அழிவில் இருந்து நாடகக்கலை காப்பாற்றப்படுமா?


ஆர்.எஸ்.சுந்தர்ராஜன், தலைவர், தென்னிந்திய நாடக நடிகர்கள் சங்கம்
x
ஆர்.எஸ்.சுந்தர்ராஜன், தலைவர், தென்னிந்திய நாடக நடிகர்கள் சங்கம்
தினத்தந்தி 15 Oct 2019 6:07 AM GMT (Updated: 15 Oct 2019 6:07 AM GMT)

உலகம் முழுவதும் உள்ள நடுத்தர குடும்பத்தாரின் இலவச பொழுது போக்கு அம்சமாக கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் நாடகம் என்ற அற்புதமான கலை உலகெங்கும் கொடிகட்டி இருந்தது.

நாடகத்தில் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியர் உலக அரங்கில் மிக முக்கியமான மனிதராக போற்றப்பட்டார். நாடகத்தை ஓர் முக்கியமான ஊடகமாக வைத்து பல நாடுகளில் சுதந்திர போராட்ட கருத்துகள் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது.

உலகில் நாடகம் நடைபெறாத கிராமங்களே இல்லை. மொழி, கலாசாரம் கடந்து அனைவராலும் நாடகங்கள் ரசிக்கப்பட்டன. நகைச்சுவை அம்சங்களும், கோமாளித்தனமும் நாடகம் மூலமே மக்களிடம் எளிதாக சென்றடைந்தது.

பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வாழ்க்கையாகவே இருந்துள்ளது. நாடகத்தின் வருமானத்தை நம்பியே லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கை நடத்தியுள்ளார்கள். நாடக மேடையே லட்சியமாக கொண்டவர்களும், தங்களது வருமானம் முழுவதையும் நாடகத்திற்கு அர்ப்பணித்தவர்களும், தங்களது சொத்தை விற்று நாடக கம்பெனிகளை தொடர்ந்து நடத்தியவர்களும் உண்டு.

பல நாடக கம்பெனிகள் ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக இருந்துள்ளன. 3 வேளை உணவிற்காக நாடக கம்பெனிகளில் உதவி எடுபடி வேலைகளில் சேர்ந்து பின்னாளில் உலகம் வியக்கும் நடிகர்களாக வந்தவர்கள் பலர் உண்டு.

நாடக கம்பெனிகளில் சேர்ந்தவர்கள் நடனம், பாட்டு, வசனம், நடிப்பு மற்றும் இசை கருவிகள் வாசித்தல் போன்ற பல துறைகளை அறிந்தவர்களாக உருவாக்கப்பட்டார்கள். நாடக நடிகர்கள் அனைவருக்கும் மேற்குறிப்பிட்ட அனைத்து திறமைகளும் இருக்கும். திறமைகளின் அளவு மாறுபடலாம். ஞாபக சக்தியை அதிகப்படுத்துதல், உடல் ஆரோக்கியத்தை பேணுதல் போன்றவைகளும் கற்றுகொடுக்கப்பட்டன.

நாடக நடிகர்கள் பலர் சிறந்த ஒப்பனை கலைஞர்களாகவும், காட்சி அமைப்பாளர்களாகவும் ஒலி மற்றம் ஒளி அமைப்பாளர்களாகவும், உடை அலங்கார நிபுணர்களாகவும் உலக அளவில் புகழ் பெற்றுள்ளார்கள். திரைப்படங்கள் வெளிவர தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் நாடக நடிகர்களும், நடிகைகளும் மட்டுமே திரைப்படங்களில் நடித்தார்கள். திரைப்படங்களில் நடித்தவர்களில் ஓய்வு நாட்களில் நாடகங்களில் தொடர்ந்து நடித்தவர்கள் அதிகம். திரைப்படங்களில் நடிக்க நாடக கம்பெனிகளில் நடிகராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. நமக்கு நன்றாக தெரிந்த தமிழ் திரை வரலாற்றில் நீண்ட பட்டியலே உண்டு. சமூக நாடகங்கள், ஒருபுறம் புராண நாடகங்களும், ஓரங்க நாடகங்களும், தெருகூத்தும் கொடிகட்டி பறந்த காலம் உண்டு.

திரைப்படத்தின் எண்ணிக்கையும், ஆதிக்கமும் அதிகமாக வளர்ந்த காலகட்டத்தில் கூட நாடகங்கள் அவ்வப்பொழுது நடைபெற்றன. 1960 முதல் 1970 வரையான காலகட்டத்தில் உலக அரங்கில் நாடகத்தின் அளவு வேகமாக சரிய தொடங்கியது. பல நூற்றுக்கணக்கான நாடக சபாக்கள் மூடப்பட்டன. நாடகம் மீது மக்கள் வைத்திருந்த மோகம் குறைய தொடங்கியது. இந்த மோகம் திரைப்படம் பக்கம் திரும்பியது.

திரைப்படங்களில் பிரம்மாண்டங்களும், யதார்த்தத்தை மிஞ்சிய காட்சி அமைப்புகளும், பாடல்களும் ஒருபுறம் இருக்க, கவர்ச்சியும், வன்முறையும் மறுபுறம் இருந்ததால் இளம் வயது முதல் முதியோர் வரை திரைப்படம் பக்கம் தங்களது ஆர்வத்தை காட்டியதால் நாடகங்கள் பார்ப்பதற்கு வரும் கூட்டம் மிகவும் அதிக அளவில் குறைந்தது. பல நாடகங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டதால் பல சபாக்கள் நாடங்கள் நடத்துவதை நிறுத்தின. நாடக கலைஞர்களும் திரைப்படம் பக்கம் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நாடகத்தில் வரும் வருவாயை விட திரைப்படங்களில் பல மடங்கு வருவாய் வருவதால், நாடகத்தைவிட பேரும், புகழும் மிக வேகமாக திரைப்படங்களில் வருவதால் நாடக சபாக்களில் இருந்த பலர் திரைப்படங்களில் பணியாற்ற சென்று விட்டனர். அதனை தொடர்ந்து தொலைக்காட்சி வந்த பிறகு நாடகத்தின் மீதிருந்த சிறு சிறு ஆசை கூட மக்களிடம் குறைந்து விட்டதால் நாடக கலை முற்றிலுமாக அழிந்து விட்ட நிலைக்கு தள்ளப்பட்டது. நாடகத்தை நடத்திவருவதற்கு யாரும் முன் வருவதில்லை. வருடம் முழுவதும் நாடகங்கள் நடத்தி வந்த அனைத்து சபாக்களும் மூடப்பட்டன. திருவிழாக்களில் மட்டுமே ஒரிரு இடங்களில் நாடகங்கள் நடைபெறுவதை காண முடிகிறது.

நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மதுரை, சென்னை மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களில் எப்போதாவது ஒரு முறை தான் நாடகங்கள் நடக்கின்றன. பொருட்காட்சி, அரசு விழாக்களில் மட்டுமே நாடகங்கள் நடக்கும். நாடகம் என்றால் என்ன? அது எப்படி உருவாக்கப்பட்டு மேடைகளில் அறங்கேற்றப்படுகிறது என்பது இன்றைய இளைய தலை முறையினருக்கு தெரியாது.

முக்கிய தலை நகரங்களில் உள்ள ஒரிரு சாபாக்களில் மட்டும் இன்னும் நாடகங்களை நடத்தி வருகின்றன. வருடத்தில் மிக குறைந்த நாட்களே நாடகத்தை நடத்தி வருகிறார்கள். பல இடங்களில் ரசிகர்களின் கூட்டம் மிகவும் குறைவாகவே காணமுடிகிறது. பல கஷ்ட நஷ்டங்களுக்கிடையே நாடகத்தை ஒரு சவாலாகவே நடத்தி வருகிறார்கள். அழிந்து வரும் நாடக கலையை காப்பாற்றுவதற்கு அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி பாட புத்தகத்தில் நாடகம் ஒரு துணைப்பாடமாக சேர்க்க வேண்டும். இதில் நாடகம் குறித்த தகவல்களையும், சிறந்த நாடகங்களையும், நாடக நடிகர்கள், ஆசிரியர்கள், உலகின் தலை சிறந்த நாடகங்கள், நாடகங்கள் திரைப்படங்களாக மாறியது, போன்ற அம்சங்களை உள்ளடக்கி 9 மற்றம் 10 வகுப்பு பாடத்தில் துணைப்பாடமாக சேர்க்க வேண்டும்,

நலிந்து வரும் நாடக கலையை காப்பாற்ற “நாடக கலைஞர்கள் நல வாரியம்” அமைத்து அதில் நாடகம் தொடர்பான வல்லுனர் குழுவை வைத்து நாடக கலை வளர்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளில் நாடக ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள நாடக கலைஞர்களுக்கு மாதா மாதம் ரூ.2000 ஊக்கத் தொகை வழங்கி புதிய நாடகங்கள் நடத்த அரசு உதவி செய்ய வேண்டும்.

அனைத்து அரசு விழாக்களிலும், பொருட்காட்சி மற்றும் கண்காட்சி உட்பட எல்லா நிகழ்ச்சிகளிலும் தினந்தோறும் நாடகம் நடத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அறிவுரை வழங்க வேண்டும்.

மாவட்டங்கள் அளவிலான நாடக போட்டிகள் நடத்த வேண்டும். இதற்கான அனைத்து செலவுகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

நாடக கலையை அழிவிலிருந்து காப்பாற்ற அரசு சிறப்பு கவனம் செலுத்தினால் மட்டுமே சாத்தியமாகும். அரசின் நடவடிக்கைகள் காலதாமதமானால் மிக குறுகிய காலத்தில் நாடகக்கலை முற்றிலுமாக மறைந்து போகும்.

முக்கிய கலைகளில் ஒன்றான முதன்மை கலையான நாடக கலையை காப்பாற்ற அனைத்துத் தரப்பினரும் அரசிற்கு குரல் கொடுத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

  -  ஆர்.எஸ்.சுந்தர்ராஜன், தலைவர், தென்னிந்திய நாடக நடிகர்கள் சங்கம்.

Next Story