உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 9 Jun 2019 7:45 AM GMT (Updated: 9 Jun 2019 7:45 AM GMT)

அவள் வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்தவள். இயல்பாகவே பிடிவாதம் பிடித்தவள். பிளஸ்-டூ முடித்ததும் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தாள்.

வள் வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்தவள். இயல்பாகவே பிடிவாதம் பிடித்தவள். பிளஸ்-டூ முடித்ததும் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தாள். அங்கு ஏராளமான ஆண்களும், பெண்களும் வேலைபார்த்தார்கள். வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தது. அவர்களில் சிலர் முரண்பாடான வாழ்க்கைப் பின்னணியைக்கொண்டவர்கள். ஆனால் அவர்களில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அந்த நிர்வாகம் தலையிடுவதில்லை.

பிடிவாத குணமிக்க இவள், அங்கு வேலைபார்ப்பவர்களில் அழகும், இளமையும் கொண்டவளாக இருந்தாள். அதனால் பணிபுரியும் இளைஞர்களில் பலபேருடைய பார்வை அவள் மீது விழுந்தது. சிலர் காதலோடு அணுகவும் செய்தார்கள். அவர்களை, அவள் பலபேர் முன்னிலையில்வைத்து அவமானப்படுத்தியதால், அவளை அடங்காப்பிடாரி என்று கூறி, ஆண்கள் பயத்தோடு பார்க்கும் சூழல் உருவானது. அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவள், தன் வயதை ஒத்த பெண்கள் சிலரை தன்னோடு சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு தலைவிபோல் இயங்கி, அந்த தொழிற்சாலையிலே ஒரு மினி ரவுடி போல் நடந்துகொண்டாள்.

அவளது கண்ணுக்குஎட்டும் தூரத்தில் இன்னொரு பிரிவில், பெண்கள் பக்கமே திரும்பிப்பார்க்காத இளைஞன் ஒருவன் வேலைபார்த்துக்கொண்டிருந்தான். அவன் எந்த பெண்ணையும் ஏறெடுத்துப்பார்க்கமாட்டான். எந்த பெண்ணாவது நெருங்கிப் பேசினால் வியர்த்து வடிந்து பதற்றமாகிவிடுவான். பயந்த சுபாவம்கொண்டவனாக தோன்றினான். ஆனால் பார்க்க வசதிபடைத்த வீட்டு இளைஞன் போன்று காணப்பட்டான்.

அன்று தோழிகளோடு அவள் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த பயந்த சுபாவ இளைஞன் எதிர்பட்டான். அவனை பார்த்ததும், அவளது தோழிகள் ‘இவன் ரொம்ப அழகாக இருக்கிறான்டீ.. ஆனால் எந்த பெண்ணை பார்த்தாலும் பயப்படுகிறான். உன்னை மாதிரி தைரியமான பெண்ணால்தான் அவனது பயத்தை போக்க முடியும். அவனுக்கு காதல் வலைவீசிப்பாரேன்..’ என்று தூபம் போட்டார்கள்.

அப்போது அதை ஒரு விளையாட்டுத்தனமாக அவள் எடுத்துக்கொண்டாலும் அன்றிலிருந்து அவளது பார்வை அவனையே சுற்றியது. சாதாரண பெண்களையே பார்த்து பயப்படும் அவன், அங்கே பெண் ரவுடிபோல் நடந்துகொண்டிருந்த அவளை பார்த்து வெலவெலத்துப்போனான். விலகி ஓடிய அவனை விடாப்பிடியாக துரத்தி, நட்பு பாராட்டினாள். அவனை வெளியே அழைத்துச்செல்லும் அளவுக்கு நெருக்கமானாள்.

‘அவன் ஆம்பிளைதானான்னு டெஸ்ட் பண்ணிக்கோடீ..’ என்று தோழிகள் பொடிவைத்து பேசியது, அவளுக்குள் விபரீதமான எண்ணத்தை உருவாக்கியது. வலிந்து அவனோடு நெருங்கினாள். வெளியே தங்கினாள். கர்ப்பமாகிவிட்டாள்.

விஷயத்தை அவனிடம் சொல்லாமல், அவனது குடும்பம் பற்றி தெரிந்துகொள்ள அவனது வீட்டிற்கு சென்றாள். அவன் வாழ்ந்து கெட்ட குடும்பத்தை சேர்ந்தவன் என்பதும், தற்போது எந்த வசதியும் இல்லாமல் இருக்கிறான் என்பதும் அவளுக்கு தெரிந்தது. அவனுக்கு தாயார் மட்டுமே இருக்கிறார். தந்தை இல்லை.

அவனது தாயாரிடம் தான் கர்ப்பமாகியிருக்கும் தகவலை சொன்னாள். அந்த பெண்மணி பதறிவிட்டார். ‘என் மகன் எதற்கும் லாயக்கற்றவன். அவனை நம்பி வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாதே. எப்படியாவது கருக்கலைப்பு செய்துவிட்டு, உன் வாழ்க்கையை நீ பார்த்துக்கொள்’ என்று மன்றாடினார். அவள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

அடுத்து தனது தாயாரிடம் போய் தான் கர்ப்பமாகிவிட்ட தகவலை சொன்னாள். அவரும், அவனது குடும்பத்தை பற்றி தெரிந்தவர்கள் மூலம் விசாரித்துவிட்டு, ‘நடந்தது நடந்துபோச்சு.. கர்ப்பத்தை கலைத்துவிடு’ என்றார். தாய் சொன்னதையும் புறக்கணித்துவிட்டு, அவனை திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்தாள். அவனிடம் சொன்னபோது, அவன் முகத்தில் எந்த பிரதிபலிப்பையும் காட்டவில்லை. அவள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டினான். பதிவு திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது.

திருமணத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த அவள் வேலையில் இருந்து விலகினாள். அவனையும் வேலையில் இருந்து விலகும்படி கூறினாள். அவனும் விலகினான். ‘அவன் பயந்த சுபாவம் கொண்டவன். தான் சொல்வதை கேட்டு செயல்பட்டு தன் கட்டுக்குள்ளே இருப்பான்’ என்ற எண்ணம் அவளிடம் மேலாங்கி யிருந்தது. அதனால் மகிழ்ச்சியுடன் அவள் திருமணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது பிடிவாதத்தை ஏற்று, வருங்கால மாமியாரும் அமைதியாகி கல்யாணத்தில் கலந்துகொள்ள சம்மதித்தார்.

திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் திடீரென்று அவனை காணவில்லை. எந்த தகவலும் சொல்லாமல் வெளியேறிவிட்டான். அவளும் தேடினாள். அவனது அம்மாவும் தேடினார். நாட்கள் நகர்ந்தது. திருமண தேதி தள்ளிப்போனது. இதுவரை அவனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. அவள், நிறைமாத கர்ப்பிணியாக தனது மாமியார் (?) வீட்டில் இருக்கிறாள்!

- உஷாரு வரும்.

Next Story