேஷன்
x
தினத்தந்தி 19 May 2019 7:47 AM GMT (Updated: 19 May 2019 7:47 AM GMT)

நான் என் குழந்தைக்கு சிறந்ததை செய்ய விரும்பினேன். அவனுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தர வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

அட, இப்படியெல்லாம்கூட செய்ய முடியுமா?

-இப்படி கேட்டு புருவங்களை உயர்த்தி நம்மை வியப்பின் உச்சத்துக்கு அழைத்துச் செல்வ தாகத்தான் அந்த அறுவை சிகிச்சை அமைந்திருக்கிறது.

பின்னே, சும்மாவா? குழந்தைக்கு ஆபரேஷன் என்றாலே ஆச்சரியத்தால் விழிகளை விரிக்கிறோம்.

அதிலும் தாயின் கருப்பையில் உள்ள குழந்தைக்கு ஆபரேஷன் என்றால் எப்படி வியக்காமல் இருக்க முடியும்?

முதன் முதலாக கர்ப்பம்

இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட் சுஸ்செக்ஸ் நகரின் ஹோர்சம் பகுதியை சேர்ந்தவர் அந்த அழகுப்பெண். ஷெர்ரி ஷார்ப் என்பது அவரது பெயர். வயது 29.

அவர் முதன் முதலாக கர்ப்பம் தரித்திருந்தார். கருவில் இருப்பது ஆண் குழந்தை என்று தெரிய வந்தது. அந்த குழந்தைக்கு ஜாக்சன் என்று பெயர் சூட்டி, அவனை பிரசவிக்க ஆசை ஆசையாய் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார். தனது செல்ல மகன் ஜாக்சன் என்றைக்கு இந்த உலகுக்கு வருவானோ அந்த நாள்தான் தனக்கு திருநாள் என காத்திருந்தார்.

அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்கு சென்று வந்தார்.

பரிசோதனையில் வந்தது சோதனை

கர்ப்பம் தரித்து 20 வாரம் ஆன நிலையில் அவர் லண்டன் கிங் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றிருந்தபோது ஸ்கேன் செய்து பார்த்த டாக்டர், ஓசைப்படாமல் அவரது தலையில் இடியை இறக்குவதுபோல செய்தி சொன்னார்.

“உங்கள் கருப்பையில் உள்ள குழந்தைக்கு ஸ்பைனா பிபிடா” என்றார் டாக்டர்.

“அப்படியென்றால்?” என விழிகளை சுருக்கினார் ஷெர்ரி.

முதுகெலும்பு, தண்டுவடம் பாதிப்பு

“வேறொன்றும் இல்லை. குழந்தையின் முதுகெலும்பும், தண்டுவடமும் சரியாக உருவாகவில்லை... தண்டுவடத்தில் வீக்கம், முதுகுக்கு வெளியே தெரிகிறது. தண்டுவட நரம்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் முடக்குவாதம் ஏற்படலாம்... கால்கள் உணர்வற்றுப்போகலாம்... சிறுநீரகம், குடல்களிலும் பாதிப்புக்கு வழி இருக்கிறது...” என்று அடுக்கினார் டாக்டர்.

துடித்துப்போன ஷெர்ரிக்கு தலை சுற்றியது. இனி என்ன செய்வது?

ஆபரேஷன் செய்ய முடிவு

ஆனாலும் எந்த நிலையிலும் தன் அன்புக்குழந்தையை கருப்பையில் வளர்த்து, இந்த உலகத்துக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற உத்வேகம் ஷெர்ரிக்குள் பீறிட்டது.

டாக்டர்களிடம் தன் விருப்பத்தை சொல்லி மருத்துவ வாய்ப்புகள் பற்றி விவாதித்தார். டாக்டர்களும் பல்வேறு வாய்ப்புகள் பற்றி எடுத்துச்சொன்னார்கள்.

இறுதியாக கருப்பையில் உள்ள குழந்தைக்கு ஆபரேஷன் செய்வது என்று டாக்டர்கள் முடிவு எடுத்தார்கள்.

இதுபற்றி ஷெர்ரி சொல்லும்போது, “நான் என் குழந்தைக்கு சிறந்ததை செய்ய விரும்பினேன். அவனுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தர வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதில் தவறு எதுவும் இல்லையே?” என்கிறார்.

வெற்றி

அதைத்தொடர்ந்து ஷெர்ரிக்கு ஆபரேஷனுக்கு நாள் குறிக்கப்பட்டது.

உரிய நாளில் ஷெர்ரி அறுவை சிகிச்சைக்காக லண்டன் கிங் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஷெர்ரிக்கு முதலில் டாக்டர்கள் மயக்க மருந்து செலுத்தினர். அவர் சில நிமிடங்களில் மயங்கிப்போனார்.

அதையடுத்து அவரது அடிவயிற்றில் மூன்று சிறிய துளைகள் போட்டனர். அவற்றின் வழியாக அவரது கருப்பைக்கு ஒரு மெல்லிய கேமராவையும், அறுவை சிகிச்சை உபகரணங்களையும் அனுப்பினர்.

3 மணி நேரம் டாக்டர்கள் உயிரைக்கொடுத்து ஆபரேஷன் செய்தனர். பிரச்சினையை சரி செய்தனர். ஆபரேஷன் வெற்றி கண்டது.

டாக்டர்கள் கருத்து

ஆபரேஷன் செய்த நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் மார்த்தா சான்டோரம் பெரஸ் கூறும்போது, “ஷெர்ரியின் கருப்பையில் இருந்த கருக்குழந்தை மிக சிறிய அளவில் இருந்தது. அது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை. மிகவும் மென்மையாக செயல்பட வேண்டியது இருந்தது” என குறிப்பிட்டார்.

அதே மருத்துவமனையை சேர்ந்த மற்றொரு நரம்பியல் மருத்துவ நிபுணரான டாக்டர் பாசல் ஜெபியன் கூறும்போது, “சிறிய துளையிட்டு குழந்தையின் தாய்க்கு அறுவை சிகிச்சை செய்ய நாங்கள் எடுத்த முடிவு நல்ல முடிவு. இதனால் பிற் காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து வருகிறபோது சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைந்திருக்கிறது. இது மிகவும் முக்கியமானது” என குறிப்பிட்டார்.

குழந்தை பிறந்தது

குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக, அதாவது 33-ம் வாரத்திலேயே அறுவை சிகிச்சை மூலம் ஷெர்ரிக்கு ஆண் குழந்தை ஜாக்சன் பிறந்தது.

தொடர்ந்து தாயும், சேயும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்திருப்பது ஷெர்ரிக்கு மன நிம்மதியையும், நிறைவையும் அளித்து இருக்கிறது.

“குழந்தையின் கால்கள் நன்றாக அசைகின்றன. அவன் நன்றாக வருவான் என்று மலையளவு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவன் ஒவ்வொரு நாளும் என்னை பெருமிதப்பட வைத்துக்கொண்டிருக்கிறான். அவனே ஒரு அதிசயம்தான்” என்று உருகுகிறார் ஷெர்ரி.

ஷெர்ரியின் ரோஜா நிற முகத்தில் தாய்மையின் பெருமிதம் பளிச்சிடுவது மகோன்னதம்.


Next Story