கோலி கணிப்பு இந்தியாவுக்கே பலித்தது!


கோலி கணிப்பு இந்தியாவுக்கே பலித்தது!
x
தினத்தந்தி 12 July 2019 6:52 AM GMT (Updated: 12 July 2019 6:52 AM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முந்தைய மாதம் இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையே ஒரு நாள் தொடர் ஒன்று இங்கிலாந்தில் நடந்தது. அந்த தொடரில் 4 ஆட்டங்களில் இரு அணிகளும் சேர்ந்து 7 முறை 340 ரன்களுக்கு மேல் குவித்து மலைக்க வைத்தன.

அதனால் இந்த உலக கோப்பையில் ரன் மழை பொழியப்போகிறார்கள், ஏன் ஒரு இன்னிங்சில் 500 ரன்கள் குவித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று முன்னாள் வீரர்கள் பலரும் ஆருடம் கூறினர். ஜாம்பவான் தெண்டுல்கரும் இதே கருத்தை முன் வைத்தார்.

இதே கேள்வியை இந்திய கேப்டன் விராட் கோலியிடம் உலக கோப்பை போட்டிக்கு புறப்படுவதற்கு முன்பாக கேட்டபோது, ‘தொடக்கத்தில் சில ஆட்டங்களில் வேண்டுமென்றால் நிறைய ரன்கள் எடுக்கப்படலாம். ஆனால் போக.... போக... 250 ரன்கள் இலக்கை கூட எட்டுவது நிச்சயம் கடினமாகி விடும். ஏனெனில் அந்த அளவுக்கு நெருக்கடி சூழ்ந்து இருக்கும்’ என்று குறிப்பிட்டார். அவர் எந்த அணியை நினைத்து சொன்னாரோ தெரியாது. ஆனால் இப்போது இந்தியாவுக்கே அவரது கணிப்பு பலித்ததுடன், ரசிகர்களின் இதயங்களும் நொறுங்கி போய் விட்டன.

மான்செஸ்டரில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது அரைஇறுதியில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்கள் இலக்கை அடைய முடியாமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று உலக கோப்பையை விட்டு வெளியேறியது. இந்த உலக கோப்பை தொடரில் 250 ரன்களுக்கு மேலான இலக்கை இரண்டு அணிகள் மட்டுமே வெற்றிகரமாக விரட்டிப்பிடித்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு சில காரணங்களை முன் வைக்க முடியும். இதுபோன்ற முக்கியமான ஆட்டத்தில் அதுவும் மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் ‘டாஸ்’ வெல்வது முக்கியம். ஆனால் அது நம் கையில் இல்லை. அடுத்து டாப்-3 வீரர்கள் சொல்லி வைத்தார் போல் தலா ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தது. முந்தைய இலங்கைக்கு எதிரான உப்பு-சப்பில்லாத லீக் ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் சதம் விளாசினர். இந்த அரைஇறுதி சுற்றில் அவர்களில் ஒருவர் இரட்டை இலக்கத்தை தொட்டு இருந்தால் கூட ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் விராட் கோலி, உலக கோப்பை ‘நாக்-அவுட்’ சுற்றுகளில் தடுமாறுவது மீண்டும் ஒரு முறை கண்கூடாக தெரிந்துவிட்டது. 6 ‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்களில் அவர் வெறும் 73 ரன் மட்டும் எடுத்திருப்பதே அதற்கு சான்று.

இன்னொரு தவறு கள வியூகம். அதாவது அனுபவம் வாய்ந்த டோனியை பின்வரிசையில் அதாவது 7-வது வீரராக களத்திற்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு என்கிறார், இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. டோனியை ஹர்திக் பாண்ட்யாவுக்கு முன்பாக இறக்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு விக்கெட் சரிவை தடுத்து இருப்பார். மேலும் ரிஷாப் பண்ட் ஆடும் போது, டோனி உடன் இருந்திருந்தால் பண்ட் அந்த மோசமான ஷாட் ஆடாமல் சுதாரித்து இருப்பார். தன்னை நன்கு நிலைநிறுத்தி விளையாடிக்கொண்டிருந்த ரிஷாப் பண்ட் (32 ரன்) கேட்ச் ஆன போது, வெளியில் இருந்த கேப்டன் கோலி மிகுந்த பதற்றத்தையும், ஏமாற்றத்தையும் வெளிக்காட்டினார். இதே போல் ரவீந்திர ஜடேஜாவுடன் கைகோர்த்து போராடிய டோனி 20 பந்துகளில் ரன் எடுக்காமல் விரயமாக்கினார். அவர் சில ஓவர்களுக்கு முன்பாக வேகம் காட்டியிருந்தால் அதிசயம் நடந்திருக்கலாம்.

அடுத்து மழையால் ஆட்டம் மாற்று நாளுக்கு கொண்டு செல்லப்பட்டது இந்தியாவுக்கு பாதகமாக பார்க்கப்படுகிறது. முதல் நாளில் மழைகுறுக்கீடு இன்றி நடந்திருந்தால் அதே உத்வேகத்துடன் இந்திய அணி ஆடியிருக்கும் என்று நெட்டிசன்கள் டுவிட்டரில் தங்களது ஆதங்கத்தை கொட்டியுள்ளனர்.

இதே இங்கிலாந்தில் 1999-ம் ஆண்டு உலக கோப்பையில் நடந்த இந்தியா-இங்கிலாந்து இடையேயான கடைசி லீக் ஆட்டம் இதே போன்று தான் மழை காரணமாக 2 நாட்கள் நடந்தது. அதில் இந்தியா வாகை சூடி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த முறை இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இனி 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடக்கிறது. அதற்கு அணியை தயார்படுத்துவதை இப்போதில் இருந்தே தொடங்க வேண்டும். டோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் அடுத்த உலக கோப்பையில் ஆட வாய்ப்பில்லை. அவர்களது இடத்திற்கு சரியான வீரர்கள் அடையாளம் கண்டு அவர்களை பட்டை தீட்ட வேண்டும்!

-ஜெய்பான்

Next Story