`ஆன்லைன்' ஆபத்து அச்சத்தில் பெண்கள்


`ஆன்லைன் ஆபத்து அச்சத்தில் பெண்கள்
x
தினத்தந்தி 1 March 2021 3:13 PM GMT (Updated: 1 March 2021 3:13 PM GMT)

வீடுகள் தோறும் சிறுமிகள் ஐந்து மணி நேரம் வரை `ஆன்லைன்' வகுப்புகளில் மூழ்கியிருக்கிறார்கள். அம்மாவோ, அப்பாவோ குறைந்தது எட்டு மணி நேரம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி உலகமே இணையதளத்தில் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எல்லாம் சரிதான்! ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு இணையதளத்தில் இருக்கும் ஆபத்துகள் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?

தங்களது குழந்தைகளுக்கு, நேரடியாக நடக்கும் பாலியல் வன்முறைகள் பற்றி எல்லா அம்மாக்களும் ஓரளவு தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால் இணையதள டிஜிட்டல் பிளாட்பாமில் பாலியல் வன்முறையாளர்கள் சிறுமிகளை எப்படி அணுகி வசீகரிக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அது பற்றி இந்தியாவில் பெரிய அளவில் விவாதங்களும் நடத்தப் படுவதில்லை. ஆனால் உலக அளவில் இது மிக முக்கியமான பிரச்சினையாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் `சைல்டு க்ரூமிங்' (child grooming) என்பது அதிகம் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

சைல்டு க்ரூமிங் என்றால் என்ன?
சிறுமிகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பாலியல்ரீதியாக வக்கிரமாக பயன்படுத்தும் எண்ணத்தோடு அணுகுகிறவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இதில் குழந்தைகளிடம் வக்கிரத்தை அரங்கேற்றுகிறவர்களும், அவர் களது அறியாமையை பயன்படுத்தி தங்கள் ஆசையை தீர்த்துக்கொள்கிறவர்களும் இரைதேடும் வல்லூறுகள் போல் செயல்படுகிறார்கள். அவர்கள் மிகுந்த 
புத்திசாலித்தனமாக களமிறங்குகிறார்கள். முதலில் குழந்தைகளிடமும், பின்பு அவர்களது குடும்பத்தினரிடமும் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்துகொள்கிறார்கள். நம்பிக்கையை பெற்ற பின்புதான் அவர்கள் மனதில் இருக்கும் கொடூர எண்ணங்கள் வெளிப்பட தொடங்கும். தங்கள் வக்கிர எண்ணத்திற்கு இசையும் அளவுக்கு குழந்தைகளை அவர்கள் வசப்படுத்தும் விதத்தைதான் `க்ரூமிங்' என்கிறார்கள்.

குழந்தைகள் எங்கெல்லாம் அதிகமாக புழங்குகிறார்களோ அங்கெல்லாம் பாலியல் வன்முறையாளர்கள் தங்கள் கைவரிசையை காட்டுவார்கள். கொரோனாவுக்கு பிறகு இன்டர்நெட்டிலும், ஆன்லைன் பிளாட்பாம்களிலும் குழந்தைகள் குவிந்ததால் அந்த கட்டமைப்புகளை நோக்கி அவர்கள் இரை தேடிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் முகத்தை காட்டாமலே ஆன்லைனில் இரை பிடிப்பது அவர்களுக்கு பாதுகாப்பாக அமைந்து விடுகிறது. இந்த ஆன்லைன் குற்றவாளிகள் எந்த வயதாக இருந்தாலும், எந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களை இரையாக்க முயற்சிக்கிறார்கள். பள்ளிகள், மத அமைப்புகளை சேர்ந்த குழந்தை களையும் `க்ரூமிங்' செய்கிறார்கள். தங்களது எல்லாவிதமான விருப்பங்களுக்கும் உடன்படும் அளவுக்கு குழந்தைகளை வளைத்தெடுப்பார்கள். அதை குழந்தைகளால் உணர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு உணர்வுபூர்வமாக செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

அதற்காக நண்பர், ஆலோசகர், உறவினர், குரு, பயிற்சியாளர் போன்ற எந்த வேட மணியவும் அவர்கள் தயாராவார்கள். தேவைப்பட்டால் காதலர் என்ற போர்வையிலும் களம்காண்பார்கள். சில மாதங்களிலே இவர்களது அத்தனை விருப்பங் களையும் நிறைவேற்றும் அளவுக்கு குழந்தைகளை மூளைச் சலவை செய்துவிடுவார்கள். தங்களுடனான உறவை ரகசியமாக வைத்திருக்க 
வலியுறுத்துவார்கள். அதற்காக கொலை மிரட்டல் விடுக்கவும் தயங்க மாட்டார்கள். ஒருகட்டத்தில் அவர்களுடனான உறவை தொடருவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்ற நிலையை உருவாக்கிவிடுவார்கள்.

குழந்தைகளை க்ரூமிங் செய்வதில் அவர்கள் அவசரம் காட்டுவதில்லை. பல மாதங்களாக நிதானித்து படிப்படியாக அதனை செய்கிறார்கள். பல்வேறு ஆன்லைன் பிளாட்பாம்களில் அவர்கள் உலா வருகிறார்கள். சோஷியல் மீடியா, பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்ஆப் போன்ற இன்டர்நெட் மெசேஜிங் ஆப்கள் மற்றும் ஆன்லைன் கேம் போன்றவைகளில் பொழுதைக் கழிக்கும் சிறுமிகளுக்கு அவர்கள் வலைவீசுகிறார்கள். அந்த சிறுமிகளின் விருப்பங்கள், செயல்பாடுகள், எதிர்பார்ப்புகள் போன்றவைகளை தொடர்ந்து கண்காணித்து, கிரிமினல்கள் அவர்களை அணுகுகிறார்கள். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு 
மேற்பட்டவர்களை குறிவைக்கவும் செய்வார்கள். முதலில் அவர்கள் சிறுமிகளின் பிரச்சினைகளை கேட்டறிவார்கள். பின்பு உதவி செய்ய முன்வருவார்கள். இதுதான் பெரும்பாலும் அவர்களது தொடக்க கால நடவடிக்கையாக இருக்கும்.

சிறுமிகளின் நம்பிக்கையை பெறுவதே அவர்களது முதல் நோக்கம். தங்களது நம்பிக்கைக்குரியவர் களாக அவர்களை கருத தொடங்கியதும், சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் சொல்லத் தயங்கும் ரகசியங்களைகூட அவர்களிடம் பகிர்ந்து விடுவார்கள். காலப்போக்கில் சிலர் அந்த சிறுமிகளை போதைப் பொருள் பழக்கத்திற்கு உட்படுத்துவார்கள். மிரட்டியோ அல்லது விரும்பிய பரிசுகளை வழங்கியோ தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார்கள். பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட வைப்பது அல்லது தங்கள் விரும்பிய காரியங்களை செய்ய தூண்டுவது அந்த கிரிமினல்களின் அடுத்தகட்ட செயலாக இருக்கும்.

அவர்கள் தங்கள் பாலியல் தேவைகளுக்கு மட்டும் குழந்தைகளை பயன்படுத்துவதில்லை. குழந்தைகளை பயன்படுத்தி ஆபாச வீடியோக்களை தயாரிப்பது, பாலியல் செயல்பாடுகளுக்காக கடத்துவது, பாலியல் செயல்களில் ஈடுபடுத்துவது போன்றவைகளையும் செய்கிறார்கள். இன்றைய டிஜிட்டல் உலகில் `சைபர்- செக்ஸ் டிராபிக்கிங்' என்ற குற்றச்செயல் புதிதாக உருவாகியிருக்கிறது. க்ரூமிங் செய்யப்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தி, அதனை படம்பிடித்து இணைய தளத்திலோ, இதர டிஜிட்டல் முறைகளிலோ வெளிக்கொண்டு வந்து காட்சிப்படுத்தி பணம் சம்பாதிப்பது இந்த கிரிமினல்களின் நடைமுறையாகும். பணம் மட்டுமே இவர்களது நோக்கமாக இருக்கும். உலகம் முழுவதும் இத்தகைய வீடியோக்களை பார்ப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மையாகும். இவர்களிடம் சிக்கிக்கொள்ளும் சிறுமிகள் உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கர்ப்பம், பாலியல் தொடர்புடைய நோய்கள், குற்றஉணர்ச்சி, அதிக பதற்றம், போதைப் பொருட்கள் பயன்பாடு, மனஅழுத்தம், தற்கொலை எண்ணம், எதிர்காலத்தை பற்றிய பயம் போன்றவைகள் பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு ஏற்படலாம்.

இன்றைய சூழலில் இன்டர்நெட் உபயோகத்தில் இருந்து சிறுமிகளை விலக்க முடியாது. ஆனால் ஆன்லைனில் பாதுகாப்பாக செயல்படுவதற்கு தேவையான பயிற்சியையும், வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு வழங்கலாம். குழந்தைகள் எந்த விதமான ஆன்லைன் பிளாட்பாம்களில் இயங்குகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்திருக்கவேண்டும். முதிர்ந்தவர்கள் யாருடனாவது பழகுவதாக அறிந்தால் அதில் கவனம் செலுத்தி கண்காணிக்கவேண்டும். கிரிமினல்கள் `நடப்பது எதையும் பெற்றோரிடம் கூறக்கூடாது' என்று கூறியே க்ரூமிங் செய்வதால், பாதிக்கப்படும் சிறுமிகள் பெரும்பாலும் 
வாய்திறப்பதில்லை என்பதை பெற்றோர் புரிந்துகொள்ளவேண்டும். இந்த விஷயத்தில் சிறுமிகளை குறைசொல்லி குற்றவாளியாக்காமல், அதில் இருந்து அவர்களை மீட்கவே பெற்றோர் முன்வரவேண்டும்.

க்ரூமிங் செய்யப்பட்டு, மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமிகளிடம் காணப்படும் அறிகுறிகள்:

- பயம், பதற்றம், உறக்கமின்மை, விரக்தி, எரிச்சல் மற்றும் எல்லாவற்றையும் எதிர்த்தல்.

- விளையாட்டு மற்றும் பாடத்தில் திடீர் விருப்பக்குறைவு ஏற்படுதல்.

- இன்டர்நெட் மற்றும் இதர டிஜிட்டல் டிவைஸ்களின் பயன்பாட்டை திடீரென்று குறைத்தல் அல்லது அதிகரித்தல்.

- வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இன்டர்நெட், போன் மற்றும் இதர டிவைஸ்களை பயன்படுத்துதல்.

- தன்னைவிட முதிர்ந்தவரிடம் நட்பு பாராட்டுதல். ரகசிய முறையிலான பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளுதல்.

- பொய் சொல்லிவிட்டு வெளியே செல்லுதல், இருக்கும் இடத்தை அறிவிக்காமல் திடீரென்று மறைந்துவிடுவது, சந்தித்தது யாரை? சென்றது எங்கே? என்பதை எல்லாம் மறைப்பது.

- சாக்லெட் முதல் செல்போன் வரை பல்வேறு வகையான பரிசுகள் அவ்வப்போது புழங்குவது.

- வயதுக்கு மீறி பாலியல் ரீதியான செயல்பாடுகளை வெளிப் படுத்துவது, அதை பற்றி அதிகமாக பேசுவது.

- மதுவோ, போதைப் பொருட்களோ பயன்படுத்துவது.

.. இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கவனியுங்கள். அவர்களுக்கு தேவையான நம்பிக்கையை அளித்து, மனநல ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

கிரிமினல்கள், யாரை எல்லாம் எளிதாக க்ரூமிங் செய்து தன்வசப்படுத்துவார்கள் என்பது தெரியுமா?

சிறுமிகள் மட்டுமல்ல இளம்பெண்களும் க்ரூமிங் செய்யப்படலாம். புறக்கணிக்கப்படும் சிறுமிகள், சண்டையிடும் பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் போன்றோர் எளிதாக இவர் களது வலையில் சிக்கிக் கொள்வார்கள். வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்க விரும்பும் பெண்களும், விலை உயர்ந்த பரிசுப் பொருட்களுக்கு அதிகமாக ஆசைப்படும் சிறுமிகளும் இவர்களது வசீகரிப்பு வலையில் வீழ்ந்துவிடுகிறார்களாம்.

இன்றைய சூழலில் இன்டர்நெட் உபயோகத்தில் இருந்து சிறுமிகளை விலக்க முடியாது. ஆனால் ஆன்லைனில் பாதுகாப்பாக செயல்படுவதற்கு தேவையான பயிற்சியையும், வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு வழங்கலாம்.

Next Story