சிறப்புக் கட்டுரைகள்

இரவில் ‘இரும்பு மழை' பொழியும் கோள் + "||" + Iron showers on the planet at night

இரவில் ‘இரும்பு மழை' பொழியும் கோள்

இரவில் ‘இரும்பு மழை' பொழியும் கோள்
நம் பிரபஞ்சத்தில் பூமி தவிர்த்து மனிதர்கள் வாழத் தகுதியான மற்றொரு இடத்தை விண்வெளி ஆய்வாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக தேடி வருகின்றனர்.
தட்பவெப்பம், வாயுக்கள் மற்றும் மனித வாழ்க்கைக்கு அவசியமான இதர சுற்றுச்சூழல் அடிப்படையில் இந்த தேடல் நடந்தது. இதில், செவ்வாய் கிரகம் மற்றும் பூமியின் நிலவு ஆகியவை மட்டுமே மனித வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமான இடங்களாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், நம் சூரிய மண்டலத்துக்கு வெளியில் இருக்கும் சில கோள்கள் (புறக்கோள்கள்) மனித வாழ்க்கைக்கு உகந்த இடங்களாக இருக்கக்கூடும் என்றும் அவ்வப்போது சில விண்வெளி ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. அத்தகைய ஒரு தேடலின்போது, பூமியில் இருந்து சுமார் 640 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ‘மீனம் நட்சத்திர குழுவில்’ (Constellation of Pisces) ஒரு கோள் இருப்பது தெரியவந்தது.

இதற்கு, டபிள்யூ.ஏ.எஸ்.பி.-76பி (WASP-76b) என்று பெயரிட்டுள்ளனர். இது வாயுக்கள் நிறைந்த ஒரு மிகப்பெரிய கோள். இந்த புறக்கோள் அதன் நட்சத்திரத்தை வெறும் 1.8 நாட்களில் சுற்றி வருகிறது என்றும், அப்படி சுற்றி வருகையில் அதன் வெப்பமானது சுமார் 2400 செல்சியஸ்க்கும் அதிகமாக இருக்கிறது என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மிகவும் முக்கியமாக, இந்த வெப்பநிலையானது இரும்பை ஆவியாக மாற்றும் அளவுக்கு சக்திவாய்ந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் பகல் முடிந்து இரவு தொடங்கும்போது இந்த (WASP-76b) புறக்கோளின் வெப்பநிலையானது கணிசமான அளவுக்கு குளிர்ந்து ஆவியாக மாறிய இரும்பை குளிர வைத்து திரவமாக மாற்றி, புறக்கோளின் உள்ளே இரும்பு மழையாக பொழிகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு முதன்முதலாக கண்டு பிடிக்கப்பட்ட இந்த புறக்கோள், சூடான வியாழன் (hot Jupiter) எனும் கோள் வகையைச் சார்ந்த ஒரு புறக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, வியாழன் கிரகத்தைவிட சற்றே குறைவான நிறை கொண்ட இந்த புறக்கோளின் அளவு, வியாழன் கிரகத்தைவிட சுமார் 1.8 மடங்கு அதிகம் என்கிறார் வானியற்பியலாளர் மரியா ரோசா சபாட்டீரோ.

நம் சூரியனை விட அளவில் பெரிய மற்றும் மிகவும் சூடான வெப்பத்தைக் கக்கும் தன்னுடைய நட்சத்திரத்தில் இருந்து வெறும் 5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில்தான் இந்த புறக்கோள் சுற்றி வருகிறது என்கிறார் மரியா. மேலும் நம் சூரியன் சுமார் 5,778 கெல்வின் அளவு வெப்பநிலை கொண்டது என்றும், ஆனால் சூரியனைவிட 1.5 அதிகமான நிறை மற்றும் 1.8 மடங்கு அளவில் பெரியதாக இருக்கும் இந்த புறக்கோளின் வெப்பத்தின் அளவு சுமார் 6,329 கெல்வின் அளவு என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நம் பூமி சூரியனில் இருந்து பெறும் வெப்பக்கதிர்களைவிட பல மடங்கு அதிகமான வெப்பத்தை இந்த புறக்கோள் பெறுகிறது. இது தவிர, இந்த புறக்கோளில் பகல் பகுதி சுமார் 2,400 டிகிரி செல்சியல்ஸ் மற்றும் இரவுப்பகுதியானது சுமார் 1500 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த புறக்கோளில் உள்ள பகல்-இரவுப் பகுதி ஆகியவற்றுக்கு இடையிலான வெப்ப வித்தியாசம் காரணமாக மிகவும் உறுதியான காற்று உருவாக வேண்டுமென்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய காற்று மற்றும் புறக்கோளின் சுழற்சி ஆகியவை காரணமாக இரும்பு ஆவியானது புறக்கோள் முழுவதுக்கும் பரவும் என்றும், அதன் காரணமாக நாள்பகுதியில் உள்ள மூலக்கூறுகள் இரவுப்பகுதி பக்கம் உள்ள மூலக்கூறுகளுடன் இணைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, இம்மாதிரியான நிகழ்வுக்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆக, இரும்பு ஆவியானது மிகவும் வெப்பமான நாள் பகுதியில் மிக மிக அதிகமான அளவில் இருக்கிறது என்கிறார் ஆய்வாளர் மரியா. இந்த புறக்கோள் மீதான ஆய்வு முடிவுகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிற சூடான வியாழன்கள் மீதான ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றிலும் இரும்பு மழை போன்ற ஒரு உலோக மழை பொழிகிறதா என்று கண்டறிய முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வானியற்பியலாளர்கள் இதுவரை சிவப்புக்கல் மற்றும் நீலக்கற்களால் ஆன மேகங்கள் கொண்ட புறக்கோள்களையும், இரும்பு மழை பொழியும் இந்த (WASP-76b) புறக்கோள்களையும் கண்டுபிடித்துவிட்டனர். இனி வரும் காலங்களில் எந்தவிதமான புறக்கோள்கள் கண்டறியப்படும் என்பது சுவாரசியமான ஆச்சரியங்கள்தான் என்றே கூறலாம்.