மூன்று தினங்கள் தொடர் சரிவுக்குப் பின் சென்செக்ஸ் 271 புள்ளிகள் ஏற்றம்; நிப்டி 73 புள்ளிகள் முன்னேறியது


மூன்று தினங்கள் தொடர் சரிவுக்குப் பின் சென்செக்ஸ் 271 புள்ளிகள் ஏற்றம்; நிப்டி 73 புள்ளிகள் முன்னேறியது
x
தினத்தந்தி 24 Jan 2020 9:27 AM GMT (Updated: 24 Jan 2020 9:27 AM GMT)

வியாழக்கிழமை அன்று பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. மூன்று தினங்கள் தொடர் சரிவுக்குப் பின் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 271 புள்ளிகள் ஏற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 73 புள்ளிகள் முன்னேறியது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

பங்குகளின் விலை

தொடர்ந்து மூன்று தினங்கள் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து இருந்த நிலையில் பல்வேறு நிறுவனப் பங்குகளின் விலையும் கணிசமாக குறைந்து இருந்தது. எனவே அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் வாங்கினர். மேலும் பல முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்ததால் அந்தப் பங்குகளின் விலையும் அதிகரித்தது. வெளி நிலவரங்களும் சாதகமாக இருந்ததால் சந்தைகள் ஏற்றம் கண்டன,

அந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் அனைத்து துறை குறியீட்டு எண்களும் அதிகரித்தன. அதில் பொறியியல் சாதனங்கள் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 2.44 சதவீதம் உயர்ந்தது. அடுத்து ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண் 2.04 சதவீதம் அதிகரித்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 23 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. 7 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது. இந்தப் பட்டியலில் லார்சன் அண்டு டூப்ரோ, மகிந்திரா அண்டு மகிந்திரா, பாரத ஸ்டேட் வங்கி, டைட்டான், இன்போசிஸ், பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட 23 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. அதே சமயம் டெக் மகிந்திரா, டி.சி.எஸ்., பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்பட 7 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 271.02 புள்ளிகள் அதிகரித்து 41,386.40 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 41,413.96 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 41,098.91 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1436 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1092 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 141 நிறுவனப் பங்கு களின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,465 கோடியாக உயர்ந்தது. கடந்த புதன்கிழமை அன்று அது ரூ.1,801 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 73.45 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,180.35 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 12,189 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 12,094.10 புள்ளிகளுக்கும் சென்றது.

Next Story