பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு: பழைய புண்ணை கிளறாத அரசியல் கட்சிகள் - துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பாராட்டு


பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு: பழைய புண்ணை கிளறாத அரசியல் கட்சிகள் - துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பாராட்டு
x
தினத்தந்தி 15 Oct 2020 11:30 PM GMT (Updated: 15 Oct 2020 9:57 PM GMT)

பாபர் மசூதி வழக்கு தீர்ப்பையொட்டி ஆறும் புண்ணை கிளறி அரசியல் செய்ய மறுத்த கட்சிகளுக்கு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.


பாபர் மசூதி வழக்கு தீர்ப்பையொட்டி ஆறும் புண்ணை கிளறி அரசியல் செய்ய மறுத்த கட்சிகளுக்கு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியிருப்பதாவது:-

1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி திட்டமிடப்பட்டு இடிக்கப்படவில்லை என்று சி.பி.ஐ.யின் சிறப்பு நீதிமன்றம் 30.9.2020-ல் தீர்ப்பளித்தது. “பாபர் மசூதி இடிப்பு திட்டமிடப்பட்டதல்ல; செய்தவர்கள் சமூக விரோதிகள்; குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களைத் தடுத்தார்கள்; சி.பி.ஐ. சமர்ப்பித்த ஆடியோ- வீடியோக்கள் நம்ப தகுந்தவையாக இல்லை; அவை போலியும் கூட; நிச்சயமாக அதில் கிரிமினல் சதி இல்லை”- என்று தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம். 351 சாட்சிகளை விசாரித்து, 2,000 பக்கங்களில் எழுதப்பட்ட நீளமான அந்த தீர்ப்பைப் படிக்காமலேயே கடுமையாக விமர்சனங்கள் செய்து முடித்த பெருமை - நமது பத்திரிகைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், தி.மு.க. மற்றும் சில அறிவு ஜீவிகள் ஆகியவர்களை சாரும். ‘திட்டமிட்ட சதி இல்லை என்ற முடிவு சரியா- இல்லையா’ என்பது பற்றியும், சமாஜ்வாடி அரசு நியமித்த நீதிபதியை அவரது பதவிக்காலம் முடிந்த பிறகும், பதவியில் தொடர வைத்து தீர்ப்பளிக்க வைத்தது உச்சநீதிமன்றம் என்கிற விஷயங்களையும் இங்கு விளக்க வேண்டியது நம் கடமை.

‘சதி இல்லை’ என்று கூறியது காங்கிரஸ் அரசு

1992-ல் பதிவு செய்த வழக்கில், திட்டமிட்ட சதி இருந்ததாக முதலில் கூறப்படவேயில்லை. அது எதிர்பாராமல் நடந்தது என்பதே, அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசின் முடிவாக கூட இருந்தது. பாபர் மசூதியை யாரும் சதி செய்து இடிக்கவில்லை என்று, அப்போதைய மத்திய உள்துறை மந்திரி எஸ்பி.சவாண்தான் கூறினார். ‘திட்டமிட்டு செய்யப்பட்டது என்று பிரதமர் கூறவே இல்லை, ‘இருக்கலாம்’ என்று அவர் கூறியதை பத்திரிகைகள் திரித்துக் கூறுகின்றன’ என்று அடித்துக் கூறினார் அவர். (பயனியர் : 3.1.1993)

இரண்டு மாதங்களுக்கு பிறகு (பிப். 1993) மசூதி இடிப்பு பற்றி அரசாங்கம் வெளியிட்ட வெள்ளை அறிக்கை, சதி பற்றி மூச்சுக்கூட விடவில்லை. இடிக்கப்பட்டது மசூதி என்று கூடக் கூறாமல், ‘விவாதத்துக்குரிய கட்டிடம்’ என்று கூறியது அது. அத்வானி மற்றும் முக்கிய பா.ஜ.க., விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் சதி செய்ததாக முதலில், முதல் தகவல் அறிக்கை கூடப் பதிவு செய்யப்படவில்லை. 10 மாதங்களுக்கு பிறகு, அரசியல் காரணங்களுக்காக அத்வானி, பால் தாக்கரே போன்ற தலைவர்களை வழக்கில் சிக்க வைக்க, தனது (அக். 1993) குற்றப்பத்திரிகையில் ‘சதி நடந்தது’ என்று கூறியது சி.பி.ஐ., அந்த குற்றச்சாட்டை - முதலில் 2005-லும், இறுதியாக 2011-லும் - அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து சி.பி.ஐ. போட்ட மனுவை ஏற்று, சதிக்குற்றத்தையும் சேர்த்து விசாரிக்கும்படி 2017-ல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. வழக்கு விசாரணையை 21.8.2020-க்குள் முடிக்கும்படியும் கூறியது. அந்த உத்தரவின் அடிப்படையில்தான் தற்போது தீர்ப்பு வந்திருக்கிறது. இப்போது நீதிபதி அளித்த தீர்ப்பு இருமுறை அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை ஒட்டித்தான் இருக்கிறது.

உச்சநீதிமன்றம் நீட்டித்த நீதிபதி

வழக்கை விசாரித்து முடிவு கூறிய நீதிபதி, 2015-ல் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அரசால் நியமிக்கப்பட்ட எஸ்.கே.யாதவ். சென்ற ஆண்டு (2019 செப்.30) பதவிக்காலம் முடிந்த அவரை பதவியில் நீட்டிக்க வைத்து, பா.ஜ.க. தலைமையிலான உ.பி. அரசு தனக்கு வேண்டிய யாரையும் அவர் இடத்தில் நியமித்துவிடாமல் தடுத்து, வழக்கை விசாரிக்க வைத்தது உச்சநீதிமன்றம். ஆக, தீர்ப்பளித்த நீதிபதி இப்போதைய உ.பி. அரசினாலோ, மத்திய அரசினாலோ நியமிக்கப்பட்டவர் இல்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய உண்மை.

சுலபமாக சந்தேகம் ஏற்படக்கூடிய, உணர்வுப்பூர்வமான இந்த வழக்கில் வந்த தீர்ப்பு பற்றி விமர்சனத்தில் இந்த முக்கியமான உண்மையை மறைத்து, அதற்கு மாறாக, ஊடகங்கள், உ.பி. பா.ஜ.க. அரசு நியமித்த நீதிபதியே முடிவு கூறியதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது துர்பாக்கியம்.

பழைய புண்ணை கிளறாத கட்சிகள்

1980-கள் தொடங்கி ராமர் கோவில் இயக்கத்தை கண்மூடித்தனமாக எதிர்த்து வந்த காங்கிரஸ், வலது-இடது கம்யூனிஸ்டுகள், தி.மு.க. நீங்கலாக, 1992-ல் நடந்ததை கடுமையாக கண்டனம் செய்த வேறு எந்தக்கட்சியும் இப்போது வந்த தீர்ப்பில் குறைகாணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி நடத்தும் சிவசேனா தீர்ப்பை ஆதரித்திருக்கிறது. சரத்பவார் (தேசியவாதக் காங்கிரஸ்) கட்சி ‘தீர்ப்பை மதிக்கிறோம்’ என்று கூறியிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் (மம்தா) கட்சி ‘தீர்ப்பை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இல்லை’ என்கிறது. குறிப்பாக உ.பி.யில் (முஸ்லிம் வாக்குகளுக்குப் போட்டியிடும்) முக்கிய எதிர்க்கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் தீர்ப்பு பற்றிக் கருத்துக்கூறவே இல்லை. தெலுங்கு தேசம் கட்சி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், டி.ஆர்.எஸ்., பிஜு ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம், அ.தி.மு.க., பா.ம.க. உள்பட எந்தக்கட்சியும் தீர்ப்பு பற்றி கருத்துக்கூறவில்லை. இதை வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டிய ஊடகங்கள் மாறாக இதை மறைத்திருக்கின்றன.

இந்தக்கட்சிகள் 1992-ல் எடுத்த நிலைக்கும், இப்போது அவர்கள் எடுத்திருக்கும் நிலைக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. இப்போது அவை இந்த தீர்ப்பை ஏற்றதும், எதிர்த்து கூறாததும், அன்று நடந்ததை அவர்கள் எதிர்த்தது தவறு என்பதால் அல்ல. அன்றைய சூழ்நிலையில் அது தவறு என்று அவர்கள் கூறியது, முற்றிலும் சரியே. அதை, துர்பாக்கியமானது என்று வாஜ்பாய் கூட கூறினார். துக்ளக் கருப்பு அட்டை போட்டு தன் எதிர்ப்பைத் தெரிவித்தது.

ஆனால், இன்று நிலைமை மாறியிருக்கிறது. அன்று கூறியதை இன்றும் கூறுவது பொருத்தமோ, விவேகமோ அல்ல. காரணம், நூறாண்டுகளா தொடர்ந்த அயோத்தி பிரச்சினை (சோம்நாத் கோவில் போன்று ) உறுதியாகத் தீர்க்கப்படாததால், நிகழ்ந்த கசப்பான நிகழ்வுக்குப்பிறகு, உச்சநீதிமன்றம் ராமர்கோவில் கட்டுவதை ஒருமனதாக அனுமதித்து, அதை முஸ்லிம்களும் ஏற்று, பின் உருவாகி வரும் சுமுகமான நிலையில், ஆறும் புண்ணை கீறி அரசியல் செய்ய மறுத்திருக்கின்றன இந்தக்கட்சிகள். அதை நாம் பாராட்டுகிறோம். அந்த முன் உதாரணத்தை, தீர்ப்பைப் படிக்காமலேயே விமர்சனம் செய்த காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க., மதச்சார்பற்ற பத்திரிகைகள், அறிவுஜீவிகள் எல்லோரும் பின்பற்றி நடந்தால், நாட்டில் வகுப்புவாதம் பரவுவது நின்று, உண்மையான மதச்சார்பின்மை நிலவ இது வகை செய்யும்.


Next Story