தினம் ஒரு தகவல் : சுத்தமான பாலை கண்டறியும் ‘லேக்டோமீட்டர்’


தினம் ஒரு தகவல் : சுத்தமான பாலை கண்டறியும் ‘லேக்டோமீட்டர்’
x
தினத்தந்தி 22 Nov 2019 8:43 AM GMT (Updated: 22 Nov 2019 8:43 AM GMT)

பா லில் தண்ணீர் கலந்திருக்கிறதா என்று நுகர்வோர் தெரிந்து கொள்ள ‘லேக்டோமீட்டர்’ என்ற கருவி உதவுகிறது.

சிலிண்டர் வடிவத்தில் சிறிய ஒரு கண்ணாடிக்குழாயும், அதற்குக் கீழே சிறிய பல்பு குமிழ் போன்ற அமைப்பும் பொருத்தப்பட்ட ஒரு சாதாரண கருவி ‘லேக்டோமீட்டர்’. இதனை கொண்டு பாலில் தண்ணீர் கலந்திருக்கிறதா? என்று எளிதில் கண்டறிய முடியும்.

திரவங்களின் அடர்த்தி அந்த திரவத்தின் தன்மையை பொறுத்து வேறுபடும். பால், தண்ணீரை விட அடர்த்தியானது. எண்ணெய் அதை விட அடர்த்தி கொண்டது. திரவங்களில் மிதக்கக்கூடிய தன்மை உடைய ஒரு தக்கை போன்ற பொருளை இந்த மூன்று வெவ்வேறு திரவங்களிலும் மிதக்க விட்டால் அந்த தக்கையானது இந்த ஒவ்வொரு திரவத்திலும் வெவ்வேறு மட்டங்களில் மிதக்கும். அதாவது, தக்கையின் அடிப்பரப்பு தண்ணீரில் சற்று ஆழமாகவும், பாலில் அதற்கு மேலாகவும் எண்ணெயில் மிகவும் மேலாகவும் மிதக்கும்.

லேக்டோ மீட்டர் ஏறக்குறைய இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் செயல்படுகிறது.

பாலுக்கு ஒரு குறிப்பிட்ட அடர்த்தி உண்டு. தண்ணீரை கலந்தால் பாலின் அடர்த்தி மாறி விடும். பாலில் தண்ணீர் கலந்திருக்கிறதா என்பதை கண்டறிய ஒரு உயரமான கண்ணாடி டம்ளரில் பாலை ஊற்றிக் கொண்டு லேக்டோமீட்டரின் குமிழ் பாகம் கீழே இருக்கும்படி பாலுக்குள் மிதக்க விடுங்கள். அப்போது, லேக்டோமீட்டரில் குறிப்பிட்ட கோடு வரை மூழ்கினால் நல்ல பால்.

ஆனால், குறிப்பிட்ட கோட்டை தாண்டி மூழ்கினால் அந்த பாலில் தண்ணீர் கலக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். எனவே, வீட்டின் அருகில் விற்பனை செய்யப்படும் பசும்பாலில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா? என்பதை அறிந்துகொள்ள லேக்டோமீட்டரை பயன்படுத்த முடியும். 

Next Story