கரைந்து போகிறதா..? ‘சாக்பீஸ் சாம்ராஜ்ஜியம்’


கரைந்து போகிறதா..? ‘சாக்பீஸ் சாம்ராஜ்ஜியம்’
x
தினத்தந்தி 15 Jun 2019 11:10 AM GMT (Updated: 15 Jun 2019 11:10 AM GMT)

சாக்பீசுகளின் தேவை வெகுவாக குறைந்துவிட்டது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. கடைகளில் பாடபுத்தகங்கள் நோட்டு-பேனாக்களும், பல்பம்-சிலேட்டுகளும் படுஜோராக விற்பனையாகின்றன. ஆனால் பள்ளிக்கூடங்களில், கற்பித்தல் பணிக்கு பயன்படும் சாக்பீசுகளின் வியாபாரம் மட்டும் ‘டல்’ அடிக்கிறது. காரணம், டிஜிட்டல் இந்தியா என்கிறார்கள், கடைக்காரர்கள்.

நவீன பள்ளிக்கூடங்களில் புரஜெக்டர் திரை மூலமாக பாடம் நடத்தப்படுவதாலும், கரும்பலகைகளுக்கு பதிலாக பி.வி.சி. பலகைகள் பயன்படுத்தப்படுவதாலும், சாக்பீசுகளின் தேவை வெகுவாக குறைந்துவிட்டது. அரசு பள்ளிகள், கிராமப்புற தனியார் பள்ளிகளில் மட்டுமே சாக்பீசுகளின் சாம்ராஜ்ஜியம் நடக்கிறது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் சாக்பீஸ் பயன்பாடும், சாக்பீஸ் உற்பத்தியும், சாக்பீஸ் வியாபாரமும் ஒரேடியாக குறைந்துவிட்டது என்கிறார்கள், சாக்பீஸ் உற்பத்தியாளர்கள்.

பள்ளிகள் திறக்கப்பட்டு, கற்பித்தல் பணிகள் சுறுசுறுப்பாக ஆரம்பமாகியிருக்கும் நிலையில், கரைந்துக்கொண்டிருக்கும் சாக்பீஸ் தொழிலின் இன்றைய நிலையை பற்றி தெரிந்து கொள்ள சாக்பீஸ் உற்பத்தியாளர்களை தேடினோம். பலரும் சாக்பீஸ் தொழிலை ஓரங்கட்டிவிட்ட நிலையில், தர்மபுரி அருகே உள்ள உங்கரான அள்ளி கிராமத்தை சேர்ந்த முனியப்பன் என்பவரை சந்திக்க முடிந்தது. மாற்றுத்திறனாளியான இவர், சாக்பீஸ் உற்பத்தி தொழிலை கடந்த 13 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சிறிய அளவிலான தொழில்கூடத்தை அமைத்து, பணியாட்களின் ஒத்துழைப்போடு, சாக்பீஸ் தயாரித்து வருகிறார். இவரிடம் சாக்பீஸ் உற்பத்தி பற்றியும், சமீபகால வியாபார வீழ்ச்சி பற்றியும் பேசினோம். பல வண்ணங்களில் சாக்பீஸ் தயாராவதை போல, பலவிதமான தகவல்களை பதிலாக தந்தார்.

தமிழகத்தில் சாக்பீஸ் தயாரிப்பு எந்த பகுதியில் அதிகமாக நடைபெறுகிறது?

கும்பகோணத்தில் சாக்பீஸ் தயாரிப்பு கூடங்கள் அதிகமாக உள்ளது. அதேசமயம் தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்டோர் சிறுதொழிலாக சாக்பீஸ் தயாரிப்பை செய்து வருகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் வெள்ளிச்சந்தை, மாரண்டஅள்ளி உள்ளிட்ட சில இடங்களில் 6-க்கும் மேற்பட்டோர் இந்த தொழிலை செய்து வந்தனர். ஆனால் தற்போது ஓரிரு இடங்களிலேயே சாக்பீஸ் தயாரிப்பு தொழில் நடக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது சாக்பீஸ் தயாரிப்பு தொழிலுக்கு எத்தகைய வரவேற்பு உள்ளது?

பொதுப்படையாக பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும் போது சாக்பீஸ் தயாரிப்பு தொழில் சற்று நலிவடைந்து உள்ளது. தமிழகத்தில் சாக்பீஸ் வியாபாரம் சுமாராக இருந்து, தற்போது ‘டல்’ அடிக்கிறது. ஆனால் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில், சாக்பீசுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சாக்பீஸ் வியாபாரத்தில் தமிழகத்திற்கும், பிற மாநிலங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

உற்பத்தி செய்யப்படும் முதல்தர சாக்பீசுகள், வெளி மாநிலங்களில் மட்டுமே விற்பனையாகிறது.

அதிலும் பெங்களூரு சந்தையில்தான் நாங்கள் உற்பத்தி செய்யும் சாக்பீசுகளில், 98 சதவீதம் விற்பனை செய்யப்படுகிறது. ஏனென்றால் அங்குதான் எங்களுக்கு கட்டுப் படியாகும் விலை கிடைக்கிறது. 2 சதவீதம் மட்டுமே உள்ளூர் சந்தையில் விற்பனையாகிறது. உடைந்த வெள்ளை நிற சாக்பீசுகளை கிலோ ரூ.20-க்கும், உடைந்த கலர் சாக்பீசுகளை கிலோ ரூ.40-க்கும் கொடுக்கிறோம். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் உடைந்த சாக்பீசுகளை அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.

சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது? இந்த தொழிலை தேர்வு செய்ததற்கான காரணம் என்ன?

ஐ.டி.ஐ. பிட்டர் படிப்பை முடித்த பின்னர் வேலைவாய்ப்பு தேடினேன். ஆனால் சரியான வேலை கிடைக்கவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகள், கல்லூரிகளில் கரும்பலகைகளின் பயன்பாடு அதிகமாக இருந்தது. அதனால் சாக்பீசுக்கான தேவையும் அதிகமாக இருந்தது. அதை கருத்தில்கொண்டு சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலை தொடங்கினேன். இதற்கான தொழில்நுட்பம், சந்தைப்படுத்தும் முறை ஆகியவற்றை, அனுபவசாலிகளிடமிருந்து கற்றுக்கொண்டதால், தொழில் லாபகரமாக இருந்தது. ஆனால் நவீன பள்ளிகள், சீன இறக்குமதி சாக்பீஸ் போன்றவை இன்று சாக்பீஸ் தொழிலுக்கு பெரும் தலைவலியாகிவிட்டன.

சாக்பீசுகள் சீனாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றனவா?

ஆம்..!, கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் இருந்து சாக்பீசுகள் அதிக அளவில் இறக்குமதியாகிக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் குடிசை தொழில் அடிப்படையில் சாக்பீஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் சீனாவில் தொழிற்சாலைகளின் மூலம் உற்பத்தியாகிறது. அதனால் சீன சாக்பீசுகளின் ‘பினிஷிங் டச்’ நன்றாக இருக்கும். அதேசமயம் கவர்ச்சியான முறையில் ‘பேக்கிங்’ செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்படுவதால், சீன சாக்பீசு களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

சாக்பீஸ் தொழிலுக்கான எதிர்காலம் எப்படி இருக்கும்? உங்கள் அடுத்த தலைமுறையினரை இந்த தொழிலில் ஈடுபடுத்துவீர்களா?

நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்கள் பெருகிவரும் தற்போதைய சூழலில் சாக்பீஸ் தயாரிப்பு தொழிலுக்கான எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை முழுமையாக கணிக்க முடியாது. சிறு, குறு தொழில் பிரிவில் வரும் சாக்பீஸ் தயாரிப்புக்கு அரசின் தொழில் கடனுதவி தாமதமின்றி கிடைக்க வழிவகைகள் செய்யப்பட்டால் குறைந்த லாபம் கிடைத்தாலும் கல்விக்கு சேவை செய்யும் இந்த தொழிலை எங்களின் அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்ல முயற்சி செய்வோம்.

சாக்பீஸ் தயாரிப்பதற்கான மூலப்பொருள் என்ன? எப்படி தயாரிக்கிறீர்கள்?

கடலில் இருந்து கிடைக்கும் உப்பை எடுத்தபின் உப்பளங்களில் படிந்திருக்கும் ஜிப்சம் என்ற வேதிப்பொருள்தான் சாக்பீஸ் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாகும். 4 கிலோ ஜிப்சம் பவுடருடன், நான்கரை லிட்டர் தண்ணீரை கலக்க வேண்டும். அதனுடன் குறிப்பிட்ட விகிதத்தில் மண்எண்ணெய், முந்திரி எண்ணெய் ஆகியவற்றை கலந்து குறிப்பிட்ட பதத்தில் சாக்பீஸ் தயாரிக்கும் எந்திரத்தில் உள்ள அச்சில் பாகுபோல் ஊற்ற வேண்டும். 8 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை எந்திரத்தில் குறிப்பிட்ட வெப்பநிலையில் வைக்கும்போது பாகு இறுகி சாக்பீஸ் கட்டிகளாக மாறிவிடும். பின்னர் அதை எந்திரத்தில் இருந்து எடுத்து வெயிலில் உலர வைக்க வேண்டும். கலர் சாக்பீசுகளை தயாரிக்க, ஜிப்சம் பவுடருடன் சாயநீரை கலக்கிறோம்.

சாக்பீஸ் தயாரிப்பிற்கான தோராய உற்பத்தி செலவு என்ன?

1 வெள்ளை சாக்பீஸ் தயாரிக்க 10 பைசா முதல் 12 பைசா வரை உற்பத்தி செலவு ஆகும். வியாபாரிகள் அதை 14 பைசாவுக்கு வாங்கு கிறார்கள். 22 பைசாவிற்கு உற்பத்தியாகும் கலர் சாக்பீசுகளுக்கு 25 பைசா முதல் 28 பைசா வரை விலை கிடைக்கிறது. இப்படி பைசாக்களில் நடக்கும் வியா பாரத்தில், தொழிலாளர்களின் ஊதியம், சரக்குகளை அனுப்பி வைக்கும் போக்குவரத்து செலவு போன்றவையும் இருக்கின்றன. அதற்குபிறகுதான் லாபம் பார்க்க முடியும்.

பருவமழை காலத்தில் சாக்பீஸ் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறதா? அதை எப்படி சமாளிக்கிறீர்கள்?

மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரைதான் சாக்பீஸ் உற்பத்தி பணிகளை மேற்கொள்கிறோம். இந்த மாதங்களில் உற்பத்தியை அதிகரித்து, சாக்பீசுகளை இருப்பு வைத்து விடுவோம். பருவமழை காலங்களில் சந்தை வாய்ப்பிற்கு ஏற்ப பேக்கிங் மற்றும் வினியோகத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்துகிறோம், என்கிறார்.

சாக்பீசுக்கும், ஆசிரியர்-மாணவர்களுக்கும் இடையேயான பந்தம் நீண்ட நெடிய பிணைப்பை கொண்டது. பாடங்களை கவனிக்காமல் வேறு சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் மாணவர்கள் மீது சாக்பீஸை தூக்கி எறிந்து ஆசிரியர் கண்டிப்பார். ஆசிரியர் இல்லாத வேளையில் மாணவர்களே ஆசிரியராக மாறி சக மாணவர்களுக்கு சாக்பீசில் பாடம் நடத்தி ஆனந்தம் அடைவார்கள். அத்தகைய அனுபவத்தை இன்றைய மாணவர்கள் பெரும்பாலானோர் எதிர்கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளும், ஸ்மார்ட் வகுப்புகளும் சாக்பீஸ் உடனான பந்தத்தை கரைத்துக்கொண்டிருக்கிறது. சாக்பீஸ் தொழிலை போலவே!

Next Story