கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்மணியின் தூக்கமில்லா இரவுகள்..


கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்மணியின் தூக்கமில்லா இரவுகள்..
x
தினத்தந்தி 6 Sep 2020 2:21 PM GMT (Updated: 6 Sep 2020 2:23 PM GMT)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் தடுப்பூசி பரிசோதனைக்கு வனிதா வினோத் என்ற பத்திரிகையாளர் தன்னை உட்படுத்தியிருக்கிறார்.

உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கான தடுப்பூசிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அதனை பல்வேறு கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்துகொண்டிருக்கிறார்கள். அதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் தடுப்பூசி பரிசோதனைக்கு வனிதா வினோத் என்ற பத்திரிகையாளர் தன்னை உட்படுத்தியிருக்கிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட அவர், துபாயில் இருந்து தனது பணிகளை கவனித்து வருகிறார். பரிசோதனைக்காக தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர், அதற்கு பின்பு தனக்கு மனதளவில் ஏற்பட்ட தாக்கங்களையும், தூக்கமில்லாமல் தவித்த இரவுகளையும் பற்றி விளக்குகிறார்!

“புதிதாக தயாரிக்கும் தடுப்பூசிகளை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்படுவதை பற்றி நான் முன்பே படித்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனால் நானே அது போன்ற பரிசோதனைக்கு என்னை உட்படுத்திக்கொள்வேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. மனசாட்சிக்கு சரி என்று பட்டதாலும், இதை மனித சமூகத்திற்கு செய்யவேண்டிய கடமையாக கருதியதாலும் என்னையும் இதில் ஈடுபடுத்திக்கொள்ள முன்வந்தேன்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவிய அந்த நாட்கள் மிக கொடுமையானவை. என் நண்பர்களும், தெரிந்தவர்களும் அதனால் பாதிக்கப்பட்டார்கள். சிலர் மரணமடையவும் செய்தார்கள். இரண்டு மாதங்களாக எல்லோரும் அறைக்குள் அடைபட்டுக்கிடந்தோம். அந்த நாட்கள் மிகுந்த மனஅழுத்தம் நிறைந்தவை. பாதிக்கப்பட்ட பலரும் பலவிதமாக என்னிடம் உதவியை நாடினார்கள். ‘வந்தே பாரதம்’ திட்டத்தில் பலர் ஊர்வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இப்போதும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

அபுதாபியில் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கும் பரிசோதனை தொடங்கியபோதிலிருந்து அது பற்றிய செய்திகளை நான் உற்றுக்கவனித்துக்கொண்டிருந்தேன். நோய் எதுவும் இல்லாத 18 முதல் 60 வயது வரை உள்ளவர்களை தடுப்பூசி பரிசோதனைக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்று கேள்விப்பட்டேன். ஷார்ஜாவில் நடக்கும் பரிசோதனையில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடிவுசெய்து, இணையதளம் வழியாக பதிவு செய்ய விரும்பினேன். அது நடக்கவில்லை. பின்பு கடந்த ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி நேரடியாக சென்றேன். அங்கு பதிவுசெய்ய முடியாத அளவுக்கு கூட்டம் இருந்தது.

மறுநாள் காலையிலே எழுந்து என் மகளுக்கும், அம்மாவுக்கும் தேவையான உணவுகளை தயார்செய்துவைத்துவிட்டு கணவருடன் அங்கு சென்றேன். அந்த பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் மூலம் எந்த மாதிரியான அனுபவம் எனக்கு கிடைத்தாலும் அதை வாழ்க்கைப்பாடமாக ஏற்றுக்கொள்ள தயாரானேன். ஆனால் பதிவு செய்த அந்த நாளிலே முதல் டோஸ் மருந்துக்கான ஊசியை போட்டுக்கொள்ளவேண்டும் என்பதை அறிந்ததும் சற்று அதிர்ச்சியடைந்தேன்.

ஷார்ஜாவில் உள்ள அல்கரே ஆரோக்கிய மையத்தில் எனக்கு தடுப்பூசி போட தயாரானார்கள். அங்கு பெருமளவு மலையாளிகள் வேலைபார்த்தார்கள். அவர்கள் என்னிடம், நன்றாக யோசித்துதானே இந்த முடிவினை எடுத்திருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள்.

முதலில் பலமுறை எனக்கு ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்தார்கள். பின்பு உயரம், எடை போன்றவற்றை குறித்துக்கொண்டார்கள். மும்பையை பூர்வீகமாகக்கொண்ட டாக்டர் சுல்பிகர் எனக்கு ஆலோசகராக இருந்தார். பெண்கள் என்றால் கர்ப்பமாக இருக்கிறோமா என்ற பரிசோதனையும் தேவைப்பட்டது. ஏன்என்றால் கர்ப்பிணிகளை பரிசோதனைக்கு ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். என்னை பலவிதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, பதிவு செய்துகொண்டார்கள்.

முதலில் எனக்கு முக்கியமான ஆலோசனைகளை வழங்கிவிட்டு, நிறுத்திவிடாமல் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றார்கள். பின்பு நான் பரிசோதனைக்கு உடன்படுவதாக சம்மதம் தெரிவிக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டுக்கொடுத்தேன். கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் அந்த பணிகள் நடந்தன. கேரளாவை சேர்ந்த இரண்டு நர்சுகள் என் அருகில் இருந்தார்கள். மிகப்பெரிய கடமை ஒன்றை மனித சமூகத்திற்காக செய்யப்போகிறேன் என்று நினைத்தபோது என் சுவாசத்திலே மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தேன். நர்சுகள் இருவரும் எனது இடதுபக்கமும், வலது பக்கமும் நின்றுகொண்டார்கள். நான் கண்களை மூடித்திறப்பதற்குள் எனது இடது கையின் மேல் பகுதியில் ஊசி மருந்து இறங்கியது.

அன்றிலிருந்து அடுத்த சில நாட்கள் நான் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டேன். ஒருசில நாட்கள் தூக்கமின்மை இருந்தது. முதல் 7 நாட்கள் அவர்கள் என்னிடம் கொடுத்து அனுப்பிய டைரியில் உடல்வெப்பம், சுவாச அளவு மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்களை எல்லாம் குறிப்பிடச்சொன்னார்கள். அடிக்கடி அவர்கள் டெலிபோன் மூலம் என்னிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.

21-ம் நாள் இரண்டாம் கட்ட ஊசியை செலுத்தினார்கள். 35-வது நாள் டாக்டரை சந்திக்கவேண்டும். 49-ம் நாள் வரை இது தொடர்பான செயல்பாடுகள் நடக்கும். அதற்குள் என் உடலில் ஏதாவது மாற்றங்கள் தென்பட்டால் டாக்டர்களுடன் ஹாட்லைன் போனில் தொடர்புகொள்ளவோ, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கோ செல்லவேண்டும். 12 மாதங்கள் அவர்களது பரிசோதனை நடவடிக்கைகள் தொடரும். அந்த தடுப்பூசி மனித உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய உலகமே ஆவலாக இருந்துகொண்டிருக்கிறது.

இந்த பரிசோதனை ஊசியை செலுத்திக்கொண்ட பின்பு வேலைக்கு செல்லலாமா? வேறு ஏதாவது மருந்துகள் சாப்பிட வேண்டுமா? உணவுக்கட்டுப்பாடு உண்டுமா? தலையை மொட்டையடிக்க வேண்டுமா? என்றெல்லாம் என்னிடம் பலர் சந்தேகம் கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம் செல்பி எடுத்து அனுப்பி, நான் ஆரோக்கியமாக இருப்பதை உணர்த்திக்கொண்டிருக்கிறேன்.

ஊசி போட்டுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான அனுபவங்கள் கிடைக்கலாம். ஆனால் எனக்கு எந்த ஆரோக்கிய பிரச்சினையையும் ஏற்படவில்லை. எனக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் ஆத்மதிருப்தியும் ஏற்பட்டிருக்கிறது. நமது உடலை வலுவாக்குவதில் மனதுக்கு பெரும்பங்கு உண்டு. நாம் மனம் திறந்து பேச நிறைய நண்பர்கள் தேவை. அதுவும் நமது ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும்” என்கிறார், வனிதா வினோத்.

இவரது செயல் மனித சமூகத்திற்கு பலனுள்ளது!

Next Story