சிறப்புக் கட்டுரைகள்

டிரம்ப்பை வரவேற்க தயாராகும் மோடி அரசு + "||" + Modi government ready to welcome Trump

டிரம்ப்பை வரவேற்க தயாராகும் மோடி அரசு

டிரம்ப்பை வரவேற்க தயாராகும் மோடி அரசு
அமெரிக்க - இந்திய உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அமெரிக்காவின் முதல் குடும்பத்தை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது மோடி அரசு.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோரின் முதல் இந்திய வருகையை, அவர்களுக்கு மறக்க முடியாத இந்திய சுற்றுப்பயணமாக மாற்றத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கடும் ஆட்சேபனைகளையும் மீறி, ரூ.85 கோடி செலவில் ஆமதாபாத் நகரம் செம்மை படுத்தப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆமதாபாத் பன்னாட்டு விமான நிலையத்தில் ஒரு அமெரிக்க விமானப் படையின் சரக்கு விமானம் ஏற்கனவே தரையிறங்கியுள்ளது. அதில் மிக நவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பல்வேறு ஆன்டனாக்கள் பொருத்தப்பட்ட ஒரு பெரிய எஸ்.யு.வி ரக வாகனம் ஆகியவை அதில் கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல் துறை தகவல்கள் கூறுகின்றன.

உலகின் மிகப் பெரிய, 1,10,000 பேர் அமரக்கூடிய, சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட மோடெரா கிரிக்கெட் அரங்கில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் டிரம்ப் மற்றும் மோடி இருவரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரைகளை நிகழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதவி நீக்க நடவடிக்கைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட சில வாரங்களில் நடக்க இருக்கும் டிரம்ப் வருகை, நவம்பர் 2020-ல் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு, இரு நாடுகளிடையே உருவாக உள்ள ஒரு புதிய உறவின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்திய அரசு, இந்த நிகழ்வை, டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல், உலக பார்வையாளர்கள் அனைவருக்கும் ஒரு ‘நினைவில் நிற்க தகுந்த பெரும் தருணமாக’ மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்க - இந்திய வர்த்தக உறவுகள், உலக மற்றும் பிராந்திய புவிசார் அரசியலில் இரு நாடுகளுக்கும் பொது எதிரி மற்றும் நண்பரான சீனாவை எதிர் கொள்ளல், காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானின் ஈடுபாட்டை மட்டுப்படுத்துதல், உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு தளத்தை அமைத்தல் மற்றும் ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு ஒரு நிரந்தர இடம் பெற முயற்சித்தல் ஆகியவை இதன் முக்கிய மையங்களாக இருக்கும்.

காஷ்மீர் பிரச்சினையில் சமாதானம் செய்து வைக்க பல முறை டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியா அதற்கு வலுவாக மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் மோடி - டிரம்ப் சந்திப்பில் இதுவும் ஒரு விஷயமாக இருக்க வாய்ப்புள்ளது.

பிப்ரவரி 24-ல் இந்தியா வரும் டிரம்ப் தம்பதியினர், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு செல்ல இருக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் இங்கு செல்வது இதுவே முதல் முறை. அங்கு ஹிருதய் குஞ் என்றழைக்கப்படும் காந்தியின் வீட்டை சுற்றிப் பார்க்க உள்ளனர். அங்கு ராட்டை சக்கரமான ‘சர்க்காவை’ இயக்கிப் பார்க்க உள்ளனர். டிரம்ப்பிற்கு ஒரு ‘சர்க்கா’ (ராட்டை சக்கரம்), மகாத்மா காந்தியின் வாழ்க்கை பற்றிய இரண்டு நூல்கள் மற்றும் ‘தேசப் பிதாவின்’ இரண்டு ஓவியங்கள் பரிசளிக்கப்படும்.

“ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து மொடெரா வரையிலான 20 கி.மீ. சாலை அகலபடுத்தப்பட்டு, மீண்டும் தார் பூசப்பட்டுள்ளது” என்று ஆமதாபாத் நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா கூறுகிறார். டிரம்ப் தம்பதிகளை வரவேற்க வழியெங்கும் சுமார் ஒரு லட்சம் மக்கள் வரிசையாக நிற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

ஆமதாபாத்தில் உள்ள ஒரு குடிசைப் பகுதியை மறைக்கும் நோக்கில், சர்தார் வல்லபபாய் பட்டேல் பன்னாட்டு விமான நிலையத்தையும் இந்திரா பாலத்தையும் இணைக்கும் சாலையை ஒட்டி ஒரு சுவர் எழுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. “6 முதல் 7 அடி உயரமுள்ள இந்த சுவர், 600 மீட்டர் நீளமுள்ள பகுதியில் அமைந்துள்ள குடிசைப் பகுதியை வெளிபார்வையில் இருந்து மறைக்க கட்டப்படுகிறது” என்று மாநில அரசின் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். “2,500 பேர் வசிக்கும், பல பத்தாண்டுகள் பழைய தேவ் சரண் அல்லது சரண்யவாஸ் குடிசைப் பகுதியை மறைக்க இது கட்டப்படுகிறது” என்கின்றனர்.சுற்றுலாவின் ஒரு பகுதியான சபர்மதி ஆற்றங்கரையில், முழுவதும் வளர்ந்த ஈச்ச மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த ‘அழகுபடுத்தல் முயற்சி’ திட்டத்திற்காக கூடுதலாக ரூ.6 கோடி செலவிடப்படுகிறது என்று அரசாங்கத்தில் இருப்பவர் ஒருவர் கூறுகிறார். சபர்மதி ஆசிரமத்தில், இரண்டு நாட்டு தலைவர்களும் நிற்க, ஒரு மேடை அமைக்கப்படுகிறது. அதில் இருந்து அவர்கள் இருவரும், விளையாட்டு அரங்கிற்கு செல்லும் முன்பு, சபர்மதி ஆற்றை பார்வையிட உள்ளனர். செல்லும் வழியில் சுமார் ஒரு லட்சம் மரங்களும், மலர் படுக்கைகளும் நடப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன. கூடுதலாக, கலாசாரத்தை பறைசாற்றும் நிகழ்வுகளை நடத்த 28 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொசுத் தொல்லையை சமாளிக்க, கொசு மருந்தடிக்கும் எந்திரங்கள் மூலம், பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 24 வரை தினந்தோறும் அதிகாலை நேரத்தில் கொசு மருந்தடிக்கப்படுகிறது.

அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள்

அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய, செல்லும் வழி நெடுக, அனைத்து பெரிய கட்டிடங்களின் உச்சியில், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பணியில் இருப்பார்கள்.

டிரம்ப் வருகையின் போது நகரின் முக்கிய பகுதிகளில், 65 உதவி ஆணையர்கள், 200 ஆய்வாளர்கள் மற்றும் 800 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 10,000-க்கும் அதிகமான போலீசார் களப்பணியில் இருப்பார்கள் என்று போலீஸ் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பல் முனை பாதுகாப்பு வளையத்திற்கு மேலே, அமெரிக்க ரகசிய பாதுகாப்பு படையினர் (யு.எஸ்.எஸ்), தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) மற்றும் சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி) ஆகியவை இருக்கும். ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையிலான, பத்து உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று மெலனியா டிரம்ப்பின் உதவியாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளது.

டிரம்ப் - மோடி வாகனம் மூலம் செல்வதை காண விரும்பும், அந்த சாலையோரத்தில் உள்ள வசிப்பிடங் களில் வசிப்பவர்கள், அதற்கு பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாகனங்கள் செல்லும் சாலையோரம் உள்ள குடியிருப்புகளுக்கு வெளியே நின்று பார்க்க விரும்புகின்றவர்கள், தங்களின் ஆதார் அட்டை பிரதி ஒன்றையும், ெசல்போன் எண்ணையும் சமர்பித்து, அதன் பின் ‘அடையாள அட்டை’ ஒன்றை காவல் துறையிடம் இருந்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மொடெரா விளையாட்டு அரங்கத்திற்கு எதிரே உள்ள சுவர்களில் டிரம்ப் மற்றும் மோடியின் உருவங்கள் சித்திரமாக தீட்டப்பட்டுள்ளன. குடிசைப்பகுதிகள் காலி செய்யப்பட்டு, விமான நிலையம் அருகே உள்ள வெற்றிலை பாக்கு கடைகள் மூடப்பட்டு, அந்த பாதையை சுற்றி உள்ள பகுதிகளில் தெரு நாய்கள் காப்பகங்களில் அடைக்கப்பட்டுள்ளன.

ஆமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ள 10 விமானங்களில், நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள முக்கிய பிரமுகர்கள் வர இருக்கின்றனர். 60 உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்படும் அல்லது சூரத் மற்றும் பரோடா விமான நிலைங்களுக்கும் திருப்பி விடப்படும்.

ஆக்ரா செல்லும் டிரம்ப்

ஆமதாபாத்தில் இருந்து ஜனாதிபதி டிரம்ப் அதே தினத்தன்று, ஆக்ரா வழியாக டெல்லி செல்கிறார். ஜெய்ப்பூர் விமான நிலையத்தின் சூழல்களை ஆய்வு செய்ய, அமெரிக்க அதிகாரிகள் சென்ற வாரம் ஜெய்ப்பூர் சென்றுள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க பருவநிலை அனுமதிக்காவிட்டால், மாற்று ஏற்பாடாக ஜெய்ப்பூர் விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஆக்ராவில் உள்ள கம்பீரமான தாஜ் மகாலுக்கு டிரம்ப் மற்றும் மெலனியா செல்கிறார்கள். டிரம்ப்பிறகு ஆக்ராவில் அளிக்கப்படும் வரவேற்பு ஒரு ‘திருவிழாவிற்கு’ அவர் வந்துள்ளதை போல் இருக்க வேண்டும் என்று மோடியின் நம்பிக்கைக்குரிய சகாவான உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்ளூர் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டுள்ளார். அனைத்து தொழிலாளர்களுக்கும், காவல் துறையின் சரிபார்ப்பிற்கு பிறகு முறையான ‘அடையாள அட்டைகள்’ அளிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு அவர் ஆணையிட்டுள்ளார்.

முன் தயாரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய ஆக்ரா சென்றிருந்த ஆதித்யநாத், மோடி-டிரம்ப் வாகனங்கள் மூலம் செல்ல இருக்கும் சாலையில் புழுதியும், நீர் திட்டுகளும் நிறைந்திருப்பதை கண்டு கடும் கோபம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. அதை உடனடியாக சீர் செய்ய ஆணையிட்டுள்ளார். தாஜ் மகாலுக்கு செல்லும் 15 கிமீ நீளமுள்ள சாலை மூலம், சுமார் 12 முதல் 15 நிமிடங்களில் டிரம்ப் சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப்பின் வாகனங்களில் ஒன்று ஏற்கனவே ஆக்ரா வந்தடைந்துள்ளது. இந்த காரை தொடர்ந்து 69 வாகனங்கள் ஒரு நீண்ட தொடர் வரிசையில், விமான நிலையத்தில் இருந்து தாஜ்மகாலுக்கு செல்லும். இவற்றில் 14 வாகனங்கள் அமெரிக்க ரகசிய பாதுகாப்பு படை மற்றும் இதர அமைப்புகளை சேர்ந்தவை.அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்ப், பிப்ரவரி 25-ல், டெல்லி மாநில அரசு நடத்தும் பள்ளி ஒன்றின் வகுப்பறைகளை பார்வையிட உள்ளார். இதை செய்யும் முதல் அமெரிக்க பெண்மணி இவர் தான். இவருடன் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் செல்ல இருக்கின்றனர். அவர் அங்கு ‘மகிழ்ச்சி வகுப்பு’ ஒன்றில் கலந்து கொண்டு, மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் எப்படி மகிழ்ச்சியாக இணைந்து செயலாற்றுவது என்பதை கற்றுக் கொள்வதை பார்வையிட இருக்கிறார். பள்ளியில் சுமார் ஒரு மணி நேரம் இருப்பார். அமெரிக்காவில் இந்திய முதலீடுகளை ஈர்க்க, ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி மற்றும் ஆனந்த் மகேந்தரா உள்ளிட்ட இந்திய தொழில் துறை தலைவர்களை, பிப்ரவரி 25 அன்று டிரம்ப் சந்திக்க உள்ளார்.

டிரம்ப்பின் குழு

டிரம்ப்பின் குழுவில் இடம் பெறக் கூடிய முக்கிய அதிகாரிகள்: டிரம்ப்பின் மகள் இவாங்கா, மருமகன் ஜாரெட் குஸ்னெர், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைத்திஜெர், தேசிய பாதுகாப்பு செயலாளர் ராபர்ட் ஓ பிரயன், நிதித் துறை செயலாளர் ஸ்டீவ் மனுச்சின் மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வில்பர் ராஸ்.

யூத குடியேறிகளின் மகனான ஜாரேட் குஸ்னெர், ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் பயின்ற முதலீட்டாளர் மற்றும் ரியல் எஸ்டெட் தொழிலதிபர் ஆவார். அவர் தற்போது, அவரின் மாமனாரான டொனால்டு டிரம்பின் மூத்த ஆலோசகராக உள்ளார்.

அமெரிக்க-சீன வர்த்தக பேச்சுவார்த்தைகளில் அவர் ஒரு வர்த்தக பேச்சாளராக செயல்பட்டார். 2016 டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின் போது, டிரம்பின் டிஜிட்டல் ஊடக செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த உதவினார்.

விமர்சனங்களை மின்னஞ்சலில் அனுப்ப: NRD.thanthi@dt.co.in

தொடர்புடைய செய்திகள்

1. டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை: முடிவு என்ன?
டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனையின் முடிவு என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
2. டிரம்புடன் இங்கிலாந்து பிரதமர் தொலைபேசியில் பேச்சு
டிரம்புடன் இங்கிலாந்து பிரதமர் தொலைபேசியில் பேசினார்.
3. டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையா? - அவரே அளித்த பதில்
டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையா செய்யப்பட்டது குறித்து, அவரே பதில் அளித்துள்ளார்.
4. டிரம்புக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதா? - வெள்ளை மாளிகை விளக்கம்
டிரம்புக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதா என்பது குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
5. டிரம்பின் பயணம்: ‘இந்தியா மீதான எங்கள் மதிப்பை நிரூபிக்கிறது’ - அமெரிக்க மந்திரி கருத்து
டிரம்பின் பயணம், இந்தியா மீதான எங்கள் மதிப்பை நிரூபிக்கிறது என்று அமெரிக்க மந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.