சிறப்புக் கட்டுரைகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை... + "||" + Coronavirus survivors' blood plasma could be used to fight

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை...

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை...
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்த பிளாஸ்மாக்களை பிரித்து அதை தற்போதைய கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தி, காப்பாற்றும் முயற்சிக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

உலகம் முழுவதும் பரவி மனிதர்களின் உயிரை குடித்துவரும் கொரோனா வைரசுக்கு எதிர்ப்பு மருந்துகள் எதுவும் இல்லை. தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஏற்கனவே இருக்கும் மருந்துகளைக் கொண்டே சிகிச்சையளிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்றினால் மனிதர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகநாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுடைய பார்வை பிளாஸ்மா சிகிச்சையின் பக்கம் திரும்பி உள்ளது. அதாவது, கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்த பிளாஸ்மாக்களை பிரித்து அதை தற்போதைய கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தி, காப்பாற்றும் முயற்சிக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மனித ரத்தத்தில் சிவப்பு அணுக்கள்,  வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என 3 வகையான அணுக்கள் உள்ளன. இதுபோக திரவநிலையில் பிளாஸ்மா உள்ளது. ரத்தத்தில் சுமார் 55 சதவீத அளவுக்கு இருக்கும் பிளாஸ்மா ஊட்டச்சத்துக்கள் தண்ணீர், வைட்டமின்கள், தாது பொருள்கள், புரத பொருட்கள், ஹார்மோன்கள் மற்றும் ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய பிற காரணிகளை கொண்டிருக்கிறது. உடல் இயக்கவியலில் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு மிகவும் முக்கியமான பங்கு இருக்கிறது. ரத்தத்திலிருக்கும் அனைத்து கூறுகளையும் திரவமாக உடல் முழுவதும் சுமந்து செல்கிறது.

அதுபோக, செல்கள் வெளியேற்றும் கழிவு பொருட்களையும் சுமந்து நுரையீரலுக்கு கொண்டு செல்கிறது. அங்கு, நுரையீரல் சுத்திகரித்து ஆக்சிஜனை உடலுக்கு அனுப்புகிறது.

பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவற்றிற்கு எதிராக உடலை பாதுகாப்பதில் பிளாஸ்மாவில் உருவாகும் இம்யூனோ குளோபின்கள் மற்றும் எதிர்ப்பு சக்திகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலுக்குள் படையெடுக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலிருந்து உடலை பாதுகாப்பதில் இம்யூனோ குளோபின்கள் பாதுகாப்பு கேடயமாக முன் நிற்கிறது. மனிதர்கள் எதிர்கொள்ளும் பல கடுமையான உடல்நல பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் பிளாஸ்மா ஒரு முக்கிய பங்கினை கொண்டிருக்கிறது.

இத்தகையை பிளாஸ்மாவை தொற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தும் நடைமுறை ஏற்கனவே இருந்து வருகிறது. தற்போது முழு ரத்தத்திற்கு பதில், தேவையான பகுதி மட்டும் பிரித்து பயன்பெறும் வசதியுள்ளது. அந்த வகையில் ரத்தத்தில் இருந்து பிரிக்கப்படும் பிளேட்லெட் செல்களை 1 வாரம் வரையிலும், சிவப்பு அணுக்களை 3,540 நாட்கள் வரையிலும், பிளாஸ்மா திரவத்தை உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டால் 1 வருடம் வரையிலும் பயன்படுத்தலாம்.

“ஏற்கனவே தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களின் பிளாஸ்மாவை பெற்று, அதனை தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கும் முறைதான் பிளாஸ்மா சிகிச்சை முறையாகும்”. குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவில் இருக்கும் இம்யூனோ குளோபின்கள், தொற்றுநோய் வைரசுக்கு எதிராக போராடி வெற்றி பெற்று பலமடைந்திருக்கும். அதனை, சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கும்போது அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து குணம் அடைய வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

1918-ல் ஸ்பானிஷ் காய்ச்சல் பரவலின் போதும் குணமடைந்தவர்களிடம் இருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ரத்த மாற்றம் இருந்துள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. அம்மை போன்ற தொற்று நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் இதுபோன்ற சிகிச்சை முறையே நடைமுறையில் இருந்தது. கொரோனா வைரசின் குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ், மெர்ஸ் வைரஸ் தாக்கத்தின் போதும், எபோலா தொற்றின் போதும் இந்த பழைய முறை சோதிக்கப்பட்டது. தற்போது, கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிகிச்சை முறையை அமல்படுத்த சோதனை பணிகள் நடக்கிறது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு தொடர்கிறது. தற்போது, வைரசுக்கு எதிரான மருந்து இல்லை என்பதால் அமெரிக்கா ‘பிளாஸ்மா’ மாற்று சிகிச்சையை நோக்கியுள்ளது. இந்த சிகிச்சை முறையை பரிசோதனை செய்ய அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நோய் எதிர்ப்பு நிபுணர் அர்த்ரோ காசாடேவால் பேசுகையில், “இந்த சிகிச்சை முறையை அமல்படுத்துவதற்கு எந்த ஒரு ஆய்வும் தேவையில்லை. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடம் இருந்து ரத்தம் பெற வேண்டும். அதனை பரிசோதனை செய்து தொற்று நோய் அச்சம் ஏதாவது இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். பின்னர், அந்த ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்து சிகிச்சை முறைக்கு பயன்படுத்த வேண்டும். வரலாற்றில் இந்த சிகிச்சை முறை பலனளித்திருக்கிறது, உற்சாகமளிப்பதாகவே உள்ளது” என கூறுகிறார்.

மேலும், “முந்தைய காலகட்டங்களில் நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி, இதுபோன்ற சிகிச்சை முறையை பரிசோதனை செய்யலாம் என அமெரிக்காவின் பல்வேறு சுகாதார நிறுவனங்கள் ஆலோசனைகளை தெரிவித்துள்ளன. ஆனால், நன்கொடை பிளாஸ்மாவை பெற்ற பிறகு கடுமையான நுரையீரல் காயம் அல்லது ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படலாம் என்பதால் கவனம் அவசியம் என்ற எச்சரிக்கையும் நிலவுகிறது. அமெரிக்கா முழுவதும் உள்ள நிபுணர்கள் நியூயார்க் நகரம் உட்பட பல்வேறு பகுதிகளில் பிளாஸ்மா மாற்று சிகிச்சையை செயல்படுத்த விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்” என்று அர்த்ரோ காசாடேவால் கூறுகிறார்.

செங்காயில் மருத்துவர்கள் ஏற்கனவே சீனாவில் பாதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் பிளாஸ்மாவை பெற்று சிகிச்சைக்கு பயன்படுத்தி உள்ளனர். ஆரம்ப கட்ட முடிவுகள் பயனளிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் பரிசோதனை நடக்கிறது. இதுபோக, ஜப்பானின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டகேடா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனமும் இந்த சிகிச்சை முறையை பரிசோதிக்க தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நியூயார்க் நகரில் சோதனை மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் அவசர நிலைமைக்கான உயர்நிலை வல்லுனர் மைக் ரியான் கூறுகையில், “கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளுக்கு சாத்தியமான சிகிச்சையாக பிளாஸ்மா மாற்று சிகிச்சை மிகவும் முக்கியமான பகுதியாகும். சரியான நேரத்தில் இந்த சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில், இது வைரசுக்கு எதிராக புதிய நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு, தேவையான நேரத்தில் உந்துதலை கொடுக்கிறது. ஆனால், கவனம் மிகவும் அவசியமாகும். எப்போதும், இம்முறை வெற்றிகரமாக இருப்பது இல்லை” எனக் குறிப்பிடுகிறார்.

நியூயார்க்கில் இந்த சோதனையில் இறங்கியுள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையின் மூத்த டாக்டர் டேவிட் எல். ரீச் பேசுகையில், “இந்த சிகிச்சை முறையை பரிசோதனை செய்யாமல், எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிவது விஞ்ஞான ரீதியாக கடினமாகும். இம்முறை இருட்டை நோக்கி சுடுவது கிடையாது. பரிசோதனை செய்யப்படவில்லை. நோயினால் மிதமான தாக்கம் கொண்டவர்கள் மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த சோதனை, சிகிச்சை முறையை செயல்படுத்த முயற்சி செய்யப்படும். ஆனால், நோயின் தாக்கம் தீவிரமாக கொண்டவர்களுக்கு கிடையாது. சரியான நேரத்தில் சரியான நோயாளிகள் சிகிச்சையை பெற வேண்டும் என்பது இதனுடைய யோசனையாகும். ஆனால், இது சோதனைக்குரியது” என கூறியுள்ளார்.

அமெரிக்காவில் நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பலரும் தங்களுடைய ரத்த பிளாஸ்மாக்களை தர முன்வந்துள்ளனர். டாக்டர்களும், யாரிடம் பெறலாம் என்ற முதல் கட்ட ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். விரைவில், அங்கு பிளாஸ்மா சிகிச்சை பயன்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 லட்சத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 லட்சத்தை தாண்டியுள்ளது.
2. அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது.
3. கேரளாவில் இன்று 67-பேருக்கு கொரோனா தொற்று உறுதி- முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் இன்று மேலும் 47-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
4. ஜூன் 6-க்கு பிறகு நடு இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும் -ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
சர்வதேச சிறப்பு விமானங்களில் ஜூன் 6-க்கு பிறகு நடு இருக்கைகளை காலியாக வைத்து இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
5. கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா
கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.