அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு ஓடும் இந்தியர்கள்!


அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு ஓடும் இந்தியர்கள்!
x
தினத்தந்தி 16 Feb 2020 6:33 AM GMT (Updated: 16 Feb 2020 6:33 AM GMT)

படித்தால் மட்டும் போதுமா? நல்ல வேலை கிடைக்க வேண்டும்; கைநிறைய சம்பாதிக்க வேண்டும்; சொந்தமாக ஒரு வீடு-கார் வாங்க வேண்டும்; 40 வயதுக்குள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதுதான் இன்றைய இளைஞர்களின் கனவாக-ஆசையாக உள்ளது.

படித்து முடித்து வேலையில் சேரும்-குறிப்பாக மென்பொருள் துறையில் பணியில் சேரும் பெரும்பாலான இளைஞர்களின் அடுத்த இலக்கு அமெரிக்காவாகத்தான் இருக்கிறது. அமெரிக்கா சென்று சில காலம் வேலை செய்தால் தங்கள் கனவுகளை நனவாக்கி விடலாம் என்பதே அதற்கு முக்கிய காரணம் ஆகும்.

அமெரிக்க அரசு தங்கள் நாட்டுக்கு பணி, கல்வி, வர்த்தகம் போன்ற காரணங்களுக்காக வருபவர்களுக்கு பல்வேறு வகையான விசாக்களை வழங்கி வருகிறது. வேலை நிமித்தமாக அமெரிக்கா செல்லும் தொழில் திறன் வாய்ந்தவர்களுக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தமட்டில் மென்பொருள் துறையில் உள்ள ஏராளமான என்ஜினீயர்கள் இந்த விசா மூலம் அமெரிக்கா சென்று பணியாற்றி வருகிறார்கள்.

பணியின் நிமித்தமாகவும், படிப்புக்காகவும், தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்காகவும் எவ்வளவு பேர் அமெரிக்காவுக்கு செல்கிறார்கள் என்பதை, விசா பெறுவதற்காக சென்னை அண்ணாசாலையில் ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கு அதிகாலையிலேயே வந்து காத்து நிற்கும் மக்கள் கூட்டத்தை பார்த்தாலே தெரியும்.




எச்-1பி விசாவானது, தற்போது புதிதாக கல்யாணமான அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாழ்க்கை துணைக்கு அங்கு குடியுரிமை மற்றும் வேலை பெறுவதை மிகவும் கால தாமதப்படுத்துவதால், அங்கிருந்து வேறு நாட்டிற்கு வேலை தேடிச் செல்ல நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

எச்-1பி பணி விசாக்களுக்கு ஒரு உச்சவரம்பு நிர்ணயித்து, அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த டிரம்ப் அரசு எடுக்கும் முயற்சிகளினால், அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை தேடும் இந்தியர்களின் உற்சாகத்தை மட்டுப்படுத்த முடியவில்லை.

ஒவ்வொரு வருடமும், எச்-1பி விசாவுக்காக அளிக்கப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இதற்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை நிலையாக உள்ளது.





அமெரிக்காவால் அளிக்கப்படும் அனைத்து எச்-1பி விசாக்களில், 70 சதவீதம் இந்தியர் களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, 2019-ல் மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார். அதே போல் 2017 வரையில், எச்-4 விசாக்களில் (எச்-1பி விசாதாரர்களின் மனைவி அல்லது கணவன்) 93 சதவீதம் இந்தியர்களுக்கு சென்றுள்ளது.

டிரம்ப் ஆட்சியில், எச்-1பி விசாவை, கிரீன் கார்டாக மாற்றுவதையும், பின்னர் குடியுரிமை பெறுவதையும், அமெரிக்கா கடினமாக்கியுள்ளது. ஐந்து முதல் பத்து வருடங்கள் பிடிக்கும் நடைமுறையாக இருந்து, இப்போது 20 அல்லது சில சமயங்களில் 30 வருடங்கள் ஆகும் நடைமுறையாக மாறியுள்ளது.

எச்-1பி விசாதாரர்களின் மனைவி அல்லது கணவருக்கு அளிக்கப்படும் எச்-4 விசா மூலம், அவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற, வங்கிக் கணக்கு தொடங்க, தனிநபர் வரி செலுத்துவோர் அடையாள எண் பெற அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் பணி புரியவும், சமூக பாதுகாப்பு உரிமை பெறவும் முடியாது. (விதிவிலக்காக, சிலருக்கு மட்டும் பணி அனுமதி ஆவணம் அளிக்கப்படுகிறது). பல எச்-4 விசாதாரர்கள், ரொக்க பணத்திற்கு, உணவு விடுதிகளில் வேலை செய்கின்றனர். சிலர் வீடுகளில் இருந்து ஆன்லைன் மூலம் வேலை செய்கின்றனர்.

அடுத்த 20 ஆண்டுகளுக்கு வேலையில்லாமல் இருக்க கூடிய சாத்தியம், பல என்.ஆர்.ஐ. ஜோடிகளை சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் மற்றும் இதர நாடுகளில் வேலை தேட உந்துகிறது. “அடுத்த 20 ஆண்டுகளுக்கு என் மனைவி வேலை செய்ய முடியாது என்ற நிலை, என்னை சிங்கப்பூரில் வேலை தேட தூண்டியுள்ளது. எனது இரண்டு வயது குழந்தை அமெரிக்க குடிமகன். அது எங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்’’ என்று கனெக்டிக்கெட்டில் உள்ள எச்-1பி விசாதாரர் ஆதித்யா கோபாலகிருஷ்ணன் கூறுகிறார்.

எச்-1பி விசாதாரரான சுவேதா, கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னையில் பணிபுரியும் என்ஜினீயர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

சுவேதா மிக நல்ல வேலையில் இருப்பதால் அதை துறக்க விரும்பவில்லை. அவரின் கணவர் ரகு, எச்-4 விசாவில் அமெரிக்கா செல்ல விரும்பவில்லை. அமெரிக்காவில் 10 ஆண்டுகள் தங்க அனுமதி அளிக்கும், கல்வி கற்பதற்கான எப்-1 விசா பெற அவர் முயன்று வருகிறார். கனடாவிற்கு புலம் பெயரவும் இவர்கள் முயற்சி செய்கின்றனர்.

இதற்கிடையே, தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் குழந்தை பெற்று, அதன் மூலம் குடியுரிமை பெறும் வழிமுறைகளையும், அமெரிக்க அரசு கடினமாக்கி வருகிறது.



வெளிநாடுகளுக்கு செல்ல இந்தியர்கள் முடிவு செய்தாலும், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு செல்லவே விரும்புகின்றனர். இவற்றில் இங்கிலாந்துக்கு செல்வது தான் மிகவும் கடினமானதாகும். கனடாவிற்கு செல்வது ஒப்பீட்டளவில் எளிமையானது என்கிறார் ஸ்டுபோரியா என்ற கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆலோசனை நிறுவனத்தை தொடங்கியவரும் அதன் தலைமை செயல் அதிகாரியுமான கே.புகழேந்தி.

“பல மாணவர்கள் உயர் கல்வி கற்கவும், பணிபுரியவும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். ஆனால் சுவீடன் மற்றும் டென்மார்க்கில் இருக்கும் இந்தியர்களிடம் இருந்து, அமெரிக்காவுக்கு புலம் பெயர உதவி செய்யும்படி எனக்கு கோரிக்கைகள் வருகின்றன’’ என்கிறார். பொதுவாக அமெரிக்கா அல்லது இங்கிலாந்தை விட ஐரோப்பா மீது விருப்பம் குறைவாக உள்ளது.

கனடாவில் நிரந்தர வசிப்புரிமை பெற்று, அங்கிருந்தபடி அமெரிக்க நிறுவனங்களுக்கு, ஆன்லைன் மூலம் வேலை செய்யும் போக்குகள் சமீபத்தில் அதிகரித்துள்ளன.

கனடாவில் நிரந்தர வசிப்புரிமை பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 2016-ல் 39,705ஆக இருந்து, 2019-ல் 80,685ஆக, 105 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்க, 2020 இறுதிக்குள் 10 லட்சம் புதிய குடியேறிகளை ஈர்க்க வேண்டிய நிலையில் உள்ள கனடா, திறன் மிகுந்த தொழில்முறையாளர்களை வரவேற்று, அவர்களின் விண்ணப்பங்களை வேகமாக பரிசீலித்து வருகிறது. மாணவர் விசாதாரர்கள், நேரடியாக நிரந்தர வசிப்புரிமை பெற விண்ணப்பிக்கவும் கனடா அனுமதியளிக்கிறது.

இந்தியாவில் உள்ள சி.எம்.எம் 5-வது அடுக்கில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலையில் சேர்ந்து, பின்னர் பணியிட மாறுதல் மூலம் வெளிநாடு செல்ல முயற்சி செய்வது மற்றொரு முறையாகும்.

எச்-1பி விசாக்களை, பெரிய அளவில், தவறாக பயன்படுத்தும், சில நேர்மையற்ற இந்திய மென்பொருள் நிறுவனங்கள், விசா பெற்றுத் தர, தம் ஊழியர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வசூலிக்கின்றன. இதற்கு எதிர்வினையாக, அமெரிக்க அரசு, விசா வழங்கும் நடைமுறைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.

எச்-1பி விசாதாரர்களை அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த சம்பளங்களில் பணியமர்த்த தொடங்கின. இந்த வேலைகள் உள்ளூரை சேர்ந்த அமெரிக்க குடிமகன்களுக்கு சென்றிருக்கும். கடந்த காலங்களில் அமெரிக்காவில் குடியுரிமை பெறும் வரை வசித்து, பின்னர் தம் பிள்ளைகளை வளர்க்க இந்தியாவிற்கு மீண்டும் இடம் மாறிய இந்திய குடும்பங்கள் பல உண்டு. இதன் மூலம் உலகின் பல பாகங்களுக்கு சுலபமாக புலம் பெயர உதவி செய்யும், தம் அமெரிக்க பாஸ்போர்டுகளை தக்க வைத்துக் கொண்டு, அதே சமயத்தில் சொந்த வீட்டின் வசதிகளையும் அவர்களால் அனுபவிக்க முடிகிறது.




டிரம்ப் அரசின் ‘அமெரிக்க பொருட்களை வாங்கு, அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்து’ (பி.எ.எச்.எ) என்ற ஜனாதிபதி ஆணையின் மூலம், சாத்தியப்படும் இடங்களில் எல்லாம் அமெரிக்கர்களை பணியமர்த்தவும், எச்-1பி விசாக்களை, அந்த பணிகளுக்குண்டான குறைந்தபட்ச ஊதியத்தை பெறுபவர்களுக்கு மட்டும் அளிக்கவும் வகை செய்கிறது. இது புதிய கட்டுப்பாடுகளில் ஒரு பகுதியாகும். ஊதிய செலவுகளை குறைக்க, நிறுவனங்கள் வெளியாட்களை பணியமர்த்துவதை தடுக்க இது வகை செய்கிறது.

திறமையானவர்கள் எங்கிருந்து வந்தாலும் அவர்களை அமெரிக்கா அனுமதிக்க வேண்டும். அவர்களை தடுப்பது, குடியேறிகளினால் உருவாக்கபட்ட அமெரிக்காவின் அடிப்படைக்கே முரணானது என்று கூறி, எச்-1பி விசாக்கள் மீதான உச்ச வரம்பை நீக்க அமெரிக்க மென்பொருள் நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன.

எப்-1 எனப்படும் மாணவர் விசா, ஜெ-1 எனப்படும் மாணவர் பரிமாற்ற விசா, விமானி பயிற்சி, இசை கற்றல் போன்ற சில குறிப்பிட்ட படிப்புகளுக்காக வழங்கப்படும் எம்-1 விசாக்களில் செல்வது, கணவன்கள் அல்லது மனைவிகளுக்கு உள்ள மற்றொரு வழிமுறையாக உள்ளது.

5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் எப்-1 விசா தான் மிகவும் விரும்பப்படும் வழிமுறையாக உள்ளது. பி.எச்டி செய்ய விண்ணப்பதாரர் விரும்பினால், இந்த விசா 10 ஆண்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. இவற்றில் சில பாடப்பிரிவுகளில் சேர்பவர்கள், எச்-1பிமூலம் செல்லத் தேவையில்லாமல், நேரடியாக பச்சை அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது கூடுதல் நன்மையாகும்.

அனைத்து துறைகளிலும் வேலை கிடைப்பது கடினமாகியுள்ளது என்கிறார் கல்வித் துறை ஆலோசகரான டி.நெடுஞ்செழியன். வெளிநாடுகளில் படித்தால், உடனே அங்கு வேலை கிடைத்து, பிறகு அங்கேயே தொடரலாம் என்று நம் மாணவர்கள் நினைக்கின்றனர். ஆனால் அது அத்தனை எளிதல்ல. மிகச் சிறந்த பல்கலைக்கழகத்திற்கு ஒருவர் மாணவர் விசாவில் சென்று, அங்கு சிறப்பாக பயின்றால், அங்கு வேலை பெறுவதற்கு வாய்ப்பு அதிகம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆஸ்திரேலியாவில் வேலை பெறுவது எளிதாக இருந்தது. 2007 முதல், வெல்டர்கள் மற்றும் பிட்டர்களுக்கு கூட ஐ.இ.எல்.டி.எஸ் (ஆங்கில மொழி தேர்வு) மதிப்பெண்களை கேட்கிறது என்கிறார் புகழேந்தி. பல கலாசார, பல இனங்களை சேர்ந்த ஊழியர்களை கொண்ட நாடாக மாற விரும்பும் நாடுகள், பண்பட்டவர்கள் என்று கருதப்படும் பிலிப்பினோக்கள் மற்றும் வியட்நாமியர்களை அதிக அளவில் வரவேற்கின்றன. ஏனென்றால் இந்தியர்கள் தம் குழுவினருடன் மட்டுமே பழகி, பொது சமுதாயத்தில் கலக்க மறுக்கின்றனர் என்கிறார் புகழேந்தி.

வெளிநாடு செல்லும் மோகம் எப்போதும் போல வலுவாக தொடர்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சராசரி வருமானம் கொண்ட இந்திய குடும்பங்களும், கல்வி என்று வரும் போது, முக்கியமாக வெளிநாட்டுக் கல்வி எனும் போது, அனைத்து முயற்சிகளையும் செய்யத் தயாராக உள்ளனர். ஏமன் மற்றும் எகிப்து போன்ற நாடுகளில், அதிகம் வெளியே தெரியாத பாடப்பிரிவுகளில் சேரவும் மாணவர்கள் விரும்புகின்றனர். ‘வெளிநாட்டு கல்வி’ சிறந்த வேலை வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில்.

விமர்சனங்களை மின்னஞ்சலில் அனுப்ப: NRD.thanthi@dt.co.in

Next Story