உஷாரய்யா உஷாரு.. குடிகார தந்தையும்.... பாசமான மகளும்


உஷாரய்யா உஷாரு.. குடிகார தந்தையும்.... பாசமான மகளும்
x
தினத்தந்தி 6 Oct 2019 4:30 AM GMT (Updated: 5 Oct 2019 6:43 AM GMT)

அவள் ‘பிளஸ்-டூ’ படித்துக் கொண்டிருந்தாள். அவளது தந்தை பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலைபார்த்துவிட்டு, சம்பாதித்த பணத்தோடு சொந்த ஊர் திரும்பினார்.

சம்பாதித்த பணத்தில் மூன்று கார்களை வாங்கி வாடகைக்கு ஓடவிட்டார். மூன்று பேர் டிரைவர்களாக வேலைபார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த டிரைவர்களில் ஒருவனான இளைஞனுக்கும், பிளஸ்-டூ படித்துக்கொண்டிருந்த அந்த மாணவிக்கும் காதல் உருவாகிவிட்டது. அவளை தினமும் காரில் பள்ளிக்கு அழைத்து செல்வதும், திரும்பகூட்டி வருவதும் அவனது வேலையாக இருந்தது. 

முதலில் அவர் களது காதலை, அவளது பெற்றோரால் கண்டுபிடிக்க முடியவில்லை. காதல் தொடர்ந்ததால் அவளால் படிப்பில் கவனம் செலுத்தமுடியவில்லை. எப்படியோ ஓரளவு மதிப்பெண் வாங்கி தேர்ச்சிபெற்றாள். மதிப்பெண் குறைந்ததால் சற்று தூரத்தில் உள்ள கல்லூரியில்தான் அவளுக்கு இடம் கிடைத்தது. அதுவே அவர்கள் காதல் தொடரவும் வசதியாகிவிட்டது.

அவன் பஞ்சத்தில் அடிபட்டவன் போன்று ஒல்லியான உடல்வாகு கொண்டவன். அவள் வலுவான உடலும், கம்பீரமான தோற்றமும் கொண்டவள். கல்லூரி சார்பிலான விளையாட்டு போட்டி களிலும் பங்குபெற்றுக்கொண்டிருந்தாள்.

அவள் இரண்டாம் ஆண்டு படிப்பில் அடியெடுத்துவைக்கும்போதே அவளது பெற்றோர் காதலை கண்டறிந்துவிட்டார்கள். அவளிடம் எதுவுமே கேட்காமல், அவனை மட்டும் கடத்திச்சென்று மிரட்டி, கடுமையாக அடித்து உதைத்து துரத்திவிட்டார்கள். பின்பு எதுவும் நடக்காததுபோல் அவளை கல்லூரிக்கு அனுப்பிவிட்டு, தொடர்ந்து சில மாதங்கள் கண்காணித்துவந்தார்கள்.

‘அவன் திரும்பி வர வாய்ப்பில்லை. இனி காதல் தொடரவும் வழியில்லை’ என்று தீர்மானித்து அவளது தந்தை கண்காணிப்பை விலக்கிக்கொண்ட சில மாதங்களில் திடீரென்று ஒருநாள் அவளை காணவில்லை. அதிர்ச்சியுடன் விசாரித்தபோது, அவள் அந்த காதலனோடு சென்றுவிட்டாள் என்பது தெரிந்தது. சில நாட்கள் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், ‘இனி எக்கேடு கெட்டுப்போனாலும் கவலையில்லை’ என்று நினைத்து பெற்றோர்கள் அவளை கைகழுவிவிட்டார்கள்.

வேறு ஊருக்கு சென்று காதல் மனைவியோடு ரகசிய வாழ்க்கை நடத்த தொடங்கினான் அவன். சில மாதங் களிலே கர்ப்பமாகி அவள் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள். அதுவும் வளர்ந்து பள்ளிக்கு செல்லத் தொடங்கியது. காலப்போக்கில் அவனது உடல்நிலை பாதிக்கப்பட்டது. முன்புபோல் அதிக நேரம் வாடகை காரை ஓட்ட முடியவில்லை. காதலித்த காலத்தில் அவளது தந்தை ஆள் அனுப்பி கடுமையாக தாக்கியது அவனுக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

அதனால் மாமனாரை பழிவாங்கும் உணர்வு அடிக்கடி ஏற்பட்டது. அப்போதெல்லாம் அது மனைவி மீதான வெறுப்பாக மாறியது. மது அருந்திவிட்டு மனைவியை அடிக்கத் தொடங்கினான். மனைவியை அடித்தாலும் மகள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தான். இப்போது அந்த சிறுமிக்கு 7 வயது.

தந்தை, தாயை அடிப்பதும்- தனக்கு தாத்தா-பாட்டி போன்ற உறவுகள் இல்லாமல் இருப்பதும் அந்த சிறுமிக்கு கவலையை ஏற்படுத்தியது. அதனால் அவள் சரியாக சாப்பிடுவதில்லை. பள்ளியில் அவ்வப்போது சோர்ந்து, மயங்கிவிழும் நிலையும் ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் அவன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியை நேரங்காலம் பார்க்காமல் அடிப்பதும் அதிகரித்துக் கொண்டிருந்தது.

அன்று அவன் மது எதுவும் குடிக்காமல் மகளை கொஞ்சிக் கொண்டிருந்தபோது, ‘அப்பா என்னை ஓட்டலுக்கு அழைத்துச்சென்று நிறைய பிரியாணி வாங்கித்தருவீர்களா?’ என்று கேட்டாள். அவனும் உடனே அழைத்துச் சென்றான். அவள் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட்டாள். அதை பார்க்கவே அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. கூடவே மகள் அவ்வளவு ஆர்வத்தோடு கேட்டு வாங்கி சாப்பிட என்ன காரணம் என்ற கேள்வியும் அவனுக்குள் எழுந்தது.

சாப்பிட்டுவிட்டு திரும்பிவரும் வழியில் மகளிடம் ‘நீ திடீர்ன்னு இவ்வளவு ஆர்வமாக நிறைய சாப்பிட என்ன காரணம்?’ என்று கேட்டான். அவள் உடனே ‘நீங்க எனக்கு எப்போதுப்பா கல்யாணம் பண்ணிவைப்பீங்க?’ என்று கேட்டாள். அந்த கேள்வியை எதிர்பார்க்காத அவன் சுதாரித்துக்கொண்டு, ‘இப்போ உனக்கு 7 வயதுதானே ஆச்சுது. இன்னும் 15 வருஷம் கழிச்சி கல்யாணம் பண்ணிவைப்பேன்’ என்றான்.

‘நல்லதுப்பா! இனி அடிக்கடி நீங்க என்னை ஓட்டலுக்கு கூட்டிட்டு வந்து இதைவிட நிறைய வாங்கித்தாங்க. அம்மாவை நீங்க தினமும் அடிக்கிறது மாதிரி எனக்கும் ஒரு கணவன் கிடைத்தால், இப்போ அம்மா தாங்குகிற மாதிரி என் உடம்பும் அத்தனை அடியையும் தாங்கணும்தானேப்பா..!’ என்று குழந்தை சொன்னதும், அவன் அதிர்ந்து வாயடைத்துபோனான்.

மகள் இந்த வயதிலே இப்படி பேசுவாள் என்று சற்றும் எதிர்பார்க்காத அவன், அதற்கு மேல் ஒருஅடிகூட எடுத்துவைக்க முடியாமல் அப்படியே நிற்க, ‘அம்மா வீட்டைவிட்டு ஓடிவந்ததால் நீங்க அடிக்கிற அடி அவங்க அப்பாவுக்கு தெரியாது. ஆனால் நான் ஓடிப்போகமாட்டேன்ப்பா. கல்யாணத்திற்கு பிறகு நான் வாங்குற ஒவ்வொரு அடியையும் நீங்க பக்கத்தில் இருந்து பார்த்து கண்ணீர் விடுவீங்கப்பா.. அதுதான் கடவுள் உங்களுக்கு தரும் தண்டனையா இருக்கும்..’ என்று சொன்னபடியே அந்த சிறுமி நடுரோட்டில் வைத்து கதறி அழத் தொடங்கிவிட்டாள். நடப்பதை யூகிக்க முடியாமல் நிலைகுலைந்து போன அவனும், தன்னை மறந்து, தவறை உணர்ந்து அழுதுவிட்டான்.

நீங்கள் உங்கள் மனைவியை அடிக்கிறீர்களா? நிச்சயம் உங்கள் பெண் குழந்தைகளின் மனநிலையும் இப்படித்தான் இருக்கும்!

- உஷாரு வரும்.

Next Story