சிறப்புக் கட்டுரைகள்

8 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்த பாலைவனம் + "||" + The desert that was the sea 8 crore years ago

8 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்த பாலைவனம்

8 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்த பாலைவனம்
உலகில் புதிய கண்டுபிடிப்புகள் மட்டுமல்ல, பழமையான வரலாறுகளும், பழமையான தகவல்களும் மனிதர் களுக்கு எப்போதும் ஆச்சரியம் அளிப்பவைதான்.
உலகில் மனிதகுல வரலாறானது, 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது என அறிவியல் கூறுகிறது. இதை வரலாற்றில் ‘பாலியோலித்திக் காலம்’ அல்லது ‘கற்காலம்’ என்று அழைக்கிறார்கள்.

சார்ஜாவில் உள்ள மலிகா என்ற இடத்தில் கடந்த 1 லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அங்குள்ள பாலைவன பகுதிகளில் ஏராளமான தாவர மற்றும் விலங்குகளின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அந்த பகுதியில் மிகப்பெரிய பாறை படிமங்கள் பல்வேறு வடிவங்களில் ஆச்சரியப்படுத்துவதாக உள்ளது.

மலிகா அருகே உள்ள இந்த பாறை படிம பகுதியை தொலைவில் இருந்து பார்த்தால், பாறைகள் பாதி மணலில் புதைந்து இருப்பதுபோல் காணப்படும். தூரத்தில் இருந்து பார்க்கும்போது சிறியதாகத் தெரியும் இந்தப் பாறை படிமங்கள், அருகில் சென்றால் மலைகளைப் போல மிகப் பிரமாண்டமாக காட்சி தருகின்றன.

தற்கால ஆய்வுகளில் சார்ஜா பாலைவனத்தில் உள்ள இந்த பகுதியானது, பாறை படிமங்களால் ஆனது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்கள், தாவரங்கள் போன்றவை, மண்ணில் அல்லது கடல் பகுதிகளில் பாறைகளோடு புதைந்து போகும்போது, அவற்றின் உருவம் அதில் படிந்து போகிறது. இதையே பாறை படிமம் (பாசில்) என்கிறார்கள்.

அப்படி கடலில் பாறைகளோடு படிந்து போன படிமங்கள்தான், மலிகா அருகே உள்ள பாலைவனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. இதை ஆராய்ச்சி செய்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், இந்த இடம் சுமார் 8 கோடி ஆண்டு களுக்கு முன்பு கடலாக இருந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதனால்தான் இந்த இடத்தில் மரங்களின் தண்டுப் பகுதியில் உள்ள குறுக்குவெட்டு தோற்றங்கள், சிறு சிறு உயிரினங்களில் வடிவங்கள் போன்றவை தென்படுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த பகுதிக்கு பாலைவன பயணமாக நகரின் மையத்தில் இருந்து 25 கி.மீ தொலைவு வாகனத்தில் செல்ல வேண்டும். இந்தப் பகுதியைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள், இது என்னவென்றே தெரியாமல் அதன் அழகை மட்டுமே கண்டு களித்துவிட்டுச் செல்கின்றனர்.

- மர்யம் சா