ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சென்னைக்கு அகல நடைபாதை


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சென்னைக்கு அகல நடைபாதை
x
தினத்தந்தி 8 Jun 2019 11:29 AM GMT (Updated: 8 Jun 2019 11:29 AM GMT)

இத்திட்டம் பற்றி சந்தேகங்கள் வலுத்திருக்கும் நிலையில், சென்னையில் இதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன; சில நகரங்கள் இதில் முன்னிலையிலும், வேறு சில நகரங்கள் பின் தங்கியும் உள்ளன.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதை பற்றிய விவாதங்கள் தொடரும் நிலையில், கடந்த மே மாதம் வரையில், 100 ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்கு, ரூ.1,32,696 கோடி மதிப்பிலான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக திட்ட இயக்குனரகம் தெரிவிக்கிறது. இது மொத்த திட்ட மதிப்பீட்டில் 65 சதவீதமாகும். ரூ.87,460 கோடி மதிப்புடைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் ஒரு பகுதி முடிக்கப்பட்டுள்ளது. இது மொத்த திட்ட மதிப்பீட்டில் 43 சதவீதமாகும்.

சில நகரங்கள் பல்வேறு புதுமையான தீர்வுகளை செயல்படுத்தி வருகின்றன. பல நகரங்கள் இதில் பின் தங்கியுள்ளன. இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 100 நகரங்களும், தமக்கு தேவையான கட்டமைப்புகளை தேர்வு செய்ய முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், சாலை மேலாண்மை, குடிநீர் வினியோகம் போன்ற 24 வகையான துறைகளில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நலம் பேணுதல், சமபங்கு, செயல்

திறன், தொலைநோக்கு பார்வை ஆகியவை இத்திட்டத்தின் வழிகாட்டும் நெறிகள் ஆகும். இதன் அடிப்படையில் உரிய திட்டங்களை வகுக்க வேண்டும். மொத்த நகரத்திற்கும் பயனளிக்கும் திட்டம் அல்லது குறிப்பிட்ட பகுதி மேம்பாட்டுத் திட்டம் என்று இருவகையான திட்டங்கள் உள்ளன.  

கடந்த மே மாதம் வரை, தமிழகத்தில் ரூ.12,000 கோடி மதிப்புடைய டெண்டர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட 11 நகரங்களில், ரூ.10,042 கோடி மதிப்புடைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் சில நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்திட்டங்களில் பெரும் பகுதி, சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன. ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், சேலம் ஆகிய நகரங்கள், இத்திட்டத்தில் சேர்ந்துள்ள இதர நகரங்கள் ஆகும். அங்கும் இத்திட்டம் செயல்பட தொடங்கியுள்ளது. 

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையில், ரூ.13,055.17 கோடி டெண்டர்கள் முடிவு செய்யப்பட்டு, ரூ.3,714 கோடி மதிப்புடைய பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் ரூ.13,858 கோடி மதிப்புடைய டெண்டர்கள் முடிவு செய்யப்பட்டு, ரூ.3,241 கோடி மதிப்புடைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சில புதுமையான முயற்சிகள்

ஒவ்வொரு நகரமும் தனித்துவமான பாதையில் முயற்சித்தாலும், முன்னணியில் உள்ள சில நகரங்கள், ஒரே வகையான திட்டங்களில் கவனம் செலுத்துகின்றன. முழுமையான சாலை, ஸ்மார்ட் வாகன நிறுத்தகம், ஸ்மார்ட் அட்டைகள், அகல நடைபாதைகள், திறந்தவெளிகள் உருவாக்கம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 

அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்:–

அகல நடைபாதை திட்டம்: 

சென்னை பாண்டி பஜாரில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில், பாதசாரிகளும், பொது மக்களும் கூடி மகிழ ஒரு பெரிய திறந்தவெளி உருவாக்கப்படுகிறது. வார இறுதி நாட்களில், இசை நிகழ்ச்சிகள் மற்றும் இதர கலை நிகழ்ச்சிகளை நடத்த இடம் ஒதுக்கப்படுகிறது. விரைவில் திறக்கப்பட உள்ள இந்த அகல நடைபாதை, இந்தியாவிலேயே முதலாவதாக இருக்கும். புனே நகரத்தில் இதே போன்ற திட்டம், எதிர்ப்புகளை சந்தித்து வருவதால், தாமதமாகியுள்ளது.

முழுமையான சாலைத் திட்டம்: 

ஒரு முழுமையடைந்த சாலையை உருவாக்கும் திட்டம் இது. பாதசாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்தல், வாகனப் போக்குவரத்தை சீர்படுத்துதல், போதுமான தெரு விளக்குகளை நிறுவுதல், சாலை ஓரங்களில் பொதுமக்கள் அமர இருக்கை வசதிகளை ஏற்படுத்துதல், பொதுமக்கள் கூடி மகிழ திறந்த வெளிகளை உருவாக்குதல் ஆகியவை இதன் சிறப்பு அம்சங்கள் ஆகும். வாகன நிறுத்தங்கள், போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் இதர பகுதிகளை ஒருங்கிணைத்தல் இதில் அடங்கும். 

போக்குவரத்து கொள்கைகள் மேம்பாடு நிறுவனத்தின் ஆலோசனைபடி சென்னை மற்றும் புனே நகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை, தி.நகரில், 25 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் இதன் மூலம் மேம்படுத்தப்படுகின்றன. ஸ்மார்ட் பார்க்கிங் திட்டமும் இதில் அடக்கும். இதில், செல்போன் செயலி மூலம் வாகன நிறுத்த கட்டணத்தை செலுத்த முடியும். வாகன நிறுத்தங்களில் நிறுவப்பட்டுள்ள சென்சார்கள் மூலம் வாகனங்களின் பதிவு எண், வகை மற்றும் இதர தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அரசின் தகவல் களஞ்சியத்தில் சேமிக்க முடியும். 

கலங்கரை விளக்கம்: 

வேலையில்லாத நகர்ப்புற இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக வழிகாட்டும் வகையில், புனே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒரு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த மையத்தில், கணினி பயிற்சி, தையல் பயிற்சி போன்ற திறன்கள் கற்பிக்கப்படுகின்றன. தேவைகளுக்கு ஏற்ப இது விரிவுபடுத்தப்படும். 

அடைகாக்கும் மையம்: 

போபால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்க இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முன்னோடித் திட்டத்தை இதர நகரங்களும் பின்பற்ற முயற்சிக்கின்றன. புனே நகரம், இதே பாணியில் ஒரு ‘யோசனை தொழிற்சாலை’ அமைத்துள்ளது.

ஸ்மார்ட் வகுப்பறைகள்

ஜபல்பூர் மற்றும் காக்கிநாடா போன்ற நகரங்களில் உள்ள அரசு பள்ளிகளின், வகுப்பறைகளை இத்திட்டம் முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. இதர நகரங்களும் இதை பின்பற்ற திட்டமிடுகின்றன. இணையம் மூலம் சுயமாக கல்வி கற்றல், காணொளி மற்றும் ஒலிப்பதிவு சாதனங்கள் உதவியுடன், ஊடாடும் கல்வி முறை இங்கு செயல்படுத்தப்படுகிறது. 

குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழக நகரங்கள் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்துவதிலும், அதிக எண்ணிக்கையிலான திட்டங்களை செயல்படுத்துவதிலும் முன்னிலையில் உள்ளன. ‘‘பல நகரங்களில் இத்திட்டங்களை தொடங்க கால தாமதம் ஆகி வருகிறது. எனவே இவற்றை ஒப்பிடுவது நியாயமல்ல’’ என்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் இயக்குனர் குனல் குமார் கூறுகிறார். 

குஜராத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களில், 70 சதவீதம் அகமதாபாத் மற்றும் சூரத் நகரங்களில் நடக்கின்றன. காற்று மாசை கண்காணிக்கும் கருவிகளை நிர்மானித்தல், அறிவார்ந்த போக்குவரத்து சிக்னல்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் போன்றவற்றை பல நகரங்கள் செயல்படுத்தி வருகின்றன. 

இத்திட்டம் பற்றிய விமர்சனங்கள்: 

இத்திட்டத்தின் மூலம் நகரங்கள் ஒரே நாளில் உருமாறிவிடும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இதன் பலன்கள் வெளிப்பட நீண்ட காலம் ஆகும் என்று ஆலோசகர் ஒருவர் கூறுகிறார். இது ஒரு பெரிய நகரத்தின் ஒரு பகுதிக்கு மட்டுமே பலனளிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இது ஒரு பகுதியில் செயல்படுத்தப்பட்ட பின்னர், இதர பகுதிகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. 

திட்டங்களுக்கு தேவையான நிதி கிடைப்பதில் பிரச்சினை உள்ளதாக சொல்லப்படுகிறது. திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட நிதியை அரசு அளிக்கும். பயனாளிகளுக்கான கட்டணங்கள், அரசு–தனியார் கூட்டு முயற்சி, கடன்கள் மூலம் ஸ்மார்ட் சிட்டி நிறுவனங்கள் நிதி திரட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக, ஐந்தாண்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. 

சாலைகளை மாற்றி அமைப்பதற்கு பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு வரலாம். திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின், அதன் பலன்களை உணர்ந்து கொள்வார்கள். 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மைல்கல்கள்:

2015 : ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிப்பு  

சேர விருப்பமுள்ள மாநகராட்சிகள், கோரிக்கைகள் அனுப்ப அழைப்பு

2016 : நகரங்களிடையே இதில் சேர போட்டி 

2016–2017 : மூன்று சுற்றுகள் மூலம் 100 நகரங்கள் தேர்வு

2016 : விரைவான வளர்ச்சிக்காக 23 நகரங்கள் தேர்வு

ஸ்மார்ட் கட்டளை  மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள்:

* 16 நகரங்களில் செயல்படுகின்றன

* 71 நகரங்களில் உருவாக்கப்படுகின்றன

ஸ்மார்ட்  சாலைகள்: 

* 23 நகரங்களில் செயல்படுகின்றன

* 56 நகரங்களில் உருவாக்கப்படுகின்றன

ஸ்மார்ட் கழிவு நீர் திட்டம்:

* 23 நகரங்களில் செயல்படுகின்றன

* 56 நகரங்களில் உருவாக்கப்படுகின்றன

சூரியசக்தி திட்டம்:

* 15 நகரங்களில் செயல்படுகின்றன

* 47 நகரங்களில் உருவாக்கப்படுகின்றன

ஜனரஞ்சகமான திறந்தவெளிகள்:

* 21 நகரங்களில் செயல்படுகின்றன

* 34 நகரங்களில் உருவாக்கப்படுகின்றன

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: 

*  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை வடிவமைக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களுக்கு, தலா ரூ.2 கோடி நிதி அளிப்பு

*  ஒவ்வொரு நகரத்திற்கும் மத்திய அரசிடம் இருந்து ரூ.500 கோடியும், மாநில அரசிடம் இருந்து ரூ.500 கோடியும், ஐந்தாண்டுகளுக்கு ஒதுக்கீடு

*  ஒவ்வொரு நகரமும், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செயல்படுத்த ஒரு சிறப்பு நோக்க வாகனத்தை (சி.நோ.வா) உருவாக்குதல்

*  ஒவ்வொரு சி.நோ.வா.விற்கும், ஒரு தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ) நியமனம்

* சி.நோ.வா, சம்பந்தப்பட்ட மாநகராட்சிளுடன் இணைந்து பணியாற்றி, திட்டங்களில் ஒருங்கிணைக்கும்

* நகரம் முழுமைக்குமான திட்டங்களையும், பகுதிகளுக்கான திட்டங்களையும் கண்டறிதல்

*  தொழில்நுட்ப மற்றும் சமூக ரீதியில் புதுமையான திட்டங்களே மேம்பாட்டுக்கான அடிப்படை

*  நகரங்கள், தம் தேவைகளுக்கு ஏற்ற திட்டங்களை வடிவமைத்து, மக்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தவும், சமூகங்களிடையேயான தொடர்புகளை மேம்படுத்தவும், அடிப்படை கட்டுமானங்களை வலுப்படுத்தவும், ஸ்மார்ட் நிர்வாக முறையை செயல்படுத்துதல் 

* திட்டங்களை மாநில மற்றும் மத்திய அரசு அளவில் கண்காணித்தல் 

Next Story