டாலர் மதிப்பு அடிப்படையில் கச்சா எண்ணெய் இறக்குமதி 8.9 சதவீதம் குறைந்தது


டாலர் மதிப்பு அடிப்படையில் கச்சா எண்ணெய் இறக்குமதி 8.9 சதவீதம் குறைந்தது
x
தினத்தந்தி 19 Sep 2019 10:26 AM GMT (Updated: 19 Sep 2019 10:26 AM GMT)

ஆகஸ்டு மாதத்தில், டாலர் மதிப்பு அடிப்படையில் கச்சா எண்ணெய் இறக்குமதி 8.9 சதவீதம் குறைந்து இருக்கிறது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

ஈரான், ஈராக்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நம் நாடு சவுதி அரேபியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம், வரலாறு காணாத அளவிற்கு, 11,190 கோடி டாலரை எட்டி இருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 27.15 சதவீதம் அதிகமாகும். இதே காலத்தில் எண்ணெய் அல்லாத சரக்குகள் இறக்குமதி 3 சதவீதம் உயர்ந்து 36,697 கோடி டாலராக இருக்கிறது. முந்தைய ஆண்டில் அது 35,692 கோடி டாலராக இருந்தது.

நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எண்ணெய் இறக்குமதி 1,138 கோடி டாலராக இருந்தது. மே மாதத்தில் அது 1,244 கோடி டாலராக உயர்ந்தது. ஜூன் மாதத்தில் 1,103 கோடி டாலராக குறைந்தது. ஜூலையில் 960 கோடி டாலராக மேலும் குறைந்தது. ஆகஸ்டு மாதத்தில் 1,088 கோடி டாலராக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 1,1,94 கோடி டாலராக இருந்தது. ஆக, இறக்குமதி 8.9 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலத்தில் எண்ணெய் அல்லாத சரக்குகள் இறக்குமதி 15 சதவீதம் குறைந்து (3,379 கோடி டாலரில் இருந்து) 2,871 கோடி டாலராக குறைந்து இருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 5 மாதங் களில் (2019 ஏப்ரல்-ஆகஸ்டு) நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி 6 சதவீதம் குறைந்து 5,593 கோடி டாலராக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது 5,907 கோடி டாலராக இருந்தது. இதே காலத்தில் எண்ணெய் அல்லாத சரக்குகள் இறக்குமதி 5 சதவீதம் குறைந்து 15,106 கோடி டாலராக இருக்கிறது.

தங்கம் இறக்குமதி

இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கம் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் ஜூலை வரையிலான முதல் 4 மாதங்களில் 1,316 கோடி டாலருக்கு (சுமார் ரூ.92 ஆயிரம் கோடி) தங்கம் இறக்குமதி ஆகி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 15 சதவீத உயர்வாகும்.

Next Story