மோடியின் கூட்டாண்மை மந்திரத்தால், முதல் இடத்தில் இந்தியா


மோடியின் கூட்டாண்மை மந்திரத்தால், முதல் இடத்தில் இந்தியா
x
தினத்தந்தி 13 Nov 2019 4:54 AM GMT (Updated: 13 Nov 2019 4:54 AM GMT)

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் (ஆர்.சி.இ.பி.) இருந்து விலகியிருப்பது என்று நவம்பர் 4-ந்தேதியன்று இந்தியா எடுத்த முடிவு நமது வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும். நரேந்திர மோடி என்ற புரட்சிகரமான தலைவரால் இந்தியா தன்னம்பிக்கையோடு தற்போது மிளிர்கிறது.

விவசாயிகள் நலன், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஜவுளித்துறை, பால் மற்றும் உற்பத்தி, மருந்து, இரும்பு மற்றும் ரசாயன தொழிற்சாலைகளின் நலனை கருத்தில் கொண்டு பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் இணையவேண்டாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க முடிவு பிரதமர் மோடியால் எடுக்கப்பட்டது. வர்த்தக இழப்பு உள்ளிட்ட இந்தியாவின் சில கவலைகளை இந்த ஒப்பந்தம் பூர்த்தி செய்யாது என்பதால், மோடி தொடக்கத்தில் இருந்தே தன்னை சமாதானப்படுத்திக்கொள்ளவில்லை. இதனால் தான் நமக்கு எதிராக ஒருதலைபட்சமாகவும், நம்முடைய விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் நலனுக்கு எதிராகவும் இருக்கும் இந்த சர்வதேச அமைப்பில் இந்தியா பங்கேற்காது என்று அறிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்தியாவின் நலன்களை பாதுகாக்க தவறிவிட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். 2007-ம் ஆண்டு சீனாவோடு, பிராந்திய வர்த்தக ஒப்பந்தத்தை போட்டு, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது. இதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சீனா உடனான இந்திய வர்த்தகம் கடுமையான பாதிப்பினை சந்திக்க நேரிட்டது. சீனா உடனான இந்தியாவின் வர்த்தகம் 23 மடங்கு அதிக இழப்பை சந்தித்தது. அதாவது 2005-ம் ஆண்டு ரூ.1.9 பில்லியன் ஆக இருந்த வர்த்தக இழப்பு 2014-ம் ஆண்டு 44.8 பில்லியன் ஆக அதிகரித்தது. இது உள்நாட்டு தொழில்களை எவ்வளவு கடுமையாக பாதித்தது என்பதை அறிவதற்கு நமக்கு கொஞ்ச அவகாசம் தேவைப்படுகிறது.

இந்திய விவசாயிகள் மற்றும் தொழிற்சாலைகள் மீது காங்கிரஸ் கட்சி வைத்திருந்த நலன் எத்தகையது என்பதற்கு 2003-ம் ஆண்டு போடப்பட்ட பாலி ஒப்பந்தமே சான்று. மன்மோகன் சிங் தலைமையிலான மந்திரிசபையில் வர்த்தக மந்திரியாக இருந்த ஆனந்த் சர்மா உலக வர்த்தக சபையின் 2 கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது விவசாயிகளுக்கான ஆதரவு விலை மற்றும் விவசாய மானியத்துக்கான ஒதுக்கீடுகள் உள்ளிட்டவற்றில் இந்தியாவின் நிலைப்பாட்டை கடுமையாக நலிவடையச் செய்துவிட்டார். இது விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சரியான தருணத்தில் தலையிட்டு, நம்முடைய விவசாயிகளின் நலனை பாதுகாப்பதை உறுதி செய்யும் வகையில் வர்த்தக மந்திரி நிர்மலா சீதாராமன் மூலமாக அந்த முன்மொழிவை நிராகரிக்கச் செய்தார்.

காங்கிரஸ் கட்சியிடம் முற்போக்கான சிந்தனை இல்லாததால் ஒப்பந்தத்தில் இந்தியா பங்கேற்பதாக ஒப்புகொண்டது. 10 ஆசிய நாடுகளில் சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய 3 நாடுகளே பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் தங்களை இணைத்துக் கொண்டன. சிறு நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என்ற சிந்தனை இல்லாமல் ஒப்பந்தத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசான காங்கிரஸ் கையெழுத்திட்டது. இதுதான் சீனப் பொருட்கள் இந்தியாவில் வெள்ளம் போன்று நுழைவதற்கு தொடக்க ஆதாரமாக அமைந்தது. அதேசமயத்தில் இந்தியா தனக்கு சாதகமான விதிகளின்படி பிற நாடுகளோடு வர்த்தகத்தில் ஈடுபடமுடியவில்லை. ஆசிய தடையற்ற வர்த்தக பகுதி என்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இந்தியாவின் நலன்களை காங்கிரஸ் தாரைவார்த்துவிட்டது. இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் 50 சதவீதம் மற்றும் 69 சதவீதம் உள்ளிட்ட அவர்களுடைய சந்தை பங்குகளை இந்தியாவுக்கு திறந்துவிட்டன. ஆனால் நாம் 74 சதவீத பொருட்களுக்கான வர்த்தகத்தை திறந்துவிட்டோம்.

இந்த செயல்திறன் அற்ற முடிவுகள் காரணமாக, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்த நாடுகள் உடனான நமது வர்த்தகம் ஏராளமான இழப்பை சந்தித்தது. அதாவது 2004-ம் ஆண்டு ரூ.7 பில்லியன் ஆக இருந்தது, 2014-ம் ஆண்டு ரூ.78 பில்லியன் ஆக அதிகரித்தது. தற்போதைய பரிவர்த்தனைப்படி சொல்லவேண்டும் என்றால் 2004-ம் ஆண்டு ரூ.50 ஆயிரம் கோடியாக இருந்த இழப்பு, 2014-ம் ஆண்டு ரூ.5 லட்சத்து 46 ஆயிரம் கோடியாக உயர்ந்துவிட்டது. 2014-ம் ஆண்டில் இருந்து மோடி தலைமையிலான அரசு, காங்கிரஸ் அரசு செய்த தவறுகளை திருத்துவதற்காக தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறது. பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில், தனது நலன்களை பாதுகாப்பதில் இந்தியா தற்போது தீவிரம் செலுத்தி வருகிறது.

இந்தியாவில் சேவை துறைகளை முதல் முறையாக தொடங்கவேண்டும், இந்தியாவில் இருந்து அதிகமாக ஏற்றுமதி செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட சாதகமான பல்வேறு நிபந்தனைகளை பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்தி வருகிறோம். 2014 ஜனவரி 1-ந்தேதிக்கு பொருந்தக்கூடிய இறக்குமதி வரி, அடிப்படை விகிதத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்ததால் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி ஆர்வம் செலுத்தியது. இது உள்நாட்டு தொழிற்சாலையில் சீரழிவை ஏற்படுத்தியது. மேலும் தடையற்ற இறக்குமதியையும் ஊக்குவித்தது. கடந்த சில ஆண்டுகளில் பல பொருட்களுக்கான இறக்குமதி வரியும் உயர்ந்துவிட்டது. விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உற்பத்தி துறைகளின் நலன் மீது உறுதியான அக்கறை கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை கூட்டத்தில் அடிப்படை விகிதம் தொடர்பாக வாதிட்டார். இந்தியாவின் நலனுக்கு முக்கியமாக உள்ள கட்டண வேறுபாட்டில் திருத்தம், சுங்கத்தீர்வைக்கான அடிப்படை விகிதத்தில் மாற்றம், நாட்டுக்கு சாதகமான விதிமுறையில் மாற்றம், முதலீட்டை நிர்ணயிக்கும்போது இந்தியாவின் கூட்டாட்சி தன்மைக்கு மதிப்பளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை செய்யவேண்டும் என்று நரேந்திர மோடி, வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தினர். இந்த கூட்டத்தில் விவாதிப்பதற்காக முன்மொழியப்பட்ட 70 அம்சங்களில், இந்தியாவை சார்ந்த 50 அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

தென் கொரியா உடனான ஆசிய மற்றும் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை நாம் மறுமதிப்பீடு செய்ய தொடங்கினோம். இதேபோல ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளோடு வர்த்தக தொடர்புகளையும் ஏற்படுத்தினோம். இதன் மூலமாக நமது விவசாயிகள், சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி துறைகள் உடனடியாக பயன்பெறத்தொடங்கினார்கள். நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவின் அந்தஸ்து வளர்ந்து வருகிறதை நாங்கள் உணர்கிறோம். பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை உறுப்பினர்கள் நம்முடைய கோரிக்கைகளை புறந்தள்ளமுடியாது. அதனை ஏற்றுக்கொள்வதற்கான காலம் கனியும். ஆசிய நாடுகளோடு தடையற்ற வர்த்தக பகுதி ஒப்பந்தம் மூலம் பொருளாதார உறவுகளை வெற்றிகரமாக கடைபிடித்து வருகிறோம். பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை நிராகரித்து சீன பொருட்கள் ஏற்படுத்தும் பாதகமான விளைவுகளில் இருந்து நமது தொழிற்சாலைகள் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. மோடியின் கூட்டாண்மை மந்திரத்தால் இந்தியா முதலாவது இடத்தில் உள்ளது.

- அமித்ஷா -மத்திய உள்துறை மந்திரி

Next Story